Header Ads



மன்னாரில் தமிழ், முஸ்லிம் சமூகத் தலைவர்களிடையே சந்திப்பு - ஆயரும் பங்கேற்றார்



மன்னாரில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் இடைவெளியைக் குறைத்து இரண்டு சமூகங்களுக்குமிடையில் புரிந்துணர்வையும் நட்புறவையும் வலுப்படுத்தும் ஆரம்ப கட்ட முயற்சியாக சனிக்கிழமை மன்னார் ஆயர் வண இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கும் மன்னார் முஸ்லிம் சமய சமூகத் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற  இச்சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மன்னார் சர்வமதப் பேரவை மேற்கொண்டிருந்தது. இச்சந்திப்புத் தொடர்பாக மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவர் அருட் திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவிக்கையில்,

இச்சந்திப்பு சுமுகமானதாகவும் சினேகபூர்வமானதாகவும் அமைந்ததோடு பரஸ்பரம் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் மன  ஆதங்கங்களை வெளிப்படுத்தவும் சிறந்த களமாக அமைந்திருந்தது.

மன்னாரில் உள்ள அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த பெரும்பாலான மக்கள், மன்னாரில் இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை குறித்து மிகுந்த வேதனை கொண்டுள்ளனர்.

இம்முறுகல் நிலையை மேலும் வளரவிடாமல் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரைச் சந்திக்க வைத்து பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க வழி செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தனர்.

அதுமட்டுமல்ல, மன்னாருக்கு வெளியே உள்ள நல்மனம் கொண்ட பல தரப்பினரும் இந்த நிலைமை தொடர்பாக தங்கள் அக்கறையை வெளிப்படுத்தி வந்தனர்.  எனவே தான் மக்களின் இந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு மன்னாரில் இன மத நல்லிணக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையாக இச்சந்திப்பை மன்னார் சர்வமதப் பேரவை ஏற்பாடு செய்தது.

மீள்குடியேற்றம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் சட்டம், ஒழுங்கு விதிகளுக்கு முரணாக நடந்த பாரபட்சங்களை மன்னார் ஆயர் எடுத்து விளக்கினார்.

அதேபோன்று முஸ்லிம் சமய, சமூகத் தலைவர்களும் தாம் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாகவும் அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய சில பிரச்சினைகள் தொடர்பாகவும் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டனர்.

இது முதல் கட்ட சந்திப்பாக அமைந்தது. எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டுமென அனைத்துத் தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். அடுத்த கட்டச் சந்திப்பில் அமைச்சர் றிசாட் பதியுதீனையும் அழைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் விக்ரர் சோசை, மன்னார் இந்துக் குருமார் பேரவையின் தலைவர் மனோகர ஐங்கர சர்மா, செயலாளர் ம.தர்மகுமாரசர்மா, பொறியியலாளர் ச.இராமகிருஷ்ணன் ஆகியோரும் உடனிருந்தனர். இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் மன்னார் கிளைத் தலைவரும் மன்னார் சர்வமதப் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவருமான மௌலவி எஸ்.ஏ.அஸீம் மன்னார் முஸ்லிம் சமய, சமூகத் தலைவர்களின் குழுவுக்கு தலைமை வகித்தார்.

No comments

Powered by Blogger.