பிரான்ஸின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த முஸ்லிம்கள்..!
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சோஷலிச கட்சி வேட்பாளர் பிராங்காய்ஸ் ஹாலண்டே வெற்றி பெற்றுள்ளார். 1995-க்குப் பிறகு சோஷலிச தலைவர் ஒருவர் பிரான்ஸ் அதிபராக தேர்வாவது இதுவே முதல் முறையாகும்.
பிரான்ஸ் தேசத்தின் பொருளாதார நெருக்கடிகளையும், சர்கோஸி மீதான அதிருப்தியையும் தனக்குச் சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டார் ஹாலண்டே. இந்தத் தேர்தலின் தாக்கம் ஐரோப்பா முழுவதும் எதிரொலிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐரோப்பிய யூனியனின் பொருளாதார திட்டங்களை மறுஆய்வு செய்யப்போவதாக ஏற்கெனவே ஹாலண்டே தெரிவித்துள்ளார். பெரு நிறுவனங்களுக்கும், ஆண்டுக்கு 10 லட்சம் மில்லியன் யூரோவுக்கு அதிகமாக சம்பாதிப்போருக்கும் அதிக வரி விதிக்கப்படும் என்று ஏற்கெனவே அவர் கூறியுள்ளார்.
குறைந்தபட்ச ஊதியம், 60 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமனம், சில ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 62-லிருந்து 60-ஆக குறைப்பது ஆகிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.
பதவியிலிருக்கும் அதிபர் ஒருவர் அடுத்த தேர்தலில் தோற்றுப் போவது 1958-வது ஆண்டுக்குப் பிறகு இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு வலேரி கிஸ்கார்ட் டி'எஸ்டெய்ங் என்ற அதிபர் 1981-ல் நடைபெற்றத் தேர்தலில் சோஷலிச வேட்பாளர் பிராங்காய்ஸ் மிட்டர்ரன்ட் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.
அதேவேளை புதிய பிரான்ஸ் ஜனாதிபதியை தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அந்நாட்டு முஸ்லிம்கள் வழங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பிரான்ஸில் பெரும் எண்ணிக்கையிலான அல்ஜீரிய முஸ்லிம்கள் வாழ்கின்றனர். துருக்கி நாட்டு முஸ்லிம்களும் குறிப்பிடத்தக்க அளவு வாழ்கின்றனர்.
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இலக்குவைத்து முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி பல்வேறு நடவடிக்கைகளளை முடுக்கி விட்டிருந்தார்.
இதன்மூலம் பிரான்ஸ் நாட்டினரின் ஒட்டுமொத்த அதரவை பெறலாமென்று நம்பிய அவர் தேர்தல் நெருங்குகையில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக கூறத்தொடங்கினார். குறிப்பாக கடும்போக்குள்ள முஸ்லிம்கள் சிலரை நாடுகடத்தினார். அறிஞர் யூசுப் அல் கர்ளாவி உள்ளிட்ட முஸ்லிம் பிரமுகர்கள் பிரான்ஸ் வருவதற்கு விதிக்கப்பட்ட தடை, முஸ்லிம் சகோதரிகளின் முகத்தை மூடும் முக்காடு தொடர்பில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லையெனவும் பிரகடனப்படுத்தினார்.
முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான இவரது செயற்பாடுகள் அனைத்தும் முஸ்லிம்களிடையே இவருக்கிருந்த செல்வாக்கை குறைத்ததுடன், மறுபுறம் எதிர் வேட்பாளருக்கு முஸ்லிம்கள் அதிகளவு வாக்களிக்கவும் உதவியது. இதன்மூலம் புதிய பிரான்ஸ் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் முஸ்லிம்கள் தீர்மான சக்தியாக விளங்கியுள்ளனர்.
மேற்சொன்ன காரணங்களுடன் ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி, வேலையில்லா பிரச்சினை, ஆப்கானிஸ்தான் போர்முனையில்
பிரான்ஸ் ராணுவம் தொடர்ந்து நிலை கொண்டிருப்பது போன்றவை இத்தேர்தலில்
எதிரொலித்துள்ளதாகத் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment