2.725 மாணவர்களின் எதிர்காலம் தப்பியது..!
2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய புதிய இஸட் புள்ளிகள் மீண்டும் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு இஸட் புள்ளிகள் தனித்தனியே வழங்கப்படவேண்டும். இதற்கான சூத்திரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பரீட்சைத் திணைக்களத்துக்கு வழங்கிய இரண்டு வாரங்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மா நாட்டின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்ப குமார, கல்வியமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரட்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் புதிய இஸட் புள்ளிகள் வழங்கப்படவேண்டும். எனினும், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சில விளக்கக்கோரல்கள் தேவைப்படுகிறது என்பதால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளது.
இந்த நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் புதிய இஸட் புள்ளிகளுக்கான சூத்திரத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பரீட்சைத் திணைக் களத்துக்கு வழங்கும்.
இதனடிப்படையிலேயே நடந்து முடிந்த 2011ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளை மீளவெளியிட பரீட்சைத் திணைக்களம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதேநேரம், உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீள்திருத்துவதற்கு விண்ணப்பித்த 1,48,168 மாணவர்களில் 2,725 பேர்களது பெறுபேறுகளில் தரம் மற்றும் புள்ளிகள் மாறியுள்ளன. இம்முறை மீள்திருத்தத்துக்காக விண்ணப்பித்தவர்களுள் 1.84 வீதமான மாணவர்களுக்கே பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
1020 மாணவர்களுக்கு தரங்களும், 1705 மாணவர்களுக்கு புள்ளிகளும் மாறியுள்ளன. இவர்களில் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 1435 பேருக்கும், புதிய பாடத்திட்டத்தின்படி 1290 மாணவர்களுக்கும் பெறுபேறுகள் மாறி வெளியேறியுள்ளன.
2007 ஆம் ஆண்டு மீள்திருத்தத்துக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 3237 மாணவர்களுக்கு பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டது. இது 7.1 சதவீதமாகும்.
அதேபோல் 2008 ஆம் ஆண்டு மீள்திருத்தத்துக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 4289 மாணவர்களுக்குப் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டது. இது 7.07 சதவீதமாகும். கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது மீள்திருத்தத்துக்கு விண்ணப்பித்தவர்களுள் இம்முறை மிகக்குறைந்தளவிலான மாணவர்களுக்கே பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏழு நிலையங்களில் எட்டுக் கட்டங்களாக மீள்திருத்தும் பணிகள் இடம்பெற்றன. சுமார் 1500 பேர் மீள்திருத்தும் பணியில் கடமையாற்றியிருந்தனர். ஒரு விடைத்தாளை ஆகக்குறைந்தது ஐந்துபேர் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தியிருந்ததாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
மீள் திருத்தும் பணிகள் இரண்டு மாதங்களில் பூர்த்திசெய்யப்பட்டு, பெறுபேறுகள் திருத்தியமைக்கப்பட்ட போதும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியிடப்படும் வரை பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை காணப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானதும் அன்றைய தினமே மீள் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகளை வெளியிட்டுள்ளோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
Post a Comment