அரசாங்கத்திடமிருந்து முஸ்லிம்களை தூரமாக்க சதி - பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா
TN
போலியான பிரசாரங்களை பரப்பி முஸ்லிம் சமூகத்தை அரசிடமிருந்து தூரமாக்குவதற்கு ஆர்வம் கொண்டவர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல்களினதும், மத்ரஸாக்களினதும் அட்டவணையை இரகசியப் பொலிஸார் தயாரிப்பதில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்த பிரதி அமைச்சர், உண்மை நிலையைத் தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இவ்விடயமாக முஸ்லிம் தலைவர்களும், நிறுவனங்களும் என்னிடம் பிரஸ்தாபித்துள்ளன. முஸ்லிம் மத, கலாசார பணிப்பாளர் வை. எல். எம். நவவி, இந்தச் செய்திகள் எந்தவித ஆதாரமும் அற்றவை என என்னிடம் உறுதி அளித்தார்.
நான் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷவின் கவனத்துக்கும் இவ்விடயத்தைக் கொண்டு வந்தேன். இரகசியப் பொலிஸோ, சட்ட அமுலாக்க முகவர்களோ இவ்வாறு ஒன்றும் செய்யவில்லை என செயலாளர் திட்டவட்டமாக எடுத்துக் கூறினார்.
30 வருட இராணுவ மோதல்களுக்குப் பின் தவறான தகவல்களைப் பரிமாறுவது அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஊறுவிளைவிக்கும் என அவர் தெரிவித்தார். முஸ்லிம்களுக்கும் அரசுக்கும் இடையிலான ஆரோக்கியமான புரிந்துணர்வை குழப்புவதே இந்த முயற்சியாகும்.
முஸ்லிம்கள் ஜனாதிபதியின் செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவ்வாறே பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகளிலும் முஸ்லிம்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக மஸ்ஜித் தர்மகர்த்தாக்கள் தெளிவு பெற வேண்டுமானால், அவர்கள் இதனை எனது கவனத்துக்குக் கொண்டுவந்தால் தகுந்தவர்களுடன் தொடர்பு கொள்ள இயலுமாக இருக்குமென்றும் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா தொடர்ந்தும் கூறியுள்ளார்.
Post a Comment