Header Ads



கல்முனையில் மதுபானசாலை வேண்டாம் - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

அப்துல் ரஹ்மான் பரீத்

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நற்பிட்டிமுனை கிராமத்தின் பிரதான வீதியில் இயங்கிக் கொண்டிருக்கும் மதுச்சாலையில் மது அருந்தும் பிரியர்களினால்  மதக்கலாசார சீரளிவுகளும், இனமோதல்களும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிப்பதனால் அந்த மதுபாவனைச்சாலையை அங்கிருந்து அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட மகஜரொன்றை கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், பளீல் பவுண்டேசன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அம்மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குறிப்பிட்ட மதுச்சாலைக்கு கிழக்கு  புறமாக அம்பலத்தடி ஆலயமும், பொது விளையாட்டு மைதானமும், மேற்குப் புறமாக சிவசக்தி வித்தியாலயம், அல்-அக்ஷா மகா வித்தியாலயமும் தெற்குப் புறமாக வேப்பையடி விநாயகர் ஆலயமும் அண்மித்துள்ளன. ஊருக்கு மத்தியில் கூடிய  இடத்தில் அமைந்துள்ள இந்த மதுச்சாலைக்கு மது அருந்துவதற்காக அயல் அதிகமானோர் வருகின்றனர்.

அவ்வாறானவர்கள் அளவிற்கதிகமாக மதுவை அருந்திவிட்டு பிரதான வீதிக்கு வந்து குழப்பங்களில் ஈடுபடுவதனால் அவ்வீதியால் செல்லும் பிரயாணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் விபத்துக்களும், பலதரப்பட்ட பிரச்சினைகளும் இனரீதியான வாக்குவாதங்களும் ஏற்படுகின்றன.

இந்த கிராமத்திலுள்ள கோயில்கள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் மற்றும் விளையாட்டு கழகங்கள், இளைஞர் அமைப்புக்கள், மாதர் அமைப்புக்கள், சமுர்த்திக் குடும்பங்கள் போன்ற பொது அமைப்புக்களும், மார்க்கப்பெரியார்களும் இந்த மதுச்சாலையை இங்கிருந்து அகற்ற வேண்டுமென சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

பொது இடங்களில் மது அருந்துவது சட்டவிரோதமாக இருந்த போதிலும் அதனை தடுத்து நிறுத்தும் விடயத்தில் சட்டம் தூங்கிக் கொண்டிருக்கின்றது. 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் கல்முனை பிரதேச சபை உறுப்பினராக இருந்த வேளையில் இம்மதுச்சாலைக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது என்றும் அப்படி வழங்கினால் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் மதக்கலாசார சீரளிவுகளும், இனமோதல்களும், சிறுவர் துஷ்பிரயோகங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இந்த நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளதாக கோயில்கள், பள்ளிவாசல்கள்  ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் மற்றும் விளையாட்டு கழகங்கள், இளைஞர், மாதர் அமைப்புக்கள், சமுர்த்திக் குடும்பங்கள் போன்ற பொது அமைப்புக்களும், மார்க்கப் பெரியார்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

1994ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில்  கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.ஆர்.மன்சூர் அமைச்சராக இருந்த போது கல்முனைத் தொகுதிக்குள் மதுச்சாலைகள் திறப்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்காது தடுத்து நிறுத்தினார். இப்பிரதேச தமிழ், முஸ்லிம் மது சாலையை அவ்விடத்திலிருந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும்  அம்மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.