Header Ads



'கிழக்கு முதலமைச்சர் அலிஸாகிர் மௌலானா' என்பது ஒரு விளையாட்டுச் செய்தியா..?

அப்துல் ரசாக் (ஏறாவூர் ) லண்டன்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான மகிந்தானந்த அளுத்கம கடந்த சனிக்கிழமை (16 .06 .2012 ) ஏறாவூரில் நடந்த ஒரு நிகழ்வில் "அலி சாகிர் மௌலானா கிழக்கின் முதலமைச்சராக வருவார்; முதலமைச்சராக வரப் போகும் அவருக்கு ஆதரவளிக்கவே எங்களை ஜனாதிபதி மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்தார்" என்று ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சர் தெரிவித்திருப்பது அனைவரினதும் விசனத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று கிழக்கின் முதலமைச்சர் யார்; அது இவராக இருக்குமோ அல்லது அவராக  இருக்குமோ  அந்தக் கட்சிக்கு போகுமோ  அல்லது இந்தக் கட்சிக்கு வருமோ என்றெல்லாம் கிழக்கு மக்கள் தம்முடைய மண்டைகளைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கும் நிலையில் ,"ரோம் நகர் பற்றி எரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம்" என்பது போல் அமைச்சர் அளுத்கம ,  மிகவும் சுலபமாக ஒரு பொறுப்புணர்ச்சி  இல்லாமல்  ஜனாதிபதியின் பெயரையும் இழுத்து அடுத்த முதலமைச்சர் அலி ஸாகிர் மௌலானா தான் என்ற கருத்துப்பட ஏறாவூரில் பேசி விட்டுச் சென்று இருப்பது இன்று சர்வ தேசத்தின் ஒரு "பேசப்படும் பொருளாக" மாறியுள்ளது.

அரசாங்க கூட்டமைப்பில் கிழக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இந்த உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில்  மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்மானமானது  , அரசாங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கபோகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசு, தேசிய காங்கிரசு ஆகிய தலைவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்ட  ஒரு முடிவு  என்றாலும் பரவாஇல்லை; அமைச்சர் அளுத்கம, தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட் மாவட்ட இணைப்பாளர் என்ற ரீதியில் அந்தத் தீர்மானத்தை  அறிவித்து விட்டுச் சென்றுள்ளார் என்று கிழக்கு மக்களும் தமது அடுத்த கட்ட நடவடிக்கைபற்றி சிந்தித்து இருப்பார்கள்.

ஆனால், ஏறாவூர் நகர ஓராண்டு பூர்த்தி விழா நிகழச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த  அமைச்சர் மகிந்தானந்த அளுத்கம இந்த அறிவிப்பைச் செய்யும்  போது சிரேஷ்ட அமைச்சர் பௌசியும் கூடவே இருந்தார்  . இந்த பௌசிதான் கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்தான் முதலமைச்சராக்கப்பட வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றவர். அதற்காக தனது வீட்டில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட்டி அவர்கள் எல்லோரினதும் கையொப்பங்களையும் பெற்று ஜனாதிபதியைச் சந்தித்து நேரில் கையளித்தவர்; அதற்காகப் போராடியவர். அன்று அவியாமல் போன ஹிஸ்புல்லாஹ் என்ற மரவள்ளிக்  கிழங்குக்கு பதிலாக இன்னுமொரு அலி ஸாகிர் என்ற என்ற வற்றாளைக் கிழங்கைக்  கொண்டு வந்து கூட்டமைப்புக்குள் உள்ள தோழமைக் கட்சிகளின் ஏகமனதான எந்தத் தீர்மானமும் இல்லாமல் "பச்சைத் தண்ணியில் பலகாரம் சுட வருகிறார்" என்று விளையாட்டு அமைச்சரை  அரசியல் அவதானிகள் குற்றம்  சாட்டுகின்றனர் .  அமைச்சரின் இந்த ஒருதலைப் பட்சமான பிரகடனத்திற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை . இப்போது அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்.

அலி ஸாகிர் மௌலானா தற்போது மட்டக்களப்புத் தொகுதியின் சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ஆவார். அந்தக் கட்சிக்குள் மாவட்டத்தில்  இருக்கின்ற ஆகக் கூடிய மக்கள் செல்வாக்குள்ளவர்  அவர்தான். இன்று அவரின் சுதந்திரக் கட்சி மீதான  இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது . கிட்டத்தட்ட 30 வருட அரசியல் அனுபவங்களையும் பலமுறை பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் வகித்த அன்னாரை இந்த அரசாங்கம் அவரின் தகுதிக்கு ஏற்ற எந்தப் பதவிகளையும் கொடுத்துக் கௌரவிக்காமல் ஏமாற்றியே  வந்துள்ளது . கிழக்கு மாகாண  சபையின் ஆளுநர் பதவி தருவதாகவும் அவருக்குக் கூறப்பட்டது. ஆனால் பல்கலைக் கழக மாணவன் ஒருவனை பத்தாம்  வகுப்பில் கொண்டு அமர்த்தியது  போல் ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் கதிரையில் அவரை  அமர்த்தி  அதை நிரந்தரமாகவும் ஆக்கிவிட்டனர் ஆட்சியாளர்கள்.

