கிழக்கின் அடுத்த முதலமைச்சர் யார்..?
(முக்கிய குறிப்பு - கட்டுரையாளரின் அபிப்பிராயங்கள் மற்றும் எதிர்வுகூறல்களுக்கு எமது இணையம் எவ்விதத்திலும் பொறுப்பு அல்ல என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்)
அப்துல் ரசாக்
கடந்த மார்ச் 22 யில் இலங்கைக்கு எதிராக ஐ நா.மனித உரிமைப் பேரவையினால் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க தேசிய ஆலோசனைக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா வும் ஏனைய மேற்குலக நாடுகளும் ஒருபுறம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் இந்தியாவும் இலங்கை சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபட வட மாகாண சபைத் தேர்தலையாவது நடாத்தக் கூடாதா என திரை மறைவில் ஆலோசனை கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.
ஜெனீவா தீர்மானத்துக்குப் பின்னர், அரசாங்கமும் சர்வதேச அழுத்தங்களை திசை திருப்புவதற்காக சில மாற்று நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரியவருகிறது. அதன் ஓர் அங்கம்தான் அண்மையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார். இதனால் குறிப்பாக அமெரிக்காவுக்கு இலங்கை மீதிருந்த கோபம் சற்று தனிய ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது . சரத் பொன்சேகாவை விடுவிப்பதற்கான ஒரு நாடகத்தைதான் அமெரிக்கா ஜெனீவாவில் அரங்கேற்றியதோ என்று கூட சில அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகிகின்றார்கள்.
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபட வடக்கு மாகாண சபைத் தேர்தலைநடாத்த வேண்டும் என்ற இந்தியாவின் இரகசிய ஆலோசனையில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்ட அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்தலாமா என்று இப்போது யோசிப்பதாகத் தெரிகிறது. அப்படிஎன்றால், வடக்குத் தேர்தலை நடாத்துவதட்குப் பதிலாக ஏன், இயங்கிக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண சபையைக் கலைத்து அங்கு தேர்தல் ஒன்றை நடாத்தவேண்டும் என்ற ஒரு கேள்வியும் எழுகிறது.
வடக்கு,கிழக்கு தமிழரின் பாரம்பரிய தாயகம்:
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருப்பது தமிழர்களின் இனப்பிரட்சினைக்கான "அரசியல் தீர்வு" ஒன்றை எட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்பதாகும்.தமிழர்கள் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் செறிவாக வாழ்கின்றார்கள். 1987 ஜூலையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் வடக்கும் கிழக்கும் தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்ற (Historical habitation ) ஒரு பிரதேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மட்டுமல்ல சர்வதேசம் கூட வடக்கும் கிழக்கும் " தமிழர் தாயகம்" என்று அறிக்கை விடுவதும் , "தமிழர் தாயகம் அது தமிழ் ஈழ தாயகம்" என்று புலிகளும் புலம் பெயர்ந்தோர்களும் உரக்கக் கத்துவதும் அரசாங்கத்துக்குப் பிடிக்கவில்லை. அண்மையில் லண்டன் வந்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஹில்டன் ஹோட்டலில் தங்கியிருந்த சமயம் புலிகளும் ஆதரவாளர்களும் "வட கிழக்கு நம் தாயகம் அது தமிழ் ஈழத் தாயகம் " என்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ததமை குறிப்பிடத் தக்கது.
ஆதலால், "வடக்கும் கிழக்கும்" என்று இரண்டையும் ஒட்ட வைத்தாட் போல் சகல தரப்பாலும் அடிக்கடி அறிக்கை இடப்படுவதை அரசாங்கம் ஒரு போதும் விரும்பவில்லை . ஆகவே முதற் கட்டமாக "கிழக்கு" தமிழர் தாயகம் இல்லை என்று நிரூபித்துவிட்டால் ஜெனீவாவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் "நல்லிணக்க ஆணைக் குழுவின்" தீர்மானங்களை அமுல்படுத்தவேண்டிய நிர்ப்பந்தம் வந்து அரசியல் தீர்வொன்றுக்கு வரும் பட்சத்தில் வடக்கும் கிழக்கும் சேர்ந்து தமிழர்களின் தாயகம் இல்லை என்று மழுப்பி சர்வதேச அழுத்தங்களை கிடப்பில் போட்டுவிடலாம் என்று அரசாங்கம் நினைக்கின்றது. சரி இப்போது விசயத்துக்கு வருவோம்.
