Header Ads



இலங்கையிலும் ஹிட்லர்கள் - தமர அமில தேரர் அடையாளம் காட்டுகிறார்


AD T

தற்போதைய அரசாங்கத்தின் ஏகாதிபத்திய பயணம் தொடர்பில் தேவைக்கு அதிகமான அளவு உதாரணங்களை கூற முடியும் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் பிரதித் தலைவர் தமர அமில தேரர் தெரிவித்துள்ளார். ஹிட்லரையும் விஞ்சும் அளவுக்கு நாட்டில் தற்போதை ஹிட்லர்கள் செயலாற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய நூலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி நிர்மால் ரங்ஜித் தேவசிறிக்கு காணப்படும் மரண அச்சுறுத்தல் குறித்து தெளிவுபடுத்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அச்சுறுத்தல் விரிவுரையாளர் ஒருவருக்கோ அல்லது சாதாரண பிரஜைக்கோ விடுக்கப்பட்டுள்ள ஒன்றென பாராது சமூகம் என்ற அடிப்படையில் அனைவரும் எதிர்கொண்டுள்ள ஜனநாயக சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல் என பார்ப்பதாக தமர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிணங்களை தொட்டுவிட்டுச் செல்லவோ வெள்ளைக் கொடி பறக்கவிடவோ இனியும் இடமளிக்காது அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேரர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தால் மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை குழப்பவும் சம்பந்தப்பட்ட நபர்களை பயமுறுத்தவுமே இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக தமர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தனியே சம்பளப் பிரச்சினை மாத்திரம் வலியுறுத்துவது தமது தொழிற்சங்க நடவடிக்கையின் நோக்கம் அல்ல எனவும் முழு சுதந்திர கல்வி, ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கான ஒருகட்ட நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் வெள்ளை வானை அனுப்பி, அவதூறு பரப்பி, பயமுறுத்தி நாட்டின் தேவைக்காக மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கையை தடுக்க முடியாது என தமர அமில தேரர் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.
 

No comments

Powered by Blogger.