முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை முதலமைச்சராக்கும் முயற்சி..!
கணியன் பூங்குன்றனார்
முஸ்லிம் முதலமைச்சர் என்ற பேச்சு அடிபடத் தொடங்கியவுடனேயே மண்ணின் மைந்தர் தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளிருந்தே குரல் கேட்கத் தொடங்கிவிட்டது. அரசாங்கம் முஸ்லிம் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகின்றது. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது அமைச்சர் ஹக்கீமுக்கோ கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கோ தெரியாமலிருக்கும் என்று ஜனாதிபதியே ஒருபோதும் நம்பமாட்டார். கிழக்கு மாகாணத்தின் மீதும் அங்குள்ள முஸ்லிம்கள் மீதும் அரசாங்கத்துக்குத் திடீரென்று ஏனிந்த அக்கறை என்று அப்பாவித்தனமாகச் சிந்திக்கும் அளவுக்கு அங்குள்ள மக்களும் இல்லை.
முஸ்லிம் முதலமைச்சர் என்ற பேச்சு அடிபடத் தொடங்கியவுடனேயே மண்ணின் மைந்தர் தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளிருந்தே குரல் கேட்கத் தொடங்கிவிட்டது. அரசாங்கம் முஸ்லிம் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகின்றது. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது அமைச்சர் ஹக்கீமுக்கோ கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கோ தெரியாமலிருக்கும் என்று ஜனாதிபதியே ஒருபோதும் நம்பமாட்டார். கிழக்கு மாகாணத்தின் மீதும் அங்குள்ள முஸ்லிம்கள் மீதும் அரசாங்கத்துக்குத் திடீரென்று ஏனிந்த அக்கறை என்று அப்பாவித்தனமாகச் சிந்திக்கும் அளவுக்கு அங்குள்ள மக்களும் இல்லை.
ஆனாலும் அரசாங்கம் துணிந்தே முயற்சிக்கின்றது. அதன் துணிவுக்குப் பின்னால் உள்ள நகர்த்தல்கள் இனப்பிரச்சினைத் தீர்வில் புதிய பரிமாணங்களைத் தோற்றுவிக்கும் அபாயம் கொண்டவை என்பது ஆரம்பத்திலேயே உணரப்பட வேண்டும். வரம்பைக் கட்டிவிட்டால் குறுக்குச்சால் ஓடுவது இலகுவாகிவிடும் என்ற ஆலோசனை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளதன் விளைவே இதுவாகும்.
வடக்கு கிழக்கு என்ற சொற்றொடர் இனிமேலும் பாவிக்கப்படுதல் பொருத்தமற்றது என்பதை அறுதியிட விரும்பும் அரசாங்கத்தின் இந்தப் பொறிக்குள் முஸ்லிம் காங்கிரஸ் சிக்குமா என்பது பற்றிய ஐயங்கள் எழுந்துள்ள நிலையில் கிழக்கு வெளுக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுவோர் இரண்டு பெயர்களைத் தவிர்த்து அது பற்றிப் பேச முடியாது. நேர்மறையாகவோ அன்றி எதிர்மறையாகவோ செல்வநாயகம் என்றும் பிரபாகரன் என்றும் உச்சரிக்காமல் இன்று தமிழர் அரசியல் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. தமிழர் தாயகம், பாரம்பரிய வதிவிடம் என்றளவில் இந்த இருவருமே வடக்கு,கிழக்கை தமிழர்தம் தாயகப் பூமியாகவே பார்த்தார்கள். எனவே இவர்களின் பெயரால் அரசியல் செய்வோரும் அங்ஙனமே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனாலும் ஒரு முக்கிய வேறுபாட்டையும் இங்கே அவதானிக்க வேண்டும். 1976 இன் வட்டுக்கோட்டைப் பிரகடனம் வரை வடக்கு, கிழக்கைத் தமிழ் பேசும் மக்களின் தாயக பூமி என்றே தமிழ்த் தலைவர்கள் குறிப்பிட்டு வந்துள்ளார்கள்.
தமிழ்த் தேசிய அரசியலின் புதிய பரிமாணத்தை அடுத்து முஸ்லிம் தேசியவாதம் ஓர் எதிர்காப்புத் தேசியவாதமாக உருப்பெற்றது என்பதையும் ஏற்றேயாக வேண்டும். உதாரணமாக, திம்புப் பேச்சுவார்த்தையிலோ அல்லது தமிழர் தரப்பால் ஒருமித்து முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளிலோ முஸ்லிம் நலன்கள் உள்ளடக்கப் படாமையையும் வடக்கு,கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் வெளிப்படையாகவே எடுத்த நடவடிக்கைகளையும் இங்கு குறிப்பிடலாம்.
ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதான பேச்சாளராக கிழக்கில் பிரகாசித்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களே முஸ்லிம்களுக்கெனப் புதிய கட்சியொன்றை ஸ்தாபிக்கும் நிலையும் இதனாலேயே ஏற்பட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை. கட்சியை ஆரம்பித்த காலத்தில் அவர் இலங்கையில் முஸ்லிம்கள் தனியான தேசிய இனம் என்றும் அவர்களது சுயாட்சி உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் குரல்கொடுத்து வந்தார்.
ஆனாலும் இலங்கையில் முஸ்லிம்களின் அடையாளத்தை ஸ்ரீலங்காவுடன் சேர்த்துப் பார்க்க விரும்பியதாலோ என்னவோ கட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்று பெயரிட்டார். அதாவது, தனது கட்சிக்குத் தேசிய அடையாளம் ஒன்று இருப்பது அவசியமெனக் கருதினார் போலும். எவ்வாறாயினும் இன்றைக்கும் அஷ்ரப்பின் பெயரைத் தவிர்த்து முஸ்லிம்கள் இலங்கையில் அரசியல் செய்ய முடியாது என்ற நிலைதான் உள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் எத்தனை பிரிவுகளாகப் பிளவுபட்டாலும் அஷ்ரப் என்ற பெயரை உச்சரிக்காமல் அவர்கள் அரசியல் செய்வதில்லை.
ஆனால், அவரைத் தேசிய அரசியலில் முன்னிறுத்தாது இனத்துவத் தலைவராகக் கொண்டே முன்னெடுக்கப்பட்ட அரசியல் இன்று தடம் மாறிப்போய் வெறுமனே இருப்புக்கான அரசியலாக மாறி எப்போதுமே ஆளுங்கட்சியில் தொங்கி நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்த கொள்கை வேட்கையும் துடிப்பும் காணாமல் போய்விட்டதாகக் கட்சிக்குள்ளேயே பலர் கவலையோடுதான் உள்ளார்கள். அதற்கான காரணங்களை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கத்துக்கு அப்பாற்பட்டது.
இந்தியஇலங்கை உடன்படிக்கையில் வடக்கு,கிழக்கு ஆள்புலம் என்பது தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியிலான வாழ்விடம் என்றே அங்கீகரிக்கப்பட்டிருந்தது. தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக இணைவதற்காக சர்வசன வாக்கெடுப்பு கிழக்கு மாகாணத்தில் மட்டும் நடாத்தப்பட வேண்டும் என்றும் இதே உடன்படிக்கையில் ஏற்பாடு செய்யயப்பட்டிருந்தது. அன்றிலிருந்தே இந்த இணைப்பு விவகாரம் என்பது இனப்பிரச்சினையின் பிரதான பேசுபொருளாகி எல்லா விவாதங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிற்று. அத்துடன், இணைப்பு என்று வருமிடத்து கிழக்கில் முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தி அபரிமிதமாக வளர்ச்சியுமடைந்து விட்டது. உண்மையில்; இணைப்பு என்பது முஸ்லிம்களின் கைகளில் தங்கிய விடயமாகியதால், தேசிய அரசியலில் கிழக்கு முஸ்லிம்களின் சக்தியும் அங்கீகரிக்கப்பட வேண்டிய அளவுக்கு உயர்ந்து விட்டது.
தற்காலிக இணைப்பு, நிபந்தனையுடனான இணைப்பு, நிரந்தர இணைப்பு என்று ஒருபுறத்திலும் இணைப்பு அறவே கூடாது என்று மறுபுறத்திலுமாக விடயம் நிரந்தர சூட்டு நிலையில் வைக்கப்பட்டு இருக்கும் வரையில் கிழக்கு முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாகவே நடத்தப்படுவார்கள்.
ஆனால் கட்சி ஆரம்பிக்கப்பட்ட அடிப்படை நோக்கத்திலிருந்து படிப்படியான விலகல் என்பது நிதர்சனமாகி, இன்று மத்திய அரசில் சங்கமிப்பதற்கான போட்டியாகவே கோஷ்டிகள் பிரிந்து நிற்பதைப் பார்க்கின்றோம்.