ஏற்கனவே , கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக ஒரு தமிழர் உள்ளார். தற்போது வடக்கில் தேர்தலை நடாத்தினால் அங்கும் ஒரு தமிழர்தான் முதலமைச்சராக வருவார். ஆதலால் இரண்டு மாகாணத்துக்கும் தமிழர்களே முதல் அமைச்சர்களாக உள்ளதால் சர்வதேசம், ஐயத்துக்கு இடமின்றி "வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்தான் " என்ற முடிவுக்கு வந்து விடும். இதனால்தான் அரசாங்கம் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடாத்த பின்வாங்கி, முதலில் கிழக்கில் தேர்தலை நடாத்தி அங்கு ஒரு முஸ்லிம் முதலமைச்சரை உருவாக்கி "கிழக்கு" மாகாணம் தமிழர் தாயகம் இல்லை என்பதை நிரூபித்துவிட்டால் "வட கிழக்கு தமிழர்களின் பாரம்பரியத் தாயகம்" என்ற அடிப்படையில் கொண்டுவரப்படுகின்ற தீர்வு முஸ்தீபுகளுக்கு ஆப்பு வைத்து விடலாம் என்று அரசாங்கம் கருதுகின்றது. பின்னர் வடக்கு மாகாணத் தேர்தலையும் நடாத்தி அரசியல் தீர்வு கண்டுவிட்டோம் என்று காலத்தை ஓட்டப்போவதாகவும் தெரிகிறது.
கிழக்கின் முதலமைச்சர் முஸ்லிமா ?
அப்படிஎன்றால் இதற்குப் பிள்ளையான் அணி விட்டுக் கொடுக்குமா ? ஆம் விட்டுக் கொடுக்கும் . ஜனாதிபதி, முதலமைச்சர் பிள்ளையானை அலரி மாளிகையில் வரவழைத்து தனக்கு இருக்கின்ற இக்கட்டான சூழ்நிலைகளை விளங்கப்படுத்தியன் பின் அதை ஏற்றுக் கொள்ளும்படி செய்திருக்கலாம் . கடந்த முறை முழு உலகும் ஹிஸ்புல்லாவுக்கே முதலமைச்சர் பதவி வழங்கப் பட வேண்டும் என்று கூக்குரலிட்டும் பிள்ளையானுக்கே ஜனாதிபதியின் தனிப்பட்ட முடிவால் வழங்கப்பட்டத்தை பிள்ளையான் நினைவு கூர்ந்திருக்கலாம். அந்த விட்டுக் கொடுப்புக்குப் பதிலாக பிள்ளையானுக்கு எதிர் வரும் பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியலும் தேசிய அமைச்சும் என்ற ஒப்பந்தம் கூட நடந்திருக்கலாம் .
ஆனால்,யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இம்முறை கிழக்கின் முதலமைச்சராக ஒரு முஸ்லிமை பெற்றுக் கொள்வதற்கான எல்லா பிரயத்தனங்களையும் அரசாங்கம் எடுத்தே தீரும் என்று புலம்பெயர் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தியா இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று கதைக்க வரும்போதெல்லாம் அது 1987 யில் செய்து கொள்ளபபட்ட ஒப்பந்த அடிப்படையில் பேசுவதற்கே எப்போதும் பழக்கப்பட்டிருப்பதை ஊடகங்களோடு ஈடுபாடுடையவர்கள் நன்கு அறிவர். ஆதலால், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட இருக்கின்ற "முஸ்லிம் முதலமைச்சர்" ஆனவர் அந்த ஒப்பந்தத்தில் 13 வது திருத்தச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற "காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படல்" என்ற வாசகங்களைக் கண்டுகொள்ளாத ஒருத்தராக இருக்க வேண்டும் என்றும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
ஆதலால் ,முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுப்பதற்கான எந்த ஒப்பந்தத்திலும் அரசாங்கம் கைச்சாத்திடாது என்று அடித்துச் சொல்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். ஏனெனில் முஸ்லிம் காங்கிரசு ஆட்சியமைத்தால் மாகாணம் ஒன்றுக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்க வேண்டுமோ அவை அத்தனையையும் பெற போராடும் என்று அரசாங்கத்துக்கு ஆண்டு காட்ட வேண்டிய அவசியமில்லை. மேலும், தோழமைக் கட்சியான அகில இலங்கை முஸ்லிம் கான்கிரசுக்காவது அந்தப் பதவி கொடுக்கப்படுமா என்றால் அதுவும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அந்தக் கட்சியின் தலைவர் ரிசாத் பதியுத்தீன் அரசாங்கத்துடன் அடிக்கடி சீற்றம் கொள்வதும் அரசாங்கத்தை விட்டு விலக வேண்டி வரும் என்று எச்சரிப்பதும் இந்த முதலமைச்சர் பதவி தொடர்பான இழுத்தடிப்புகள்தான் என்றே அறிக்கைகள் தெரிவிக்கின்றன . பிள்ளையான் அணி கூட தமது கட்சி இந்த முதலமைச்சர் பதவியை விட்டுத்தருவதென்றால் "ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைத்" தவிர வேறு எந்த கட்சிக்கும் அப்பதவி கொடுக்கப்படக் கூடாது என நிபந்தனை விதித்திருக்கவும் வாய்ப்பிருக்கின்றது.
யார் அந்த முஸ்லிம் முதலமைச்சர் வேட்பாளர்?
அரசாங்கம் தனது கட்சியைச் சேர்ந்த ஒருத்தரை வேட்பாளராக நிறுத்துவதில் மற்றக் கட்சிகள் அவ்வளவாக முறன்பட்டுக் கொள்ளாது என்றே தெரிகிறது. தோழமைக் கட்சிகளுக்குக் கொடுக்காமல் அரசாங்கம் தானே எடுத்துக் கொண்டதே என்று மற்ற கட்சிகள் ஆறுதல் அடையவும் வாய்ப்பிருக்கிறத.
