Header Ads



தம்புள்ள பள்ளிவாசல் விவகாரமும், மஹிந்தவின் இருமுனை அரசியலும் - தீர்வு எப்போது..??


மானா

எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு வகை அச்சத்துடனேயே நாம் ஐவேளைத் தொழுகைக்காகச் செல்கிறோம், வாழ்கிறோம் !

இலங்கையின் சிறுபாண்மையினத்தினரிடையே, குறிப்பாக இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் பதட்ட நிலையை உருவாக்கியுள்ள தம்புல்லை மஸ்ஜித் தொடர்பான தற்போதைய நிலவரங்களை உலகுக்கு அறியத்தரும் நோக்கில், லண்டன் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் ஊடாக கடந்த ஞாயிறு (29-04-12) இடம்பெற்ற மூன்று மணி நேர விஷேட கலந்துரையாடலின் போது, தம்புல்லை பள்ளிவாயலின் உத்தியோகபூர்வ பேச்சாளராகக் கலந்து கொண்ட ஹரீஸ், தற்போதைய சூழ்நிலை பற்றி விளக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

சர்வதேச கவனத்திற்கு வந்திருக்கும் குறிப்பிட்ட சிக்கல் தொடர்பில் மேலதிகமான குழப்பங்களைத் தவிர்க்கும் நோக்கில், இவ்விடயம் இலங்கை ஜம்இயதுல் உலமாவிடம் கையளிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய அரசியல் நகர்வுகளை அவதானிக்கும் போது பிரதேசவாசிகளின் உரிமைகளும் அபிலாஷைகளும் அலட்சியப்படுத்தப்படுமா எனும் சந்தேகமும் வலுப்பெறுகிறது.

மஸ்ஜித் வரலாறு

தம்புல்லை நகரத்தில் முஸ்லிம்களின் இருப்பு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாகும். சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கையின் வர்த்தகப் பிராயணங்களின் போது, நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பிரயாணிக்கும் பயணர்கள் தங்கிச் செல்லும் ஒரு மத்திய நிலையமாக தம்புல்லை உருவாகி வந்த போது, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஹாஜி, உதுமான் லெப்பை (பேச்சாளர் ஹரீஸ் அவர்களின் பாட்டனார்) முயற்சியின் பலனால் கடந்த 1960 ம் ஆண்டளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இது தவிரவும் சாலையின் மறுபுறம் ஒரு இந்துக் கோயிலொன்று  இருப்பதும், தேர்த்திருவிழாக்கள் விகாரை மகா அதிபதிகளின் நல்லாசிகளுடனேயே இது வரை நடைபெற்று வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, பிரதேச மக்களைப் பொறுத்த வரை இங்கு மூவின மக்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்திருப்பதும், சுமார் 300 - 350 மீற்றர் தொலைவிற்குள் அமையப்பெற்றிருக்கும் மூவின மக்களின் வணக்கஸ்தலங்களும் இதுவரை காலமும் சுமுகமாகவே செயற்பட்டு வந்தமையும் கவனிக்கத்தக்கதாகும்.

எனவே, தற்போது பிரதேசத்தில் நிலவும் இன முறுகல் நிலைக்கான முழுப்பொறுப்பும் சுமங்கல தேரரையே சாருகிறது.

குறிப்பிட்ட வானொலி நிகழ்ச்சியில் பங்கெடுத்து, தகவல் தரும் போது, இதற்கு முன்னர் இவ்வாறான இன முறுகல்கள் பிரதேசத்தில் இடம் பெற்றதில்லை என்பதை விபரமாக சுட்டிக்காட்டிய மேற்படி பேச்சாளர், குறிப்பிட்ட சம்பவம் சாதாரண வாழ்க்கையை வெகுவாகப் பாதித்திருப்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

http://www.youtube.com/watch?v=ntG9qVuV7vg

29-04-12 வானொலி நிகழ்ச்சியிலிருந்து  ஹரீஸன் உரையாடல் பகுதி

எனினும், நாட்டின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச மீது தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும், சுமுகமாக ஒரு தீர்வு மிக விரைவில் கிடைக்கும் என்று முழு நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் அவர் தெளிவாக எடுத்துரைத்தமையை காண முடிகிறது.

அரசியலாக்கப்படுமா ?

