Header Ads



வகுப்பில் அதிகம் பேசிய மாணவிக்கு ஏற்பட்ட பரிதாபம்

வகுப்பில் பேசிக்கொண்டிருந்த மாணவியின் வாயில் "டேப்' ஒட்டி, அவரை நாள் முழுக்க வகுப்பறைக்கு வெளியே நிறுத்திய, பள்ளி ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆந்திரா, ஐதராபாத் நூர்கான் பஜார் பகுதியில் உள்ளது, சாம் பிரிட்டிஷ் என்ற தனியார் பள்ளி. இங்கு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி சதர் பாத்திமா. பள்ளி முடிந்து, அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த இவர், ஆசிரியர்கள் தன் வாயில் "டேப்' ஒட்டி, ஐந்து மணி நேரத்துக்கு மேல் வெளியே நிறுத்தி வைத்ததாக, பெற்றோரிடம் புகார் கூறினார். ஆத்திரமடைந்த அவளின் தந்தை முஜ்தபா உசேன், பள்ளிக்குச் சென்று நியாயம் கேட்டார். பள்ளி நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்க மறுத்ததால், போலீசில் புகார் அளித்தார். இந்திய தண்டனைச் சட்டம், 323 மற்றும் 341 ஆகிய பிரிவுகளின்கீழ், பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து, மாணவி பாத்திமா கூறுகையில், "வகுப்பில் அருகே அமர்ந்திருந்த தோழியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, வகுப்பறைக்குள் நுழைந்த பள்ளியின் முதல்வர், அங்கிருந்த ஆசிரியை சஜிதாவை அழைத்து, என் வாயில் "டேப்' ஒட்டுமாறு உத்தரவிட்டார். பின், நாள் முழுக்க வகுப்பறைக்கு வெளியே என்னை நிறுத்தி வைத்தனர். என்னால் சாப்பிடவும் முடியவில்லை' என்றார். ஆனால், மாணவியின் வாயில் "டேப்' ஒட்டவே இல்லை என, பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. முதல்வரின் கணவர் மசார் அலி, இதுகுறித்து கூறுகையில், ""400க்கும் மேற்பட்ட மாணவர்களை வைத்து பள்ளியை நடத்தி வருகிறோம். நாங்கள் பொறுப்பற்றவர்கள் அல்ல. கடுமையான எந்த தண்டனையும், மாணவர்களுக்கு விதிக்கப்படுவதில்லை. வகுப்பு நேரத்தில் மற்றவர்களை தொந்தரவு செய்யும் வகையில் பேசிக்கொண்டிருந்த மாணவியை கடிந்து கொண்டோம். அவ்வளவு தான்,'' என்றார்.

No comments

Powered by Blogger.