தம்புள்ள பள்ளி அகற்றப்படுமாயின்...?
ஸிராஜ் எம். சாஜஹான்
பூதாகரமாக உருவெடுத்த தம்புள்ளைப் பள்ளி விவகாரம் ஓரளவு தணிவுக்கு வந்துள்ளது. எனினும் இன்றும் சர்ச்சை முடிவுக்கு வராததால் அடுத்து என்ன, ஏது நடக்குமோ என்ற அச்சமும் கவலையும் இருந்துகொண்டே இருக்கிறது.
புனித பூமியின் எல்லைக்குள் பள்ளி அமைந்திருப்பதால் அதனை அகற்றியே தீருவோம் என முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் இனாமலுவே சுமங்கல தேரரின் தீவிரப் போக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆறுமாத காலம் கொடுத்திருக்கிறோம் அதற்குள் பள்ளி அகற்றப்பட வேண்டும் இன்றேல் போராட்டம் வெடிக்கும் என அவர் அடிக்கடி முழங்கி வருகின்றார்.
அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனும் முஸ்லிம் அமைச்சர்களும் பிரமுகர்களும் பள்ளி பழமைவாய்ந்தது. புனித பூமி பிரகடனத்துக்கு முன்பிருந்து பள்ளி என வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர். நொருக்கப்பட்ட பள்ளியில் மீண்டும் ஜும்ஆ, ஐந்து நேரத் தொழுகைகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கு எந்த இடையூறுகளும் தற்போதைக்கு இல்லை. எல்லாம் சுமுகமாக இடம்பெற்று வருகின்றன. அரச தரப்பிலும் பள்ளி விவகாரத்துக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வொன்று காணப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் தி.மு. ஜயரத்ன பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோர் முஸ்லிம் அமைச்சர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுக்கு சிறந்த தீர்வொன்று பெற்றுத் தரப்படுமென உறுதிமொழி வழங்கியுள்ளனர்.
பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பிரச்சினைக்கு தீர்வு கண்டு இன நல்லிணக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே அரசின் நோக்கமென்றும் அரச தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பாரிய பிரச்சினைகள் பலவற்றிற்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்,தம்புள்ளை விவகாரம் அரசுக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. அரபு, ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியா உட்பட அணிசேரா நாடுகள் பலவற்றிலும் பள்ளி உடைப்பு விவகாரம் குறித்து பெரிதாகப் பேசப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள்கூட இந்த விவகாரத்தை முக்கிய செய்தியாக வெளியிட்டும் பிரசுரித்தும்உள்ளது.
ஜெனீவா பிரச்சினைக்குள் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் அரசுக்கு இது மேலும் நெருக்கடியாக மாறியுள்ளது. இந்த நிலைமையை தணிக்கும் விதத்திலேயே அரசு பள்ளி விவகாரத்துக்கு சுமுகத் தீர்வு பெற்றுத் தரப்படுமென உறுதியளித்துள்ளதாக ஒரு தரப்பினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இது முஸ்லிம் தரப்பினை சமாளிக்கும் செயற்பாடு என்றும் சிலர்வர்ணித்துள்ளனர். ஜனாதிபதியும் பிரதமரும் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தரப்படுமென உறுதியாகத் தெரிவித்துள்ளனர். இதற்கு சாதகமான தீர்வு கிடைக்குமென நம்பிக்கை வைத்துள்ளோம். பள்ளி உடைக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாகவுள்ளோம் என முஸ்லிம் அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் இதே கருத்தையே கொண்டுள்ளது. முஸ்லிம் தரப்புக்கு அரச தரப்புநம்பிக்கையூட்டும் வாக்குறுதி அளித்துள்ளது போல் பௌத்த தேரர்களுக்கும் சாதகமான வாக்குறுதிகளை அரச தரப்பு பெற்றுக் கொடுத்திருக்கலாம்.
