Header Ads



அபுயாஹ்யா அல்-லிபியின் மரணம் - அல்ஹைதாவுக்கு பாரிய இழப்பு - அமெரிக்கா சொல்கிறது


அல்கொய்தா மற்றும் தலீபான்களை அமெரிக்கா வேட்டையாடி வருகிறது. வடக்கு வசீரிஸ்தானில் அமெரிக்க உளவு விமானம் நடத்திய குண்டு வீச்சில் அல்கொய்தாவில் 2-வது இடத்தில் இருக்கும் அபுயாஹ்யா அல்-லிபி கொல்லப்பட்டார்.

இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக உயர் அதிகாரியை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமான வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜே கர்னி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அல்கொய்தா இயக்கத்தில் 2-வது இடத்தில் இருக்கும் அபு யாஹ்யா அல்-லிபி கொல்லப்பட்டு விட்டார். அமெரிக்க உளவு அமைப்புகள் இதை உறுதிப்படுத்தி உள்ளன. அவர் எப்படி, எந்த இடத்தில் கொல்லப்பட்டார் என்று நான் கூற முடியாது. அல்-லிபி கொல்லப்பட்டது, அல்கொய்தா இயக்கத்துக்கு பெரும் அடி ஆகும். அவரது பதவியில் அவரைப் போன்ற ஒருவரை தேடிப்பிடித்து அமர்த்துவது மிகவும் கடினமான பணியாகும். அந்த அளவுக்கு அவரது மரணம், அல்கொய்தாவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

அல்-லிபி போன்ற அல்கொய்தா மூத்த தலைவர்களை ஒழிப்பதுதான், ஒபாமா அரசின் நோக்கம். அல்கொய்தா இயக்கத்தை தோற்கடித்து, அந்த இயக்கத்தை அழித்து ஒழிக்க ஒபாமா உறுதி பூண்டுள்ளார். அதற்காக உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

அந்தவகையில், பாகிஸ்தானுடன் நாங்கள் முக்கியமான உறவை கடைபிடித்து வருகிறோம். அதில் எங்கள் தேச நலனும் அடங்கி இருப்பதால், தினமும் அந்த உறவை வளர்த்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், அல்கொய்தா தலைவர்கள் உலகின் எந்த மூலையில் ஒளிந்து இருந்தாலும், அவர்கள் அமெரிக்காவுக்கும், அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளனர். எனவே, அவர்கள் எங்கு இருந்தாலும், அழித்து ஒழிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதியும், அமெரிக்க ராணுவ மந்திரியும் தெளிவாக உத்தரவிட்டுள்ளனர் என்றார்.

No comments

Powered by Blogger.