Header Ads



அப்துல் கலாம் சோனியாவின் கனவை தகர்த்தாரா..?



காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 2004-ம் ஆண்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தும் நாடெங்கும் சோனியா பிரதமர் பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் பாராளுமன்ற தலைவராக ஏகமனதாக சோனியா தேர்வானதும் அவர்தான் பிரதமர் என்று மக்கள் உறுதியாக நம்பினார்கள்.

இந்த நிலையில் பல கட்சிகள் சோனியா பிரதமர் பதவி ஏற்க கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்திய பிரதமர் பதவியை ஏற்க அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்று அந்த கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.

இந்த விவகாரத்தில் அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் நிலவியது. அந்த சமயத்தில் திடீரென மன்மோகன் சிங்கை சோனியா பிரதமர் ஆக்கினார். இது இந்திய அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பு முனையாகும்.

சோனியா பிரதமர் பதவி ஏற்காதது காங்கிரசில் அதிர்ச்சியையும்,  மற்ற கட்சிகளிடம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. அப்துல்கலாம் சட்ட ரீதியாக ஏற்படுத்திய முட்டுக்கட்டைகளால் தான் சோனியா பிரதமர் ஆக முடியவில்லை என்ற வதந்தி பரவியது. ஆனால் அதில் கொஞ்சமும் உண்மை இல்லை என்று அப்துல்கலாம் எழுதியுள்ள "டர்னிங் பாயிண்ட்ஸ்'' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அப்துல்கலாம் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

ஹார்பர் காலின்ஸ் வெளியிட்டுள்ள அந்த புத்தகத்தின் 135-வது பக்கத்தில் "முரண்பட்ட முடிவுகள்'' என்ற தலைப்பில் அப்துல்கலாம் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அதில் அப்துல்கலாம் எழுதி இருப்பதாவது:-

2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றதும், சோனியாவை பாராளுமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்தனர். இதை அறிந்ததும் ஆட்சி அமைக்க வருமாறு சோனியாவுக்கு அழைப்பு விடுத்து ஜனாதிபதி மாளிகையில் கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்த சமயத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், பல அமைப்புகளின் தலைவர்கள் என்னை சந்தித்தனர். சோனியாவுக்கு பூர்வீகம் இத்தாலி, எனவே அவரை பிரதமர் பதவிக்கு ஒத்துக்கொள்ளாதீர்கள் என்று வற்புறுத்தினார்கள்.

சிலர் இந்திய அரசியல் சட்டத்தை மேற்கோள் காட்டினார்கள். இது எனக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நான் சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தேன். சோனியாவை பிரதமர்  பதவியில் அமர்த்த தீர்மானித்தேன். அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை கூட செய்து விட்டேன்.

இந்த நிலையில்தான் மே 18-ந் தேதி (2004) சோனியாவும், மன்மோகன் சிங்கும் வந்து என்னை சந்தித்தனர். அப்போது சோனியா என்னிடம் மன்மோகன்சிங்கை பிரதமர் பதவியில் அமர்த்தும்படி கூறினார். உண்மையிலேயே எனக்கு அது மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது. 
எனவே ஆட்சி அமைக்க வரும்படி மன்மோகன்சிங் பெயரில் வேறு ஒரு கடிதம்  தயாரிக்கப்பட்டது. சோனியா முடிவால்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது. சோனியாவை பிரதமர் ஆக்கக்கூடாது என்று எனக்கு நேரில் மட்டுமல்ல இ-மெயில் வாயிலாகவும் நிறைய பேர் என்னிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கைகளும் எதிர்ப்புகளும் சட்டத்துக் குட்பட்டவை அல்ல என்பது எனக்கு தெரியும். எனவே சோனியாவை பிரதமர் பதவியில் அமர்த்த நான் தயாராக இருந்தேன். அவர் பிரதமர் பதவியை விரும்பி, தன்னை பதவியில் அமர்த்தும்படி கோரிக்கை விட்டிருந்தால் எனக்கு வேறு வழியே இல்லை. சோனியாவை பிரதமர் பதவியில் நியமித்து இருப்பேன்.

இவ்வாறு அப்துல்கலாம் கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி ஜனாதிபதியாக இருந்த போது எடுத்த மேலும் பல கடினமான முடிவுகள் மற்றும் சந்தித்த சவால்களையும் தனது டர்னிங் பாயிண்ட்ஸ் புத்தகத்தில் அப்துல்கலாம் விளக்கமாக எழுதியுள்ளார். இந்த புத்தகம் விரைவில் விற்பனைக்குவர உள்ளது.      

No comments

Powered by Blogger.