Header Ads



வடமாகாண தேர்தல் எப்போது..? - பார்த்துக்கொண்டிருப்பதாக கூறுகிறார் அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்காவின் அடுத்த தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் மிசேல் சிசன் கொழும்புக்கான தனது பணியின் போது மனித உரிமைகள் விவகாரத்திற்கு முன்னுரிமை கொடுப்பது தனது நிகழ்ச்சி நிரல் பட்டியலில் முக்கிய இடத்தை வகிக்குமென்று கூறியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டி இருப்பதாகவும் அவர் நேற்று முன்தினம் புதன்கிழமை கூறியுள்ளார். பதிலளிக்கும் கடப்பாடு இல்லாமல் உண்மையான நல்லிணக்கத்தையோ பொதுவான நல்லிணக்கத்தையோ கொண்டிருக்க முடியாது என்று தனது நியமனத்தை உறுதிப்படுத்துவதற்காக செனட்டில் இடம்பெற்ற விசாரணையின் போது மிசேல் கூறியுள்ளார்.

இதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணை அவசியமென ஜனநாயகக் கட்சியைத் சேர்ந்த செனட்டர் ரொபேர்ட் காசே வலியுறுத்தியுள்ளார். “பெறுபேறுகளை உலகம் பார்க்கும் வரை இந்த விவகாரம் இல்லாமல் போய்விடாது’ என்று அவர் கூறியதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது. தனது சொந்த நல்லிணக்க ஆணைக்குழுவானது ஆறு மாதங்களுக்கு முன்னர் முன்வைத்த பரிந்துரைகளை இலங்கை அமுல்படுத்த வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட ரொபேர்ட் காசே ஒரு இலட்சம் தமிழர்கள் இப்போதும் இடம்பெயர்ந்திருப்பதாக சுவிற்சர்லாந்தைத் தளமாகக் கொண்ட உள்நாட்டு இடம்பெயர்வு கண்காணிப்பு நிலையத்தின் புள்ளிவிபரங்களை  ஆதாரமாகக் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் பிரசன்னமானது மீள்குடியேற்றத்திற்குத் தடையாக அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையின் முன்னேற்றத்தை அமெரிக்க பார்த்துக்கொண்டிருப்பதாக மிசேல் சிசன் கூறியுள்ளார். குறிப்பாக வடக்கில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்தல், முன்னாள் போர் வலயங்களில் இராணுவ சூனிய மயமாக்குதல் போன்ற முன்னேற்றங்களை வாஷிங்டன் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சிவில் சமூகத்தின் பாதுகாப்பு சுதந்திர ஊடகம் உட்பட மனித உரிமை விவகாரங்கள் எனது நிகழ்ச்சி நிரலில் முன்னணியில் இருக்குமென்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கையில் அமெரிக்காவின் வர்த்தக நலன்களுக்காக தான் தீவிரமாக செயற்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது நியமனம் உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கைக்கு ஆதரவான எமது முயற்சிகளுக்கு தலைமை தாங்க நான் தயாராக இருக்கின்றேன். நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் ஜனநாயக நிறுவனங்களையும் நடைமுறைகளையும் வலுப்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியைப் பேணவும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் இவற்றை மேம்படுத்தவும் அமெரிக்காவின் தந்திரோபாயமான உதவியைப் பயன்படுத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று மிசேல் சிசன் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.