Header Ads



ஒரே நாளில் இரு பரீட்சைகள் - கிழக்கு பட்டதாரிகள் பெரும் திண்டாட்டம்!



அஸ்லம் எஸ்.மௌலானா

இலங்கை நிர்வாக சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சை நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் கொழும்பில் நடக்கவுள்ள நிலையில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, நிகழ்ச்சித் திட்ட உதவியாளர்களுக்கான போட்டிப் பரீட்சையை கிழக்கு மாகாணத்தில் நாளை நடத்துகிறது.

கிழக்கில் நிகழ்ச்சித் திட்ட உதவியாளர்களுக்கான போட்டிப் பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 3500 பட்டதாரிகளுள் சுமார் 1200 பேர் இலங்கை நிர்வாக சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கும் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இரு பரீட்சைகளும் ஒரே தினத்தில் நடப்பதால் இவர்களது நிலை இப்போது பெரும் திண்டாட்டமாக மாறியுள்ளது.

இவர்களுள் பலர் இலங்கை நிர்வாக சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக கொழும்பு சென்றிருக்கும் நிலையில் நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கான அறிவிப்பு இறுதி நேரத்தில் வெளிவந்துள்ளது.

இதன் காரணமாக இவ்விரு பரீட்சைகளுக்கும் விண்ணப்பித்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இந்த 1200 பட்டதாரிகளினதும் திண்டாட்ட நிலைமையை சுட்டிக்காட்டி நிகழ்ச்சித் திட்ட உதவியாளர்களுக்கான போட்டிப் பரீட்சையை பிற்போடுமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை அவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது என கவலை தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை பலருக்கு இன்னும் நிகழ்ச்சித் திட்ட உதவியாளர்களுக்கான போட்டிப் பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதுவும் இப்பட்டதாரிகள் மத்தியில் பெரும்
குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இக்குளறுபடி காரணமாக ஏதாவது ஒரு பரீட்சையைக் கைவிடும் இப்பட்டதாரிகள் எதிர்காலத்தில் பாதிப்பை எதிர்நோக்க நேரிடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இவர்கள் இலங்கை நிர்வாக சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு தோற்றாமல் விட்டால் அது தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு சமூக ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறான காரணங்களை கருத்திற் கொண்டு கிழக்கு நிகழ்ச்சித் திட்ட உதவியாளர்களுக்கான போட்டிப் பரீட்சையை பிறபோடுவதற்காக சம்பத்தப்பட்ட உயர் மட்டத்தினருடன் அவசரமாக பேச்சு நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

1 comment:

  1. சிறுபன்மையில் ஒருவன்30/06/2012, 08:17

    இது சிறுபான்மை சமூகத்தை ஒடுக்குகிற செயலோ தெரிய வில்லை !!!!!!!!!

    ReplyDelete

Powered by Blogger.