 நாட்டின் தலைவர் மீது நம்பிக்கை, நீதியின் மீதான நம்பிக்கை மற்றும் பிரதேச வாதிகளின் ஒத்துழைப்பு என்று அனைத்தும் இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் குறிப்பிட்ட தம்புல்லை பள்ளி விவகாரம் அரசியலாக்கப்பட்டுக்கொண்டிருப்பதை எம்மால் உணர முடிகிறது.

குறிப்பாக, தம்புல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டாரவுடனான அரசின் மேல்மட்ட அதிருப்தியின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் சித்தரிக்கப்படுவதும், இனத்துவேசத்தை சர்வதேச ஊடகங்களில் தேரர் தைரியமாகக் கொட்டித்தீர்ப்பதையும் நன்கு கவனிக்கும் போது, இங்கே பல முனை அரசியல் நாடகங்கள் அரங்கேறும் வாய்ப்பும் காணப்படுகிறது.

அதில் பிரதானமானது, உட்கட்சி சார்ந்ததாக இருப்பினும், முஸ்லிம் அரசியல் வட்டாரத்திலும் இந்த அலை பரவக்கூடியதான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விஜயம் செய்த ரிஷாத் பதியுதீன் மற்றும் அமைச்சர் பவுசி, அலவி மெளலானா தவிர, அசாத் சாலி, ஹிஸ்புல்லா என்று பெருந்தலைகளின் பெயர்கள் இங்கு உலாவுவதும், முஸ்லிம் காங்கிரசுடன் அரச மட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்திருப்பதாக செய்திகள் கசிவதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

தீர்வு என்ன ?

 எந்த அரசியல் பிரதிநிதி, எந்தக் கட்சி இதில் பெரும் பங்கை வகிக்கப்போகின்றது என்பதை விட, இச்சிக்கலின் தீர்வானது தம்புல்லை மக்களின், பள்ளி நிர்வாகத்தின் அபிலாசைகளுக்கும் நியாயமான உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு சாதாரண இலங்கை முஸ்லிமின் எதிர்பார்ப்பாகவும் இருக்கப் போகிறது.

குறிப்பிட்ட கலந்துரையாடலில், இது குறித்து நிகழ்ச்சித் தொகுப்பாளரால் வினவப்பட்ட போது, எங்கள் அனைவர் விருப்பமும் இதே இடத்தில் மஸ்ஜித் இயங்குவதுதான் என்பதைச் சுட்டிக்காட்டிய தம்புள்ளை ஹைரியா மஸ்ஜித் நிர்வாகப் பேச்சாளர்  ஹரீஸ், மாற்றிடம், வசதி வாய்ப்பு என்று பல விடயங்கள் ஏற்கனவே தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அதைப் பிரதேச மக்கள் விரும்பவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, மஸ்ஜித் இதே இடத்தில் தான் இயங்க வேண்டும் எனும் முடிவில் அனைவரும் ஒன்று சேரக் கடமைப்படுகிறோம்.

ஏலவே இவ்விவகாரத்தில் ஜம் இயதுல் உலமாவின் முடிவும் இதுவாகவே இருப்பதனால், இப்போதைக்கு சமூக மட்டத்தில் பிளவுகளற்ற நிலையே தோன்றுகிறது.

எனினும், ஜனாதிபதி மஹிந்தவின் இரு முனை அரசியல் நகர்வில் சில வேளைகளில் முஸ்லிம் கட்சிகள், பிரமுகர்கள், அரசியல் வாதிகள், அவ்வளவு ஏன் ஜம்இயதுல் உலமாவும் கூட மாற்றுத் திட்டமொன்றுக்கு இணங்கக்கூடிய வாய்ப்பு மாத்திரமன்றி அவ்வாறு எதுவும் நடந்து விடுமோ எனும் பயமும் பிரதேசவாசிகள் மற்றும் பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்களிடமும் இருப்பதை நாம் நேரடியாகக்  கேட்டறிந்தோம், வாசகர்களும் இந்த நேர்காணலில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஆதங்கங்களை நேரடியாகவே கேட்டுணரலாம்.

