Header Ads



ஆயுதக் கலாசாரத்தை மீண்டும் அரங்கேற்ற முயற்சி - யாழ் நீதிவான் மா.கணேசராசா

தமிழ் மக்களின் நிலங்களை இராணுவத்தினர் அபகரிப்பதை எதிர்த்துத் தமிழ்த் தேசிய முன்னணியால் யாழ். நகரில் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டம், ஜனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் மீண்டும் முனைப்புடன் அரங்கேற்றும் முயற்சி என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்று தெரிவித்துள்ளது.

இந்தக் கவனஈர்ப்புப் போராட்டத்துக்கு பொலிஸார் யாழ். நீதிவான் மன்றிடமிருந்து தடையுத்தரவு பெற்றிருந்தனர். இந்தத் தடையுத்தரவை நீக்கக் கேட்டு தமிழ்த் தேசிய முன்னணிசார்பில் மனுச் செய்யப்பட்டது. அந்த மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.  சட்டமுறைகளுக்கு அமைவாக இந்த மனு செய்யப்படவில்லை என்பதால், வழங்கப்பட்ட தடையை மீண்டும் உறுதி செய்வதாக நீதிவான் மா.கணேசராசா தீர்ப்பளித்தார்.

அவரது தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இந்த வழக்கிலுள்ள பிரச்சினையை ஆரோக்கியமான, புத்திசாலித்தனமான, சட்டமுறையான நடவடிக்கைகள் மூலம் அணுகியிருக்க முடியும். ஆவணங்களின் மூலம் உரிய நீதிமன்றின் முன்சென்று தமது உரித்தை நிலைநாட்டியிருக்க முடியும்.

பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதை விடுத்து தேசிய பாதுபாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தை நடத்த முயன்றுள்ளனர்.

அத்துடன் நீதிமன்றக் கட்டளையை அவமதிக்கும் வகையில் கட்டளையைக் கிழித்தெறிந்து, "நீதிமன்றக் கட்டளையை மதிக்கும் இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்'' என்று கோஷமிடப்பட்டதாகவும் மன்று அறிகின்றது.

இதன் மூலம் சட்டத்தினைக் கையில் எடுக்கும் வகையிலும் அதனூடாக மக்களைத் தவறாக வழிநடத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குச் சாட்சியாக எதிர்மனுதாரர்களுக்காக வாதாடும் ஒரு சில சட்டத்தரணிகளும் இருந்துள்ளார்கள்.

இவ்வாறான செயற்பாடுகள் நீதித்துறைக்கு சவால் விடும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் அமையும் என்று மன்று கருதுகின்றது. சட்டத்துறையில் உள்ள இவர்கள் இதனைக் கண்டிக்க முனையாததன் மூலம் அவர்களின் கடப்பாட்டிலிருந்து விலகியிருப்பதுடன் இத்தகைய செயலுக்கு உரமூட்டிதாகவே மன்று கருதுகின்றது.

மக்களின் அவலங்களின் மீது அரசியல் நடத்தி, மீண்டும் இருண்ட யுகத்துக்குள் மக்களை இட்டுச் செல்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் மீண்டும் முனைப்புடன் அரங்கேற்றுவதற்கான முயற்சியாகவே மன்று இதனைக் கருதுகின்றது.

மக்களை அரசியல் பகடைக் காய்களாக்கி அவலங்களின் மீது அரியணை ஏறும் முயற்சி அரங்கேற்றப்பட்டுள்ளது. இனக்குரோதங்களைத் தூண்டி இரத்தம் தோய்ந்த வரலாற்றை மீண்டும் இந்த மண்ணில் மேடையேற்றுவதற்கான முயற்சியை மன்று எந்த வகையிலும் அனுமதிக்காது.

ஆகவே மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் சட்டமுறையற்ற வகையில் செய்யப்பட்ட இந்த விண்ணப்பத்தை மன்று நிராகரிப்பதுடன் ஏற்கனவே வழங்கப்பட்ட தடைக் கட்டளையை மன்று உறுதி செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் மன்றிற்குச் சமூகமளித்திருந்தார்.

No comments

Powered by Blogger.