பெற்ற மகனை உங்கள் மகன் இல்லை என்று அறிவிக்க முடியாது - நீதிமன்றம் உத்தரவு
பெற்ற மகனுடன் உறவு இல்லை என்று அறிவிக்க கோரிய தந்தையின் மனுவை தள்ளுபடி செய்து கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. வடக்கு டெல்லியை சேர்ந்தவர் பாபு குரேஷி. அவரது மகன் ஜாவேத். ஜாவேத், காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஜாவேத், அவரது மனைவி ஆகியோருடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று முன்னணி நாளிதழ்களில் குரேஷி விளம்பரம் செய்தார்.
இந்த நிலையில் குரேஷியின் வீட்டில் வந்து ஜாவேத்தின் மனைவி தகராறு செய்தார். இதைத்தொடர்ந்து டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் குரேஷி ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘ என் விருப்பத்துக்கு மாறாக ஜாவேத் திருமணம் செய்து கொண்டார். எனவே ஜாவேதேத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டேன். அவர் என் மகன் இல்லை என்று அறிவிக்க வேண்டும். அத்துடன் என் சொத்துக்களில் ஜாவேத்துக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதையும் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
மனுவை கூடுதல் செசன்ஸ் நீதிபதி அனில் குமார் சிசோதியா தள்ளுபடி செய்து கூறியதாவது: பெற்ற மகனை உங்கள் மகன் இல்லை என்று அறிவிக்க முடியாது. அதற்கு போதுமான முகாந்திரம் இல்லை. ஆனால் நீங்கள் சம்பாதித்த உங்களுடைய அசையும் மற்றும் அசையா சொத்தை நீங்கள்( குரேஷி) உங்கள் விருப்பப்படி கையாளலாம். அதில் உங்கள் மகன் ஜாவேத் எவ்வித உரிமையும் கொண்டாட முடியாது. ஒரு வேளை அது உங்கள் மூதாதையர் சொத்தாக இருந்தால், அதில் உரிமை கொண்டாட ஜாவேத்துக்கு முழு உரிமை இருக்கிறது. இவ்வாறு நீதிபதி அனில் குமார் சிசோதியா கூறினார்.
Post a Comment