வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் தடைகளை ஏற்படுத்தாதீர்கள்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறை காட்டாத ஜக்கிய தேசியக் கட்சி தற்போது அவர்களின் மீள்குடியேற்றத்தில் தடை செய்கின்றது என்று வவுனியா மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியம் கவலைத் தெரிவித்து அறிக்கையொன்றினை விடுத்துள்ளது.
வடக்கில் தமது தாயகப் பூமியில் ஆண்டாண்டு காலம் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் சொத்துக்கள் அனைத்தம் அபகரிக்கப்பட்டு உடுத்த உடையுடன்,1990 ஆம் ஆண்டு,வெளியேற்றப்பட்டதை என்றுமே மறந்துவிட முடியாது.சோகமும்,துயரமும் அவலமும் நிறைந்த அகதி முகாம் வாழ்வுக்கு விடை கொடுத்து விட்டு தற்போது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு,நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ள நிலையில்,முஸ்லிம்கள் தமது தாயக பூமியில் மீள்குடியேற செல்கின்ற போது, 20 வருடங்களுக்கு மேலாக சந்தித்த சவால்களை விட, பாரியளவிலான சவால்களை அங்கு அவர்கள் எதிர் நோக்குகின்றனர்.
சமூகங்களுக்கிடையிலான உறவுகளை குழி தோண்டிப் புதைக்கும் குறுகிய சிந்தனையுடன்,வெறும் அரசியலை மாத்திரமே குறிக்கோளாக கொண்ட ஒரு சில தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,இதன் பின்னணியில் இருக்கின்றார்கள்.தற்போது ஜக்கிய தேசிய கட்சியும் அதில் இணைந்து கொண்டிருப்பது முஸ்லிம்கள் விடயத்தில் இது கடைப்பிடித்துவரும்,நயவஞ்சகக் கொள்கையினை அது அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்கள் இழந்த சொத்துக்களையும், காணிகளையும் பெற்றுத தருவதில்,அக்கறை காட்டாதிருந்த ஜக்கிய தேசியக் கட்சி,தற்போது முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் ,இனவிரிசலை தோற்றுவிக்கும் ஒரு சில அரசியல்வாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து சதி செய்கின்றார்கள் என்றெ நாம் நம்புகின்றோம்.
மன்னார் மாவட்ட ஆயர் தொடர்பாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்,வன்னி மாவட்;ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக கூறப்படும்,செய்தி குறித்தே இப்பிரச்சினை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.ஆயர் குறித்து அமைச்சர் தெரிவித்த கூற்றில் ஆயரின் கண்ணியத்தினை பாதிக்கும்படியான எந்தக் கருத்தும் இல்லை. தான் இனம் மதம் பாராமல்,சேவையாற்றுகின்றேன்,தமிழ் மக்களின் மிள்குடியேற்றத்தில் அக்கறைகாட்டி செயற்படுகின்றேன்.எனவே முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும்,இதே அமைப்பில் செயற்படுகின்ற போது,முட்டுக்கட்டைகள் விதிக்காது ஒத்துழைப்ப தாருங்கள்!என்ற அமைப்பில் தான் அமைச்சர் றிசாத் அவர்களின் அந்த உரை இடம் பெற்றிருந்தது.
உண்மை இவ்வாறிருக்க அமைச்சரின் உரை வேண்டுமென்ற திரவுபடத்தப்பட்டு இனமுறுகலைத் தோற்றுவிக்கும் வண்ணம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருவது வேதனையான விடயமாகும். சமயத் தலைவர்களுக்குரிய கௌரவம் வழங்கி அவர்களை மதித்து மரியாதை கொடுத்து பழகும் மனப்பான்மை கொண்டவர் அமைச்சர றிசாத் பதியுதீன் என்பது நாடறிந்த உண்மையாகும். இந்நிலையில் ஆயரை அவமதிக்கும் நோக்கில் அமைச்சர் பேசியிருப்பாரா? என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் வன்னியில் வாழும் மூவின மக்களுக்காகவுமே பாடுபட்டு உழைத்துவருகின்றார்.அவர் செய்துவரும் சேவைகளில் இனப்பாகுபாடு இல்லை என்பதற்கு சேவைகள் பெறும் நோக்கில் அமைச்சரைத் தேடிவருவோர்களில் அதிகமானோர் தமிழ் சகோதரர்கள் என்பது சிறந்ததோர் உதாரணமாகும்.
எனவே நீதியுடனும்,நேர்மையுடனும்,சேவைகள் புரிந்துவரும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது சேறு பூசி,இனங்களுக்கிடையில் பகையுணர்வை தோற்றுவித்து முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் மறைமுகமான தடைகளை ஏற்படுத்தும் இரண்டாந்தர அரசியல் செய்ய முற்பட வேண்டாம் என அனைவரிடமும் கேட்டக கொள்கின்றேன் என அமைப்பின் செயலாளர் அஷ்ஸெய்க் அபூஹனீப் காயிமி அவ்வறிக்கையில் கேட்டுள்ளார்.
Post a Comment