Header Ads



தகவல் தொழில்நுட்ப அறிவுடன்கூடிய இளைய தலைமுறையை கட்டியெழுப்புவது அவசியம்

சர்வதேச நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடக்கூடிய தகவல் தொழில்நுட்ப அறிவுடன்கூடிய இளைய தலைமுறையைக் கட்டியெழுப்புவதன் ஊடாகவே இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ள முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின்போதே ஜனாதிபதி இந்த கருத்தினை கூறினார்.

ஆயிரம் இடைநிலை பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கும், போதனை ஆய்வு டிப்ளோமாதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

சர்வதேசத்துடன் இணைந்து முன்னோக்கிச் செல்லும்போது, தகவல் தொழில்நுட்ப அறிவின் அவசியம் குறித்தும் இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப அறிவு 5 வீதமாக காணப்பட்டதோடு, தற்போது 35 முதல் 40 வீதமாக தொழில்நுட்ப அறிவு காணப்படுவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் இதனை 70 வீதமாக உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்காகவுள்ளது.

ஆசிரியர் தொழிலின் கௌரவத்தைப் பாதுகாப்பதன் மூலம் ஒழுக்கமான சிறந்த சந்ததியினரை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென ஜனாதிபதி இதன்போது கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.