யாழ்ப்பாணம் - கொழும்பு பஸ் சேவை வழமைக்கு திரும்பியது
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் புதிய நிபந்தனையை ஏற்றுக்கொள்ள மறுத்த, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையே போக்குவரத்தில் ஈடுபடும் பல தனியார் பயணிகள் பஸ்களின் வீதிப் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்கள் நேற்று முதல் பறிமுதல் செய்யப்பட்டதால் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையிலான தனியார் பயணிகள் பஸ் சேவை எவ்வேளையிலும் முற்று முழுதாக ஸ்தம்பிதமடையலாமென்ற நிலையில், தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி. ரட்ணாயக்கவின் தலையீட்டால் அது தற்காலிகமாக சுமூக நிலைமைக்கு கொண்டுவரப்பட்டது.
நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பயணிகள் பஸ்களுக்கான வருடாந்த வீதிப் போக்குவரத்து அனுமதிப் பத்திரக் (×ட் பெர்மிட்) கட்டணமாக பத்தாயிரம் ரூபாவுக்கும் குறைவாக அறவிடப்படும் நிலையில் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையிலான பஸ் சேவைக்கான ×ட் பெர்மிட்டாக வருடாந்தம் 11 இலட்சம் ரூபா அறவிடப்படுகிறது.
இதற்கமைய அதி சொகுசு பஸ்ஸுக்கான (சுப்பலக்சறி) வருடாந்த கட்டணமாக 11 இலட்சம் ரூபாவும் மாதாந்த கட்டணமாக 91,911 ரூபாவும் அறவிடப்பட்டு வந்தது.
இதுபோன்றே சொகுசு பஸ்ஸுக்கும் (லக்சறி) இதே கட்டணம் அறவிடப்பட்டு வந்ததுடன் அரை சொகுசு பஸ்ஸுக்கு வருடாந்தம் 7,53,000 ரூபாவும் மாதாந்தம் 62,750 ரூபாவும் அறவிடப்பட்டு வந்தது.
ஆரம்பத்தில் 80 பஸ்களுக்கு மட்டுமே ×ட் பெர்மிட் வழங்கப்பட்டு வந்தது. பின் அரசியல் செல்வாக்கால் மேலும் 40 பஸ்களுக்கு இந்தப் பெர்மிட் வழங்கப்பட்டது. இதனால் பல பஸ்கள் சேவையிலீடுபட முடியாத நிலையேற்பட்டது. மிகப் பெருந்தொகை பணத்தை கட்டிவிட்டு நஷ்டத்தில் இயங்கும் நிலையேற்பட்ட பல பஸ்கள் சேவையை நிறுத்தும் நிலையேற்பட அவற்றின் அனுமதிப் பத்திரங்களை ரத்துச் செய்து விட்டு அதை வேறு பஸ் உரிமையாளர்களுக்கு கொடுத்து பெரும் பணம் சேர்க்கப்பட்டது.
இதேவேளை பலர் பெர்மிட் இல்லாது இந்த சேவையில் ஈடுபட்டபோது அவர்கள் பிடிக்கப்பட்டு பெருந்தொகை தண்டமாக அறவிடப்பட்டதுடன் அவர்களுக்கு ×ட் பெர்மிட்டை பல இலட்சம் ரூபாவுக்கு விற்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இந்த சேவையில் ஈடுபட்ட பல தமிழ் பஸ் உரிமையாளர்கள் பெரும் நஷ்டமடைந்தனர்.
இந்த நிலையில் ×ட் பெர்மிட்டுக்கு ஒவ்வொரு மாதமும் தவணைக் கட்டணம் அறவிடப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக, மூன்று மாதக் கட்டணத்தை ஒரே தடவையில் செலுத்துமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
மூன்று மாத தவணையை ஒரே நேரத்தில் செலுத்த முடியாதெனவும் மாதம் மாதம் கட்டணத்தை செலுத்துவதாகவும் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர். எனினும் இதனை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஏற்க மறுத்ததுடன் தவணைப் பணத்தை கட்டத் தவறியவர்களின் “×ட் பெர்மிட்’ புத்தகத்தையும் பறிமுதல் செய்யத் தொடங்கியது. இந்தப் புத்தகம் இல்லாதவர்கள் பஸ் சேவையில் ஈடுபட முடியாது.
×ட் பெர்மிட் புத்தகத்தை திருப்பி ஒப்படைத்தவர்களுக்கு அதற்கான ரசீதும் ஒப்படைக்கப்பட்டதுடன் இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் தமது நிபந்தனைக்கமைய தவணைப் பணத்தை (3 மாதம்) ஒரே தடவையில் செலுத்தி ×ட் பெர்மிட் புத்தகத்தை மீளப்பெற்று சேவையில் ஈடுபட முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புதிய நிபந்தனையை ஏற்க மறுத்த பல பஸ் உரிமையாளர்கள் தங்கள் ×ட் பெர்மிட் புத்தகங்களை நேற்று செவ்வாய்க்கிழமை ஒப்படைத்திருந்தனர். இதனால் கொழும்பு யாழ். பஸ் சேவை எவ்வேளையிலும் முற்று முழுதாக ஸ்தம்பிதமடையலாமென எதிர்பார்க்கப்பட்டது.
இதேநேரம் தனியார் பஸ் உரிமையாளர்கள், தேசிய போக்குரத்து ஆணைக்குழுவுடன் செய்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகவும் இதுவரை காலமும் இந்த தவணைக் கட்டணத்திற்கு உடன்பட்டுவிட்டு இப்போது அதற்கு மறுப்புத் தெரிவிப்பதாகவும் கூறிய ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணரத்தின, இதற்காக அவர்கள் சேவை பகிஸ்கரிப்பில் ஈடுபட்டாலும் தாங்கள் கவலைப்படப் போவதில்லையெனவும் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு அமையவே தான் செயற்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
எனினும் அவருடன் பேசி இது தொடர்பாக இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த தாங்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தால், தங்கள் சேவைக்கு அனுமதி மறுக்கப்பட்டால் யாழ்ப்பாணத்திற்கான பயணிகள் பஸ் சேவை உடனடியாக (நேற்றுடன்) நிறுத்தப்படுமென தனியார் பயணிகள் பஸ் உரிமையாளர்கள் சார்பில் ஈஸ்வரன் ரான்ஸ் போட் சேவிஸ் உரிமையாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கான பஸ் சேவை நிறுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி.ரட்ணாயக்க நேற்று மாலை 6.30 மணியளவில் துவாரகேஸ்வரனுடன் தொடர்பு கொண்டு பேசியதுடன் இது குறித்து சுமுகமான முடிவெடுப்பதாகவும் வழமைபோல் ×ட் பெர்மிட் கட்டணத்தை மாதாந்த அடிப்படையில் செலுத்துமாறும் பஸ் சேவையை எந்த விதத்திலும் நிறுத்த வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் அவர் சில உறுதிமொழிகளை வழங்கியதையடுத்து சகல தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்படவே, எவ்வேளையிலும் தடைப்படலாமென இருந்த கொழும்பு யாழ். பஸ் சேவை சில மணி நேர தாமதத்தின் பின் வழமைக்குத் திரும்பியது.
ஏன் யாழ்ப்பாண பஸ்களுக்கு மட்டும் இவ்வாறான அதீத கெடுபிடி?
ReplyDeleteமீண்டும் இளைஞர்களை அயூதம் எந்தத் தூண்டும் முயற்சியில்
சிலர் மறைமுகமாக செயல் படுகின்றார்களா?