ஷஹீதான எம்.எச்.எம்.அஷ்ரப் குறித்து அவதூறு சொல்லாதீர் - சிங்கள பத்திரிகைக்கு பதிலடி
இர்ஷாத் றஹ்மத்துல்லா
மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஸ்ஸஹீத் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் குறித்து சிங்களப் பத்திரிகையான ரிவிர வெளியிட்டுள்ள கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தினை புன்படுத்துவனவாக அமைந்துள்ளதுடன்,ஒருவர் மரணித்த பின்னர் அவர் மீது அவதுாறு செலுத்துவதை சகோதரத்துவத்தை விரும்பும் இஸ்லாம் கண்டிக்கின்றது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ரிவிர ஞாயிறு பத்திரிகையின் 27 ஆம் பக்கத்தில் எச்.டபிள்யூ.அபயபால என்பவரால் எழுதப்பட்டுள்ள கட்டுரயைின் உள்ளடக்கத்தை வாசிக்கும் போது அது உண்மைக்கும்,மனித அறிவுக்கும் பொருத்தமற்றதாக உள்ளது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.
கதிர்காமத்தில் சிறுவன் ஒருவன் பௌத்த விகாரையில் வைத்து எதிர்வு கூறியதாக இந்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் நம்பகத்தன்மைக்கு உகந்தவையாக அல்ல என்பதையும்.இது வெறும் கட்டுக் கதையொன்றே எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.இவ்வாறு ஒவ்வொருவரும் எதிர்வு கூறல்களை செய்தால் இந்த நாடு குறித்து பெரும்கேள்வியே எழுந்திருக்க வேண்டும்.
முஸ்லிம்களை பொருத்த வரையில் இறை விசுவாசம் முக்கியமானதாகும்,மறைவான விடயங்களை நம்பிக்கை கொள்ள வேண்டியது கடமையாகும்.அந்த வகையில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மறைவும் அப்படியானதாகவே இறைவனின் புறத்திலிருந்து வந்துள்ளதை முஸ்லிம்கள் தமது விசுவாசம் கொள்கின்றனர்.
இவ்வாறான நிலையில் தேசிய பத்திரிகையொன்று இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் விமான விபத்தில் ஷஹீதான எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் குறித்தும்,அதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தினை ஏனைய சமூகங்கள் மத்தியில் பிழையான சிந்தனையை தோற்றுவிக்கும் வகையில் ஆக்கங்களை வெளியிடுவது பொருத்தமற்ற செயலென தாம் கருதுவதாகவும்,இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக எதனையும் எழுதலாம் என்ற மன நிலை மாற வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே வேளை இக்கட்டுரை குறித்து வார பத்திரிகையின் ஆசிரியருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர்,இந்த செய்தி குறித்து முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மன உழைச்சலை வெளிப்படுத்தியதுடன்,இவ்வாறான எதிர்வு கூறல்கள் சமூகத்தினது ஆரோக்கியத்திற்கு உகந்ததாக அமையாது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரஸ்தாபித்துள்ளார்.
Post a Comment