தென்கிழக்கு பல்கலைக்கழகம் சர்வதேச தரத்திற்கு முன்னேறி வருகிறது - பேராசியர் இஸ்மாயில்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் 14 வருட பரிணாம வளர்ச்சியில் பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு சர்வதேச பல்கலைக்கழகங்களின் தரத்திற்கு முன்னேறி வருவதாக உபவேந்தர் பேராசியர் எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள உபவேந்தர் முகம்மது இஸ்மாயில் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றுகையில் பேராசிரியர் முகம்மது இஸ்மாயில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இப்பல்கலைக்கழகம் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபினால் என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்நோக்கத்தை இப்பல்கலைக்கழகம் நிறைவேற்றும் வகையில் இப்பிராந்தியத்தின் வளர்ச்சிக்காகவும் சமூகங்களின் ஒற்றுமைக்காகவும் அதன் செயற்பாடுளை முன்கொண்டு செல்கிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் இப்பல்கலைக்கழகம் குறுகிய காலத்திற்குள் பல விடயங்களை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் பல்கலைக்கழக சமூகம் சார்பாக அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
ஆய்வுகளுக்காக விரிவுரையாளர்களையும் மாணவர்களையும் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதோடு மாணவர்களினதும் விரிவுரையாளர்களினதும் கல்விசாரா உத்தியோகத்தர்களினதும் நலனில் நான் அக்கறையுடன் செயற்படுகிறேன். கடந்த மூன்று ஆண்டு காலத்தில் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக என்னுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
மேலும் இப்பல்கலைக்கழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் என்னால் இயலுமானவரை இதன் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணித்து பணியாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளேன் அத்துடன் எனது பணியை திறம்பட மேற்கொள்வதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமெனக் கேட்டுக் கொண்டார்.
Post a Comment