எனவே, எமது முந்தைய பதிவில் சுட்டிக்காட்டியதற்கிணங்க, எதிர்கால ஆபத்து பிரதேச வாசிகளின் அபிலாசைகளுக்கு எதிராக அல்லது இணங்கப்படவைத்த ஒரு தீர்மானமாக மாறுமா என்பதே இன்றைய கேள்வியாகும்.

இது தொடர்பாக அலசப்படின், அது இனங்களில் பலப்பரீட்சையாக இருக்கும் என்பது சாதாரணமாகவே புலப்படும் அதே வேளை, அரசியல் சதுரங்கத்தில் எமது விட்டுக்கொடுப்புகள் மூலம் இன்னுமொரு தடவை இனவிரோதம் வெற்றி வாகை சூடலாம்.

முஸ்லிம்கள் தொழுவதற்கு அந்த இடத்தில் தான் இறைவன் என்றில்லையாகினும், தற்போதய சூழ்நிலையில் இது இந்த நாட்டின் பழங்குடிகளான சோனகர்களை, அவர்களது நாட்டுப்பற்றை, சாதாரண மனித உரிமையையும் தட்டிப்பறிக்கும் செயலாக மாறக்கூடும்.

இலங்கை அரசியல் யாப்பில், நாட்டின் அரசாங்கம் பெளத்தமதத்தைக் கட்டிக்காக்கும் கடமையுடயதாக இருப்பினும், ஏனைய மதங்களுக்கோ வணக்க உரிமைகளுக்கோ பங்கம் விளைவிக்கக் கூடாது என்று உருவாக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய கலந்துரையாடல் பேச்சாளர் திரு லுக்மான் அவர்கள், இன்றைய நிலையில் முஸ்லிம்களின் நிலையானது, ஏன்? இப்படி செய்கிறீர்கள் என்று இரங்கும் நிலையாக இருப்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார்.

உங்களுக்காக ஜெனிவா வந்தோம், எங்களுக்கு இதையா திருப்பித் தருகிறீர்கள்? என்று தமது உரிமைகளை மறந்து இரங்கும் நிலைக்கு இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகம் உந்தப்பட்டுக் கொண்டே செல்வதால், உண்மையான மாற்றம் அங்கிருந்து உருவாக வேண்டும் என்பதை அவர் எடுத்துரைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அதேவேளை, நாட்டுப்பற்றுக்கப்பாற்பட்ட மனித உரிமை விடயத்தில் போதிய கவனம் செலுத்தாமல், தன்னிச்சையாக ஜெனிவாவிற்குக் குரல் எழுப்பச்சென்ற ஜம்இயதுல் உலமா பிரதிநிதிகளின் போக்கை ,கலந்துரையாடலில் பங்கெடுத்த சட்டத்தரணி நிஸ்தார்  வன்மையாகக்  கண்டித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சுதந்திர இலங்கையில் அனைவரும் சமம் எனும் சூழ்நிலையை உருவாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசிடமும், அந்த உரிமையை உணர்ந்து சுதந்திரமான பிரஜையாக வாழும் உரிமை மக்களிடமும் இருக்கும் போது, இவ்விரண்டுக்கும் இடையில் இஸ்லாமிய சமூகத்தைத் தங்கி வாழா நிலைக்கு இட்டுச் செல்லும் பொறுப்பினை அரசியல் காரணிகள் கவனித்திலெடுக்க வேண்டும்.

நேற்றைய அநுராதபுரம் இன்று தம்புல்லை வரை நீண்டிருப்பதும், நாளை அது கதிர்காமம், காலி, மாத்தறை என்று ஒரு சுற்றில் கொழும்பு வந்து சேர்வதற்கு நீண்ட நாட்களாகுமா என்பது புத்திஜீவிகளின் கேள்வியாக இருக்கிறது.

இந்நிலை மாறி, நாட்டின் சகல இன மக்களும் சமவுரிமையுடனும், சுய மரியாதையுடனும் வாழும் நிலையை உருவாக்கித் தருவது நாட்டின் அரசியல் தலைமையிடமே இருக்கிறது, அது நீண்ட காலப் போராட்டம் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.

எனவே, இவ்வாறான இன விரோத செயற்பாடுகள் உடனுக்குடன் பதிலளிக்கப்பட்டு, தீர்வுகள் உடனுக்குடன் காணப்படுவதே காலத்தின் தேவையாகும்.

