Header Ads



முஸ்லிம் சமூகத்தின் பேரம்பேசும் கருவியாக வாக்குரிமை



(இன்றைய 22-06-2012 நவமணி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கத்தை இங்கு தருகிறோம்)

  ஜனநாயக உரிமைகளில் முக்கியத்துவம் பெறும் உரிமைகளில் வாக்குரிமையும் பிரதான இடம் பெறுகிறது. இன்று மேற்கத்திய நாடுகளாக கருதப்படும் பல்வேறு நாடுகள் தமது குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கு முன்னரே இலங்கையர்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றிருந்தனர்.

  இதனால் இலங்கை மக்களிடையே அரசியல் ஈடுபாடு, அரசியல் ஆர்வம் உள்ளிட்ட செயற்பாடுகள் அதிகரித்த நிலையில் காணப்பட்டன. இருந்தபோதும் அண்மைகாலத்தில் நடைபெற்ற தேர்தல்களை நாம் நோக்குகைளில் மக்களுக்கு வாக்களிப்பதில் காணப்பட்ட உற்சாகம் குன்றிவிட்டதோ என சிந்திக்கத் தோன்றுகிறது.

 தேர்தல்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இப்போதெல்லாம் நிராகரிக்கப்படும் வாக்குகளின் எணணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தச் செயற்பாடானது ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கையை ஆட்டம்காணச் செய்துள்ளதா என்ற கேள்விகள் மேலோங்கச் செய்துள்ள நிலையில் மறுபுறம் குடிமக்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளதை நாம் சுட்டிக்காட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    உலகில் மிகவும் பெறுமதிமிக்க, விலை மதிப்பிடமுடியாததாக வாக்குரிமை விளங்குகிறது. இந்த வாக்குரிமையை இலங்கையர்களாகிய நாம் பயன்படுத்துவதன் மூலம் எமக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து வருகிறோம். 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் தமக்கான வாக்குரிமையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இந்த உரிமை இலங்கை அரசியலமைப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  ஒவ்வொரு வருடமும் தேர்தல்கள் திணைக்களமானது வாக்காளர் இடாப்புகளை புதுப்பித்து வருகிறது.  இவ்வாறு புதுப்பிக்கப்படும் வாக்காளர் இடாப்புகள் பிரதேச செயலகங்களில் காட்சிக்கும் வைக்கப்படும். இதன்போது வாக்காளர் இடாப்புகளில் பெயர் விடுபட்டவர்கள் தமது பெயர்களை பதிவுசெய்யவும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

  அத்துடன் வெளிநாடுகளில் உள்ளவர்களும் தேர்தல் இடாப்புகளில் தமது பெயரை பதிவுசெய்து கொள்ளவும் தேர்தல்கள் திணைக்களம் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

  தேர்தல்களுடன் தொடர்புடைய அமைப்புக்களான பெப்ரல், தேர்தல்களை கண்காணிப்பதற்கான இயக்கம் மற்றும் கபே போன்ற அமைப்புக்களும் வாக்களிப்பின் அவசியம் குறித்து குடிமக்களிடையே விழப்புணர்வை அதிகரிக்கச்செய்வதில் பஙகாற்றிவருகின்றன.

  இவ்வாறானதொரு நிலையில் முஸ்லிம் சமூகமும் தேர்தல்கள் இடாப்பில் தமது பெயரை பதிவுசெய்து கொள்வதிலும், தேர்தல் இடாப்பில் தமது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்வதிலும் முழுக்கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

  ஜனநாயக நெறிமுறைகளில் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ள இலங்கை முஸ்லிம்கள், ஜனநாயக உரிமைகளில் பிரதானமானதாக கருதப்படும் இந்த வாக்குரிமையை எப்போதும் பாதுகாக்கவேண்டிய முதற்தர பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள்.

  முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு சவால்கள் குறித்து நமது சமூகம் கவலை கொண்டுள்ள தற்காலத்தில் எமது கையில் உள்ள மிகச்சிறந்த ஆயுதம் வாக்குரிமையேயாகும். எமக்குள்ள இந்த வாக்குரிமைதான் இந்நாட்டில் எமக்கான இருப்பையும், சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து எமது நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்கவும் உதவப்போகிறது.

  சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தநாட்டில் அண்மைகாலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளும் தீவிரம் பெற்றுவருகிறது. இவ்வாறான செயற்பாடுகளை மழுங்கடிக்கச் செய்வதற்கும் வாக்குரிமையை நமது முஸ்லிம் சமூகம் ஒரு தற்காப்பு ஆயுதமாகவும், பேரம்பேசும் ஒரு கருவியாகவும் உபயோகிக்கலாம்.

  முஸ்லிம் சமூகம் முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கிய வாக்குகளின் அடிப்படையில்தான் மர்ஹும் அஸ்ரப் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் பேரப்பேச்சில் ஈடுபட்டு முஸ்லிம்களுக்கான பல்கலைக்கழக அனுமதியை ஓரளவு அதிகரிக்கச் செய்வதற்கு துணைநின்றார்.

  இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகமானது நெருக்குவாரங்களுக்குள் சிக்குப்பட்டுள்ளது. எமது கரங்களில் உள்ள இந்த வாக்குகள் நாம் எதிர்கொள்ளும் நெருக்குவாரங்களை குறைத்து, எமது உரிமைகளை நிலைநாட்ட நிச்சயம் துணைநிற்கும்.

  மேலும் அண்மையில் நடைபெற்று முடிந்த சனத்தொகை கணக்கெடுப்புகளின் அடிப்படையிலும்  முஸ்லிம்கள் எணணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே எமது எணணிக்கைக்கு ஏற்ப எமது வாக்கு உரிமையும், எமக்கான மக்கள் பிரதிநிதிகளும் அதிகரிக்கவேண்டிய தேவை உள்ளது.

  இவையெல்லாவற்றுக்கும் முன்னர் நாம் வாக்காளர் பட்டியலில் இடம்பிடிப்பதன் மூலம்தான் எமக்கான வாக்குரிமை உறுதி செய்யப்படும் என்பதை நாம் ஞாபகத்திற்கொள்ள வேண்டும்.

  எமக்கான வாக்குரிமையை நாம் உறுதிசெய்வதற்கு உடனடியாகவே செயலில் குதிக்கவேண்டிய அவசர நிலையில் உள்ளோம். பிரதேச கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச செயலங்களை தொடர்புகொண்டு இதுகுறித்த மேலதிக தகவல்களை நாம் பெற்றுக்கொள்வது சிறந்தது.

  அதேநேரம் நமது சமூகத்தின் காணப்படும் முஸ்லிம் அமைப்புக்கள் வாக்குரிமை குறித்து விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுவது காலத்தின் தேவையாக உள்ளது. 18 வயதை பூர்த்தியடைந்த ஒவ்வொரு தனிநபரினதும் வாக்குரிமை குறித்து இந்த முஸ்லிம் அமைப்புக்கள் கவனம் செலுத்தவேண்டும்.

  அப்போதுதான் எமது முஸ்லிம் சமூகம் வாக்குரிமை என்ற ஆயுதத்தை கையில் ஏந்தியவர்களாக சவால்களை ஜனநயக ரீதியில் சந்திக்கமுடியும் என்பதுடன் பேரம்பேசும் சக்தியையும் அதிகரிக்கச்செய்யவும் முடியும்..!!
  

No comments

Powered by Blogger.