இலங்கையில் கடும் வரட்சி, பயிர்களுக்கு ஆபத்து - மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அவசர கூட்டம்
பருவமழை தாமதமாவதால் இலங்கையில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள் வற்றியுள்ளதால், விவசாயம், நீர் மின்உற்பத்தி என்பன கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மகிந்த ராஜபக்ச நேற்று அலரி மாளிகையில், அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அரசின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் திறைசேரி செயலர் ஆகியோரும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் வரட்சியினால் 150,000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் முற்றாக அழியும் ஆபத்தில் இருப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொத்மல, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களில் இருந்து நீரைப் பெறும் விவசாய நிலங்களும் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. சிறிய குளங்கள், நீர்த்தேக்கங்கள் முற்றாக வற்றி வறண்டு போயுள்ளன. பாரிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர். பொலன்னறுவில் 7500 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கைவிடப்பட்டுள்ளன. மேலும் 15 ஆயிரம் ஏக்கர் நெல், 50 ஆயிரம் ஏக்கர் ஏனைய பயிர்களும் அழியும் ஆபத்தில் உள்ளன.
காலநிலை மாற்றம், எரிபொருள் நெருக்கடி என்பவற்றின் காரணமாக மின் உற்பத்தி தொடர்பில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மாற்று வழிகளினூடாக மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
எதிர்வரும் 15 வருட காலத்தில் மாற்று வழிகளினூடாக மின் உற்பத்தி செய்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்த சர்வதேச சமூகம் இப்பொழுதே தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். கலதாரி ஹோட்டலில் நேற்று நடைபெற்ற மாற்றுவழிகளினூடாக மின் உற்பத்தி செய்வது தொடர்பான மாநாட்டிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து மழை வீழ்ச்சி குறைவடைந்து வருவதையடுத்து 297.6 ஜிகா வோர்ட் மணித்தியாலங்கள் மின் உற்பத்தி செய்யக்கூடிய நீரே இருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
மொத்த மின்சாரத்தேவையில் 14 வீதமே நீர் மின் உற்பத்தி மூலம் பெறப் படுகிற போதும் மின்வெட்டு அமுல் படுத்துவது குறித்து இது வரை எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை என மின் சார சபை தொழிற்பாட்டுப் பணிப்பாளர் பசன் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை மேற்படி மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், நிலக்கரி, எரி பொருள் பாவனை காரணமாக பல்வேறு சூழல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதோடு எதிர்காலத்தில் மனித வாழ்வுக்கு பல்வேறு மோசமான விளைவுகள் ஏற்படலாம். இரு பருவப் பெயர்ச்சி மழைகள் கிடைக்காததால் வரட்சியால் காலநிலை நீரேந்து பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.
இதனால் நீர் மின் உற்பத்தி குறை வடைந்துள்ளதோடு 86 வீதம் எரிபொருள் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் காலநிலையை நம்பியிருக்க முடியாது. சூரிய சக்தி, காற்று, உயிரியல் வாயு போன்ற மாற்று வழிகளினூடாக மின் உற்பத்தி செய்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
மாற்று வழிகளினூடாக மின் உற்பத்தி செய்வதில் சில சிக்கல்கள் இருக்கவே செய்கிறது. இது தொடர்பான திட்டங் களுக்கான ஆரம்ப முதலீடு, உற்பத்தி நடவடிக்கை என்பவற்றுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் அமைச்சர் கூறினார். நீர் மின் உற்பத்தி குறைவடைந்து வரும் நிலையில் எதிர்வரும் தினங்களில் நிலைமை மோசமடையலாம் எனவும், எதிர்வரும் தினங்களில் இது தொடர்பில் முடிவு எடுக்க வேண்டி வரும் எனவும் பணிப்பாளர் பசன் குணசேகர கூறினார்.
allahvin veedukku aniyayam seithaa anupavikkathaan venum arasankam
ReplyDelete