சரித்திரத்தில் நமக்காக ஒருபக்கம் நிச்சயம் காத்திருக்கும்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி அண்ணாநகர் எஸ்பிஓஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது,
இன்றைய இளைஞர்கள் எதிர்காலத்தை பற்றி அச்சப்பட தேவையில்லை. பிரபல விஞ்ஞானிகள் தாமஸ் ஆல்வா எடிசன், ரைட் சகோதரர்கள், கிரகாம் பெல், சர்.சி.வி.ராமன், மேடம் கியூரி போல நீங்களும் சாதிக்கலாம். நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்களை நேரில் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொருவருமே தனித்தன்மையுடன் விளங்குகின்றனர். அதில் நீங்களும் ஒருவர். ஆனால் உங்களை சாதாரண மனிதனாக ஆக்கிவிட உங்களை சுற்றியுள்ள ஒவ்வொருவரும் காரணமாக இருக்கின்றனர். எல்லோருமே யாரையாவது உதாரணமாக சொல்லி அவர் போல ஆக வேண்டும் என்றே அறிவுரை கூறுகின்றனர்.
ஆனால் உங்கள் தனித்தன்மையை நிரூபிக்க நீங்கள் கடுமையாக போராட வேண்டும். இந்த லட்சியத்தை அடையும் வரை இந்த போராட்டத்தை தொடர வேண்டும். இந்த லட்சியப்பயணத்தில் நீங்கள் நான்கு முக்கிய விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். 20 வயதுக்கு முன்பாகவே வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை வகுத்து கொள்ள வேண்டும். அறிவை வளர்த்துக் கொள்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுங்கள். அந்த லட்சியத்தை அடைய கடினமாக உழையுங்கள். பிரச்னைகளை மனம் தளராமல் நேர்கொண்டு வெற்றியை வசப்படுத்துங்கள்.
இதற்கு கல்வி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நான் நிச்சயம் வெல்வேன் என்று உங்களுக்குள் ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொள்ளுங்கள். இந்த அக்னி சிறகுகள் நிச்சயம் உங்களை டாக்டராக, பொறியாளராக, விஞ்ஞானியாக, ஆசிரியராக உருவாக்கும். 2020ல் இந்தியா உலகின் வல்லரசாக விளங்கும் என்ற எனது கனவு நிச்சயம் நனவாகும். நாம் என்னவாக விரும்புகிறோம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கி உழைத்தால் சரித்திரத்தில் நமக்காக ஒருபக்கம் நிச்சயம் காத்திருக்கும். இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.
மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அப்துல்கலாம் அளித்த பதில்:
கேள்வி: 2020ல் இந்தியா வல்லரசு என்ற விஷயத்தை எதற்காக வரையறுத்தீர்கள்?
பதில்: நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, நாட்டின் தற்போதைய நிலையை கவனித்து வந்தேன். அதை மேம்படுத்த வேண்டும் என்று நான் நினைத்த போது, எனது மனதில் இந்த விஷயம் தோன்றியது.
கேள்வி: இப்போதைய கல்விமுறை 2020ல் இந்தியா வல்லரசு என்பதை அடைய உதவுமா?
பதில்: கட்டாயம் உதவும். பள்ளிகளில் மதிப்பெண்களுக்கான படிப்பை மட்டும் சொல்லி தருவதில்லை. விளையாட்டு உள்ளிட்டவற்றில் உள்ள திறமைகளையும் வெளிக் கொண்டு வருகின்றனர். இது வேலைவாய்ப்புக்கு மட்டுமல்லாமல் சாதனைகள் நிகழ்த்தவும் உதவுகிறது.
கேள்வி: சிறந்த அரசியல்வாதி ஆக என்ன செய்ய வேண்டும்?
பதில்: உயர்ந்த குறிக்கோள், விடாமுயற்சி, தொடர்ச்சியாக அறிவை மேம்படுத்துதல் ஆகியவை இருந்தால் சிறந்த அரசியல்வாதியாக வரலாம்.
இவ்வாறு அப்துல்கலாம் பதிலளித்தார்.
Post a Comment