அரசாங்கம் தனது கட்சியான சுதந்திரக் கட்சியின் கீழ் இயங்கும் ஒருவரை அதாவது "அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடியவரும் ; கிழக்கு மாகாணம் ஒரு தனி இனத்ததுக்கு மட்டும் சொந்தமானதல்ல" என்ற அடிப்படையில் மக்களுக்கு கருமமாற்றக் கூடியவருமான அரசியல் வேட்பாளர் ஒருவரையே அரசாங்கம் தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
ஆகவே ,அரசாங்கத்தின் இந்த நகர்த்தலில் அல்லது தேடலில், "நாட்டில் தலை விரித்தாடிய பயங்கர வாதத்தை ஒழித்து நாட்டிலுள்ள எல்லா மக்களும் சாந்தியுடனும் சமாதான சௌஜன்யத்துடனும் வாழக் கூடிய வகையில் ஒரு ஏற்பாட்டைச் செய்தவரும், கிழக்கு மக்கள் மட்டுமல்ல உலக மக்களால் அறியப்பட்டவரும், பல பாராளுமன்றங்கள் கண்டவரும், ஜனாதிபதி ஆலோசகராக இருந்தவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும்" ஆன ஏறாவூர் நகர சபைத் தலைவர் "அலி சாஹிர் மௌலானா" கிழக்கின் முதலமைச்சர் வேட்பாளராக ஜனாதிபதியின் கண்களில் சிக்கலாம் என்றே அரசியல் அவதானிகள் ஆரூடம் கூறுகின்றனர்.
அதனால்தான் என்னவோ இவரை மட் புனித மிக்கேல் கல்லூரி முதல் விபுலானந்த இசை நடனக் கல்லூரி போன்ற தமிழ் தளங்கள் வரை பிரதம அதிதி விழாக் காண்கின்றார்களோ தெரியவில்லை. அரசாங்கத்தின் அடுத்த நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
நல்லது. அரசாங்கம் இதுவரை அப்படித்தான் நினைத்ததோ என்னவோ ஆனால் இந்த கட்டுரையை அரசாங்கம் பார்த்தால், இந்த முடிவைத்தான் எடுக்கும் என நினைக்கிறேன். கட்டுரை எழுதிய சகோதரரின் கற்பனை வளத்தை பாராட்டுகின்றேன்.
ReplyDeleteRazaq bhai engkalayum kawanippeerkala
ReplyDeleteஅரசியல் ஆய்வு கட்டுரை பிரமாதம்.
ReplyDeleteகிழக்கில் முஸ்லிம்கள் திருகோணமலை அம்பாறை
ReplyDeleteகாத்தான்குடி. பகுதில் பெருபான்மையாக உள்ளனர் என் கிழக்கில் முஸ்லிம் முதவராக வரகூடாது முஸ்லிகளும் கிழக்கின் மைந்தர்கள் தானே
அப்துல் ரசாக் அவர்களின் ஆய்வு எதிர்வரும் கிழக்கின் சபையையும் அரசாங்கம் கைப்பற்றும் என்ற அடிப்படியில் வரையப்பட்டுள்ளது.
ReplyDeleteகடந்த முறையை விட இம்முறை கிழக்கின் சபை வித்தியாசமான தேர்தலை சந்திக்க இருக்கின்றது.
இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அது நிட்சயமாக தனித்தே போட்டியிடும்.
தமிழ் மக்களை பொறுத்தமட்டில் அதிகப்படியான வாக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வழங்குவர். {கடந்தமுறை தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது}
நாட்டில் விலைவாசி உயர்ச்சி மக்களை இந்த அரசாங்கத்தின் மீது வெறுப்படைய வைத்துள்ளது.
ஆகவே இம்முறை அரசாங்கம் பாரிய வெற்றி ஒன்றினை எதிர்பார்க்க முடியாது.அரசாங்கத்தின் மீது சிங்கள மக்கள் மதத்தியிலும் அதிருப்தி தோன்றியுள்ளது.முஸ்லீம் காங்கிரசை முதலமமைச்சேர் என்ற வலையில் சிக்கி விடாவிட்டால் அரசாங்கம் தோல்வி அடைவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. முஸ்லீம் காங்கிரஸ் கிழக்கை பொறுத்த மட்டில் அதிக வாக்கு வங்கியை கொண்டுள்ளதையும் அண்மையில் அந்தக்கட்சியுடன் மாற்று கட்சியில் இருந்து வாக்கு பலமுள்ள பலர் இணைந்துள்ளத்தையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் முஸ்லீம் காங்கிரசை கைவிட்டு ஒரு விசப்பரிட்சையை செய்யாது என்பதே அநேக ஆய்வாளர்களது கருத்தாகும்.
--கிழக்கின் குரல்--
Ihil 3 karuththukkalayum kaddurai anuppiya Razaq bhai thaan eluthi merukooddiyullaar
ReplyDelete