சந்தர்ப்பவாத அரசியல் ஒரு போதும் நிலைத்து நின்றதாக வரலாறுகள் இல்லை
இர்ஷாத் றஹ்மத்துல்லா
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம், இருப்பு, பாதுகாப்பு, உரிமை சார்ந்த விடயங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தூய்மையுடன் செயற்படுகிறது. முஸ்லிம் சமூகத்தினை அடகுவைத்து அதன் மீது அரசியல் இலாபம் பெற ஒரு போதும் எமது கட்சி நினைத்ததுமில்லை, செயற்படபோவதுமில்லை என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் சில அரசியல் கட்சிகள் எமது சமூகத்தினை வைத்து தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பது கவலையளிக்கிறது என்றும், கூறினார்.
தம்புள்ள கைரியா ஜும்ஆ பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்து தமது கட்சியினது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அன்று தம்புள்ள பள்ளியில் ஏற்பட்ட நிலவரம் குறித்து எமது கட்சியின் ஆதரவாளர்களும் அப்பகுதி முக்கியஸ்தர்களும் எமது தலைமைத்துவத்துடன் தொடர்பு கொண்டனர். அதனையடுத்து உடனடியாக எமது கட்சியின் தலைமைத்துவம் உரிய தரப்புக்கள் உடன் தொடர்பு ஏற்படுத்தி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், சம்பவம் நடைபெற்ற ஸ்தலத்திற்கு விஜயம் செய்து அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடல்களை நடாத்தியதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
மூடப்படிருந்த தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாசல் அன்றைய தினம் திறக்கப்பட்டு தொழுகைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதன் பின்னர் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடன் சந்திப்பை ஏற்படுத்தி இந்த பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களது ஆலோசனையின் பேரிலும் வழிகாட்லிலும், அரசியல் தலைமைகளுடன் பல முறை பேச்சுக்களை நடத்தினோம். இது எமது சமூகத்தை பாதுகாக்க எமக்கு இறைவனால் அளிக்கப்பட்ட அமானிதம் என கருதி எமது கடமைகளுள் ஒன்றாக உணர்ந்து செயற்பட்டு வருகின்றோம்.
ஆனால், எமது சமூகத்தின் பெறுமதியான உணர்வுகளை மதிப்பிறக்கம் செய்து, அதனை அரசியல் சுகபோகங்களுக்காக அடமானம் வைப்பதற்கு எமது கட்சி எவருக்கும் சோரம் போகாது என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உருவாக்கம் முதல் இன்றுவரை எவரையும் காட்டிக்கொடுத்து அரசியல் இலாபங்களுக்காக தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்ததில்லை. சந்தர்ப்பவாத அரசியல் ஒரு போது நிலைத்து நின்றதாக வரலாறுகள் இல்லை என்பதை நன்கு உணர்ந்தவர்களாக எமது கட்சி செயற்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மேலும் தெரிவித்தார்.
Post a Comment