இலங்கையில் 9 ஊடகவியலாளர்கள் கைது
ஸ்ரீலங்கா மிர்ரர் மற்றும் ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் ஆகிய இரு இணைய தளங்களின் அலுவலகங்களில் பொலிசார் சோதனையிட்டு அவ்விணைய தளங்களின் ஊடகவியலாளர்களைக் கைது செய்தனர். ஊடகவியலாளர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனை நடத்திய போலிசார், கணினிகள் மற்றும் தொலைபேசிகளைக் கைப்பற்றினர் என இந்த சோதனைகளை நேரில் பார்த்தவர்கள் பிபிசியிடம் கூறினர். இந்த இரு இணைய தளங்களின் அலுவலகங்கள் சீல் வைத்து மூடப்பட்டன . ஸ்ரீலங்கா மிர்ரர் இணைய தளத்தின் மூத்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டையும் போலிசார் சோதனையிட்டனர்.
எந்தக் காரணத்துக்காக இந்த சோதனைகள் நடத்தப்பட்டன என்பது தெளிவாகவில்லை. சோதனை நடத்திய ஒரு உயர் போலிஸ் அதிகாரியிடம் சோதனைக்கான காரணத்தை கேட்டதாகவும், இந்த இணைய தளங்கள் அரசுக்கு எதிரான செய்திகளைப் பிரசுரித்ததால், இலங்கைக் குற்றவியல் சட்டம் 118/120ன் கீழ் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகின்றன என்று பொலிஸ் அதிகாரி பதில் அளித்ததாகவும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர பிபிசியிடம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா எக்ஸ் இணைய தளத்தின் தலைமை தொடர்பாளராக இருக்கின்ற மங்கள சமரவீர, இது ஊடக சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றார். இந்த இணைய தளங்கள் எதிர்க்கட்சி ஆதரவு இணைய தளங்கள் என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“ஊடக சுதந்திரம் இலங்கையில் செத்துவிட்ட்து என்பதற்கு இது ஒரு தெளிவான அத்தாட்சி” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க பிபிசி சிங்களப் பிரிவிடம் தெரிவித்தார்.
இந்த வாரம் முன்னதாகத்தான், இலங்கையில் ஐந்து தமிழ் இணைய தளங்கள் தடுக்கப்பட்டன.
கடந்த ஆண்டு நவம்பரில், இலங்கை ஜனாதிபதியைப் பற்றி அவதூறு செய்த்தாகக் கூறி, பல இலங்கை இணைய தளங்கள் தற்காலிகமாக தடுக்கப்பட்டிருந்தன.
Post a Comment