அது என்னவாக இருக்கும் என எவருக்கும் தெரியாது. இரண்டு தரப்பினரையும் சமாளிக்கும் போக்கில் அரசின் செயற்பாடுகள் அமையுமாயின் அந்த நிலைமை பயங்கரமானதாகவே இருக்கும். ஏனெனில் ஏதோ ஒரு தரப்புக்கு அநீதியிழைக்கப்படக்கூடும். அது எந்தத் தரப்பாக இருந்தாலும் சரியே.
தம்புள்ளைப் பள்ளி 1963ல் நிர்மாணிக்கப்பட்டதாக பள்ளிவாசல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களையும் அவர்கள் வைத்துள்ளனர். புனித பூமித்திட்டம் 1980களிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் 32 வருடங்களாக அது நடைமுறைக்கு வரவில்லை. இதற்கு முன்பிருந்த தேரர்களும் பிரதேச அமைச்சர் உட்பட்ட அரசியல்வாதிகள் இதில் அக்கறை காட்டவில்லை.
தற்போது பிரதேச அமைச்சர், அரசியல்வாதிகள் மக்களையும் மீறி புனித பூமித் திட்டத்தினை அமுலாக்க முற்பட்டுள்ளனர். இனாமலுவே சுமங்கல தேரர் தலைமையில் இதற்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது எமது புனித பூமி. முஸ்லிம் பள்ளி இங்கிருக்கக்கூடாது. அகற்றப்பட வேண்டும். இதனால் தான் ஜும்ஆத் தொழுகைக்கு வந்தவர்களையும் விரட்டியடித்துவிட்டு காவி உடை சண்டித்தனம் புரிந்தது. இந்த சண்டித்தனம் இன்னும் முற்றுப்பெறவில்லை.எந்த நேரமும் மீண்டும் வரலாம் என்ற அச்சமும் உள்ளது.
எனினும் அரசு பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண முற்பட்டு வருகிறது. தற்போது வெசாக் பூரணை நாடெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. இக்காலப்பகுதியில் இப்பிரச்சினை குறித்து பேச முடியாது. வெசாக் காலம் நிறைவு பெற்றதும் இரு தரப்பிலும் கலந்துரையாடி மிகச் சிறந்ததொரு தீர்வு காணப்படும் என்பது அரச மட்டக் கருத்து. அரச மட்டத்தில் மேற்கொள்ளப்படும்இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. நல்லதொரு முடிவு கிடைக்க வேண்டும். முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு இது.
எது எப்படியிருப்பினும் பள்ளி அங்கிருந்து அகற்றப்படக்கூடாது என்பது முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு. முஸ்லிம் அமைச்சர்களும் ஜம்மியத்துல் உலமாவும் இதில் உறுதியாக உள்ளனர். இந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாக அமையக்கூடாது. புனித பூமியையொட்டிய பணிகளை அரசு தாராளமாக மேற்கொள்ளலாம்.
பள்ளி அந்த இடத்திலேயே இருக்க வேண்டும். முஸ்லிம் தரப்பு எதிர்பார்க்கும் தீர்வு இதுதான். பள்ளி அகற்றப்படக் கூடாது என்பதற்காக முஸ்லிம்கள் போர்க்கொடி தூக்கினர். கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டித்தனர்.கொழும்பில் ஆர்ப்பாட்டம்நடத்தினர். நோன்பிருந்து பிரார்த்தனை புரிந்தனர். முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவி குறித்து எந்தவித அச்சமும் கொள்ளாது பள்ளி உடைப்புக்கெதிராக குரல்கொடுத்தனர்.
ஜம்மியத்துல் உலமாவும் முஸ்லிம் கவுன்ஸிலும் வரிந்துகட்டிக்கொண்டு முனைப்புடன் காரியத்தில் இறங்கியது. இத்தனைக்கும்பிறகு பள்ளி உடைக்கப்படுமாயின் அத்தனைசெயற்பாடுகளும் வீணாகிவிடும். இந்த உள்ளங்கள் புண்படும்.
Post a Comment