'சதை தின்னி' பாக்டீரியா - ஒரு எச்சரிக்கை
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் கரல்டன் பகுதியை சேர்ந்தவர் எய்மீ கோப்லேண்ட் (24). வெஸ்ட் ஜார்ஜியா பல்கலைக்கழக மாணவி. அப்பகுதியில் உள்ள ஆற்றுக்கு கடந்த மே 1ம் தேதி சென்றார். ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த கயிற்றில் தொங்கியபடி சென்றார். அப்போது, எதிர்பாராவிதமாக கீழே விழுந்ததில் காலில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
பிய்ந்து போன சதைகளை ஒழுங்குபடுத்தி 22 தையல் போட்டு எய்மீயை டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்தனர். ஒரு சில நாட்களில் காலில் கடுமையான வலி ஏற்பட்டது. காலில் ஏற்பட்ட புண் நாள் ஆகஆக தீவிரமாக தொடங்கியது. வலி தாங்காமல் எய்மீ துடித்தார். பாக்டீரியா தாக்குதலால் நோய்த் தொற்று அதிகரித்துள்ளதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அகஸ்டா நகரில் உள்ள டாக்டர்ஸ் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிரமாக பரிசோதித்தனர். ‘சதை தின்னி’ என அழைக்கப்படும் ஏரோமோனஸ் ஹைட்ரோபிலா வகை பாக்டீரியாவால் அவர் தாக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
பொதுவாக, ஏரோமோனஸ் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து, இறந்த திசுக்களை அகற்ற ஆன்டிபயாடிக் மருந்து அதிகளவில் கொடுக்கப்படும். பாக்டீரியா தாக்குதல் அதிகமாக இருந்ததால், அந்த நிலையை எய்மீ கடந்திருந்தார். அவரது கை, கால்கள் முழுவதும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருந்தன. ஏறக்குறைய இறப்பை அவர் நெருங்கிக் கொண்டிருப்பதாக டாக்டர்கள் கூறினர். அதனால், வேறு வழியின்றி இரு கைகளும் ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டன. தொடை வரை இடது காலும் அகற்றப்பட்டது.
வலது பாதமும் நீக்கப்பட்டது. ‘சதை தின்னும்’ குரூர பாக்டீரியாவின் தாக்குதலால் கை, கால்களை அநியாயமாக இழந்த எய்மீ தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சுமார் 50 நாட்களாக படுத்த படுக்கையாக கிடந்த எய்மீ கடந்த வாரம்தான் வீல் சேரில் வந்து வெளியுலகை பார்த்தார். வரும் திங்களன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, செயற்கை கை, கால்கள் பொருத்தி பயிற்சி பெறுவதற்காக மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பப்படுகிறார். ‘‘நல்லதோ, கெட்டதோ.. எல்லாருக்கும் கிடைக்காத வாய்ப்பு, அனுபவம் எனக்கு கிடைத் துள்ளது. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. பாக்டீரியாவால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று மற்றவர்கள் உணர்வதற்கு நான் வாய்ப்பாக இருந்ததை பெருமையாக கருதுகிறேன்’’ என்கிறார் எய்மீ.
ரணம் முதல்... மரணம் வரை
சிரங்கு, புண், வெட்டுக் காயம் வழியாக முதலில் ஏரோமோனஸ் பாக்டீரியா உடலுக்குள் நுழைந்து மெல்ல பரவும். எண்ணிக்கை அதிகமானால், ஒருவிதமான விஷத்தை வெளியேற்றும். இது தோல், சதை, திசுக்களை ஒவ்வொன்றாக அழிக்கும். ரத்த ஓட்டம் தடைபடும். உடல் பாகங்கள் அழுகும். முக்கிய உறுப்புகள் செயலிழக்கும். இந்நோய் நெக்ரோடைசிங் பெசிலிடிஸ் எனப்படுகிறது. உடலில் வித்தியாசமான கட்டிகள், படை, சதை முடிச்சுகள் காணப்படுவது, அவை வெடித்து ரத்தம் வெளியேறுவது ஆகியவை அறிகுறிகள். உடனடியாக கவனித்து உரிய சிகிச்சை எடுத்தால் மட்டுமே மரணத்தை தவிர்க்கலாம் என்கின்றனர் டாக்டர்கள்.
ஆபாசமான படங்களை இத்தளத்தில் பிரசுரிக்க வேண்டாம்.
ReplyDelete