அந்த வகையில், சட்டத்தில், நீதியில், நீதி அமைச்சில் எங்காவது ஒரு மூலையில் இனவிரோத மதத்துறவிகளை நீதிக்கு முன் நிறுத்தும் சரத்தைக் கண்டறிந்து நீதியை நிலை நாட்டுவது, அதுவும் தற்போது நீதித்துறை அமைச்சராகவும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவராகவும் இருக்கும் ரவுப் ஹக்கீமுக்கும், நீதியை நிலை நாட்ட வேண்டிய அரசின் அங்கமாக இருக்கும் அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் கடமையாகும்.

அநுராதபுர சம்பவத்தைப் பொறுத்தவரை, யாரும் என்னிடம் முறையிடவில்லை என்று எமது நேர்காணலின் போது கருத்துத் தெரிவித்தி அமைச்சர் ரிஷாத், இந்தத்தடவை தானாகவே முன் சென்று களத்தில் நின்றது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். எனினும், அரசியல் காரணங்களிற்காகப் பிரிந்து நிற்காமல் சமூக சார்பில் சேர்ந்து நிற்கும் தார்மீகக் கடமை அனைத்து முஸ்லிம் அரசியல் வாதிகளிடமும் இருப்பதனால், ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டின் அவசியமும் இங்கு உணரப்பட வேண்டும்.

சமூக ஒருங்கிணைப்பு

இலங்கையில் இன்று முஸ்லிம்களாக (மத ரீதியில்) அடையாளப்படுத்தப்படும் பெரும்பான்மையானோர், இன ரீதியாக சோனகர்கள் என்றே அரசியல் யாப்பில், அரச பதிவுகளில், தஸ்தாவேஜுக்களில் அடையாளங்காணப்படுகிறார்கள்.

 எனவே, முஸ்லிம்கள் இலங்கையில் ஒரு தனித்துவமான இனம் என்பது மறக்கப்படலாகாது.

 சோனகர்களில் ஏறக்குறைய அனைவரும் முஸ்லிம்களாகவே இருக்கிறார்கள், அப்படி முஸ்லிமாக இருப்பவர்களுக்கு இஸ்லாம் மனித உரிமை தொடர்பாக கற்பித்துத் தரும் விடயங்களைக் கடைப்பிடிப்பதும், அது சார்ந்து கடமையாற்றுவதும் கூடக் கடமையாகும்.

சமய, சமூக விடயங்கள் சார்பில் மார்க்க அறிவினை வழங்குவது, ஒருங்கிணைப்பது, அது தொடர்பான விடயங்களில் தீர்ப்பளிப்பது போன்ற உயர்ந்த காரியங்களுக்காக முஸ்லிம்களால் ஏகபோகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் உலமா (அறிஞர்கள்) சபை, அரசியல் களத்தில் தம்மை இறக்குவது காலத்தால் தவிர்க்கப்பட வேண்டிய விடயமாகும்.

இந்த அரசியலின் விளைவாக கடந்த காலங்களிலும் போட்டி உலமா சபைகள் உருவானதும், முரண்பாடுகள் இன்னும் நாட்டின் பல பகுதிகளில் காணப்படுவதும் இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.

எனவே, உலமா சபைப் பிரதிநிதிகள் நேரடியாக அரசியல் களத்தில் குதிப்பதைத் தவிர்த்துக்கொள்வதே இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கான சிறந்த வழி காட்டலாக அமைய முடியும்.

மார்க்க அறிஞர் சபை அரசியல் ஆளுமைக்குட்படலாமா இல்லையா என்பதை நன்கறிந்து அது தொடர்பில் எத்தி வைக்கும் ஆலிம்களுக்கு வெளியிலிருந்து யாரும் அறிவுரை சொல்லத் தேவையில்லை, எனவே தான், அரசியல் சர்ச்சைகளுக்குப்பாற்பட்ட சமூக வழி காட்டலை உலமா சபையிடன் முஸ்லிம்கள் வேண்டி நிற்கின்றனர்.

ஆகவே, சமரசமும் சமூக ஒருங்கிணைப்பும் கூட இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம்களின் தேவையாக இருக்கிறது என்பதும் உணரப்பட வேண்டும்.

நன்றி - தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - லண்டன்

No comments

Powered by Blogger.