Header Ads



இன முரண்பாட்டிலிருந்து மத முரண்பாட்டை நோக்கி....


(இன்றைய 07-06-2012 விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம் இது)


போர் முடிவுக்கு வந்துவிட்ட போதிலும் இனங்களுக்கிடையே நிலவும் சந்தேக மனப்பான்மை முடிவுக்கு வந்துவிட்டதாக தெரியவில்லை.

அண்மைக் காலமாக வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வரும் விரும்பத்தகாத நிகழ்வுகளே இதற்கு பலத்த சான்றாகும்.

வடக்கு கிழக்கு விடுவிக்கப்பட்டு அமைதி நிலவுகின்ற போதிலும் அங்கு வாழும் பல்லின சமூகங்கள் மத்தியில் இன சௌஜன்யம் ஏற்பட்டுள்ளதா? எனும் கேள்விக்கு பதில் ‘இல்லை’ என்பதேயாகும்.

மூன்று தசாப்த கால யுத்தம் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில்தான் இடம்பெற்றது என்று வெளிப்படையாகக் கூறினாலும் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையில் நிரந்தரமாகத் தோற்றுவிக்கப்பட்ட இன முரண்பாட்டின் மையமாகவே அது இடம்பெற்றது என்பதை நாம் மறந்துவிடுவதற்கில்லை.

இன முரண்பாட்டின் விளைவாக தோற்றம் பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் யுத்தத்திற்கு காரணமாகவிருந்த இன முரண்பாடு இன்னமும் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை.

பெரியளவிலான கலவரங்கள் எதுவும் சமீப காலத்தில் தோற்றம்பெறாவிட்டாலும் கூட ஆங்காங்கே நடைபெறும் சில நிகழ்வுகள் பெரும் கலவரங்களுக்கு வித்திட்டு விடுமோ எனும் அச்சம் தோன்றாமலிருப்பதை எம்மால் தடுக்க முடியவில்லை.

குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகரித்து வரும் சிங்கள பௌத்த மேலாதிக்கமானது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது. திடீர் திடீரென முளைக்கும் பௌத்த சிலைகளும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களும் சிறுபான்மை மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் திட்டங்களுமே இந்த சந்தேகத்திற்கு அடிப்படையாகும்.

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையிலான இந்த சந்தேகத்தைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே சிங்கள-பௌத்த பேரினவாத சிந்தனை முஸ்லிம்கள் மீதும் திரும்பியிருப்பதே மிகவும் ஆபத்தான சமிக்ஞையாக இப்போது வெளிப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் ‘இனம்’ எனும் கோட்பாட்டை முன்வைத்து தோற்றுவிக்கப்பட்ட முரண்பாடுகள் இன்று ‘மதம்’ எனும் கோட்பாட்டை முன்வைத்து தோற்றுவிக்கப்படுவதே இவற்றுக்கிடையிலான ஒரேயொரு வேறுபாடாகும். மாறாக இன முரண்பாட்டினால் ஏற்பட்ட விளைவுகளைப் போன்றே மத முரண்பாடுகளாலும் ஏற்படப் போகும் விளைவுகள் பாரதூரமானவையாக அமையும் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

மதங்கள் அகிம்சையையே போதிக்கின்றன என்று வெளிப்படையாகக் கூறிக் கொண்டாலும் இன்று மதத் தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் ஒருசாரார் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் அகிம்சைக்கு எதிர்மாறானதாகவே அமைந்திருக்கின்றன. அதனால்தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய மிகச் சிறிய விடயங்கள் கூட இன்று பாரிய பிரச்சினைகளாக கட்டமைக்கப்படும் துரதிஷ்ட நிலை தோன்றியுள்ளது.

தம்புள்ளையில் தொடங்கி தெஹிவளை வரை தொடரும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் எந்தவொரு ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பொறுப்புவாய்ந்த அரசாங்கமும் பொறுப்பற்றவிதமாகவே நடந்து கொள்வதை அவதானிக்க முடிகிறது.

எனவேதான் இதுவிடயத்தில் நியாயமானதொரு தீர்வினைக் காண்பதற்கும் எதிர்காலத்தில் இவ்வாறான முரண்பாடுகள் தோற்றம் பெறுவதைத் தவிர்ப்பதற்கும் சமயத் தலைவர்களை உள்ளடக்கிய சுயாதீன குழு ஒன்றை உருவாக்குவது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

எந்தவொரு சமயத்தினரும் அடுத்த சமயம் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் கருத்துக்களையோ அல்லது பிரச்சினைகளையோ இந்த குழுவுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் சுமுகமான தீர்வினைக் காண்பதற்கு முயற்சிக்க முடியும்.

எனவேதான் அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறான விடயங்களில் அமைதியாக இருப்பதை விடுத்து சகல சமயங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்டக் குழு ஒன்றினை அமைத்து அதன் மூலமாக இவற்றைக் கையாள முனைவதே பொருத்தமானது எனக் கருதுகிறோம். மாறாக தொடர்ந்தும் இவற்றை அரசியலாக்குவதோ அல்லது இழுத்தடிப்பதோ மென்மேலும் பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். அவற்றின் விளைவுகள் நீண்ட காலத்தில் இந்த நாட்டுக்கு பெரும் சாபக் கேடாகவே அமையக் கூடும். இறைவன் பாதுகாப்பானாக.

1 comment:

  1. நாட்டின் தலைவருக்கு உலகத்தை சுற்றி வருவதற்கே
    நேரமில்லாமல் இருக்கிறது.வார்த்தைகளில் மட்டும் தான் இன,மத,வேற்றுமையில்லாத ஒரே தாய் மக்கள்
    அப்படி,இப்படி என்று வீர வசனம் பேசுவார்.ஆட்சி அதிகாரம் இன வெறி கொண்ட சில தேரர்கள் கையில் தானே இருக்கிறது.மக்களின் வரிப் பணத்தை செலவழித்து லண்டன் வந்துஅவமானப்பட்டதை தவிர வேறு எதைக் கண்டார். இன முரண்பாடு இருந்தால்தான் ஆட்சி எனும் குப்பை கொட்டலாம்.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.