இந்த  நிலையில்தான் அரசாங்கத்தால் மிகவும் பாதிக்கப் பட்டிருந்த மௌலானாவை முஸ்லிம் காங்கிரசு உள் வாங்குவதற்கான பிரயத்தனங்களை எடுத்து வருகின்றன .ஊடகங்களும் இவரை அரசாங்கத்தை விட்டு விலகி முஸ்லிம் காங்கிரசில் சேர்ந்தால்தான் கிழக்குத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று எழுதி வந்தன  . இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ,மௌலானா முஸ்லிம் காங்கிரசில் கட்சி  தாவக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் அவர் கட்சி மாறினால்  மட்டக்களப்பு மாவட்ட சுதந்திரக் கட்சியை இழுத்து மூட வேண்டி வரும் என்று அண்மையில்   மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த அமைச்சர்களான மகிந்தானந்த ,பௌசி ஆகியோர்களுக்கு கட்சி பிரதம அமைப்பாளர்களால் எச்சரிக்கப் பட்டதைத் தொடர்ந்தே அலி ஸாகிர் மௌலானா முதலமைச்சராக வருவார் என்ற ஒரு தலைப்பட்ச  பிரகடனப் பின்னணிக்கான காரணங்களாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான தீர்மானம், பத்திரிகையாளர் மகா நாட்டில் அரசாங்கக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஆகக் குறைந்தது அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல என்பவராலாவது  அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே பலரும் கருதுகின்றனர் . அவரே கடந்த செவ்வாய்க் கிழமை "கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக அரச தரப்பிலிருந்து இதுவரை எவரும் முன்நிறுத்தப்படவில்லை" என்றும் "முஸ்லிம் ஒருவரை மட்டும் அரசாங்கம் நிறுத்தும் என்று கூறமுடியாது" என்றும்  ஊடக அறிக்கை ஒன்றின் மூலம்  தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் எது எப்படியாயினும் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமவின் "கிழக்கின் முதலமைச்சராக அலி சாகிர் மௌலானா வருவார்; முதலமைச்சராக வரப்போகும் அவரின் கரங்களைப் பலப்படுத்துவதட்காகத்தான் எங்களை மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுப்பினார்" என்ற செய்தி ஒரு "விளையாட்டுச் செய்தியாக" இல்லாமல் ஒரு நிஜச் செய்தியாக இருக்க வேண்டும்  என்றே கிழக்கு முஸ்லிம்கள் விரும்புகின்றனர் .  
 

2 comments:

  1. அன்புடன் யாழ் முஸ்லிம் இணையதள ஆசிரியருக்கு,

    தங்களின் இணையத்தினை ஆழ்ந்து வாசிக்கின்ற பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். யாழ் முஸ்லிம் இணையத்தளம் நடு நிலைமை, உண்மை ,நம்பகத் தன்மை போன்ற அடிப்படை பத்திரிகா தர்மத்தை பின்பற்றி செய்தி வெளியிடுகின்ற ஒரு தளம் என்பதை அனைவரும் அறிவார்கள். இது போன்ற நல்லதொரு தரத்தினை (standard) கொண்டு இயங்குகின்ற இப்படியான ஒரு தளத்தில் இது போன்ற ஒரு ஆக்கம் வெளியிடப்படுவது உங்களின் இணையத்தின் தராதரத்திற்கு அவமதிப்பை உண்டுபன்னுவதாகவே கருதுகின்றேன்.

    இதை எழுதிய நபர் பயன்படுத்தியுள்ள வாசகங்களை பார்க்கும்போது தேர்தல் காலங்களின்போது உள்ளூர்களில் வெளியிடப்படுகின்ற துண்டுப் பிரசுரங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

    ReplyDelete
  2. அன்புள்ள யாழ் முஸ்லிம் இனையகத்திட்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்கள் இணையத்தின் பல்லாயிரக்கணக்கான அன்பர்களில் நானும் ஒருவன். இங்கு கட்டுரையாளர் சுட்டிக்காட்டிய விடயங்களில் பக்கச் சார்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, கிழக்கு மாகாணத்தின் அரசியல் களத்தில் தற்போது என்ன நடக்குது என்பதை கவனமாக எழுதியுள்ளார். சில நேரங்களில் இவர் ரஊப்
    ஹக்கீமைப் அரசியல் தற்கொலை செய்யப் போகின்றார் என்று எழுதுகின்றார். சில நேரங்களில் முஸ்லிம் காங்கிரசைப் பாராட்டி சொல்கின்றார். சில சமயம்
    மௌலானா அலி சாகிரையும் பாராட்டி புகழ்ந்து எழுதியுள்ளார். ஆனால் இந்தக் கட்டுரையில் அலிசாகிர் மௌலானாவை கவனமாக விழிப்[பாக்க இருக்க வேண்டிய தன்மையை கட்டுரையாளர் கூறியுள்ளார்.

    இந்த ஆக்கத்தில் பக்க சார்பு , அத்து மீறல்கள் இருப்பதாக தெரியவில்லை. நான் உங்கள் இணையத்தைத் திறந்தவுடன் கட்டுரையாளரின் ஏதாவது அரசியல் கட்டுரை வந்துள்ளதா என்றே நான் தேடுவதுண்டு. இவரின் பணி தொடர நல வாழ்த்துக்கள். ஆனால் அரசியல்வாதிகளைப் பகைத்துக் கொள்ளாமல் கொஞ்சம் நிதானமாக எழுதினால் அவர்களின் அன்பைப் பெற்று இன்னும் வாழ்கையில் முன்னேறலாம் என்று ஆலோசனை கூற விரும்புகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.