இந்த நிலையில் தான் முஸ்லிம் முதலமைச்சர் என்ற பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாக்குவங்கியைத் தளமாகக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் எந்தவொரு முஸ்லிம் தலைமையும் அந்தப் பலத்தை வைத்துக்கொண்டு மத்தியில் பதவி பெறுதலையே பிரதான நோக்காகக் கொள்ளத் தொடங்கி விட்டது. இதன் பின்னாலுள்ள யதார்த்த நிலைமையை ஓரளவுக்கு விளங்கிக் கொள்ளவும் முடியும்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை முதலமைச்சராக்கும் முயற்சி என்பது பல மாங்காய்களுக்குக் குறிவைத்து வீசப்படும் ஒற்றைக் கல்லாகும். இதில் முதலில் பலியாகப்போவது, இது வரைகாலமாக விடுக்கப்பட்டு வந்த முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்துக்கான கோரிக்கையாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் தனியொரு கட்சியாகவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வியூகம் அமைத்தோ போட்டியிடலுக்கும் அரசாங்கக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடலுக்கும் இடையில் நிறையவே வேறுபாடுண்டு. முதலாவது தெரிவில், சிறுபான்மையினங்கள் இரண்டும் தமது தனித்துவத்தைத் தக்க வைப்பதில் வெற்றிகாண முடியுமென்பதுடன், அரசுக்குப் பலமான ஒரு செய்தியினையும் விடுக்க முடியும்.
இலங்கையின் இனத்துவக் குழுக்கள் ஒன்றாக்குதலுக்கு (Assimilation) உரியனவல்ல. ஒன்றிணைந்து (Integration) செயற்படவல்லன என்பதே அச்செய்தியாகும்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தமிழரா, முஸ்லிமா முதலமைச்சராக வருவது என்பதல்ல பிரச்சினை. ஆள்புலத்தையும் அடையாளத்தையும் தக்கவைக்கவல்ல விதத்தில் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பதே சிறுபான்மையினங்கள் இரண்டினதும் இருப்புக்கு மிக அவசியமானதாகும். ஆனால் இதுவே கல்லெறிக்கான முதலாவது இலக்காகவும் இருக்கின்றது என்பதை தமிழ், முஸ்லிம் தலைமைகள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தளவில் முஸ்லிம்களது அரசியல் நலன் என்பது முப்பரிமாண நிலைப்பட்டதாகும். இதுவொரு தனித்துவமான நிலைமைதான். கிழக்கிலுள்ள முஸ்லிம்களது அரசியல் நலனும் வடக்கிலுள்ள முஸ்லிம்களது நலனும் ஒரே விதமானவையல்ல. அங்ஙனமே, இவ்விரு மாகாணங்களுக்கும் வெளியிலுள்ள முஸ்லிம்களது அரசியல் நலனும் முன்னைய இரண்டையும் விட வேறானதாகும். இந்த மூன்று நலன்களையும் ஒரே நேரத்தில் சமப்படுத்தி அரசியல் செய்வது என்பது கயிற்றில் நடைபோடுவதாகும். அதனால்தான் முஸ்லிம் தலைமைகள் பல பிளவுகளைச் சந்தித்துள்ளன.
ஒன்றுக்காக இன்னொன்றை விட்டுக் கொடுத்தல் என்று வரும்போது கட்சி பிளவுபடுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. குறிப்பாக, கிழக்கிலுள்ள வாக்குவங்கியைப் பாவித்துச் சமரசஞ் செய்தல் என்பது முஸ்லிம் தேசியவாதிகளால் ஒருபோதுமே ஏற்கப்படுவதில்லை.
மத்தியில் அமைச்சரவையில் பங்குபற்றல் என்பது முஸ்லிம் காங்கிரஸை தேசியக் கட்சியொன்றாகப் பார்ப்பதற்கு உதவி செய்யும். அத்துடன் அது குறிப்பாக வடக்கு,கிழக்குக்கு வெளியில் உள்ள முஸ்லிம்களின் நலனைப் பாதுகாப்பதற்கு அவசியமாகலாம். அதே நேரத்தில் அந்தளவுக்கு அது கிழக்கைப் பொறுத்தளவில் தனித்துவக் கோரிக்கையை மலினப்படுத்தியும் விடும் என்பதையும் ஏற்றாக வேண்டும். உதாரணமாக, தீகவாபி வீடமைப்புத் திட்ட விடயத்தில் திருமதி பேரியல் அஷ்ரப் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் போன்றவை எதிர்காலத்தில் அமைச்சர் ஹக்கீமுக்கும் ஏற்படாது என்பதற்கான எந்த உத்தரவாதமுமில்லை.
இரட்டிப்பு அபாயம் யாதெனில், அதிகாரப் பரவலாக்கத்துக்கு முற்றிலுமே எதிரான மனோபாவங் கொண்ட மத்திய அரசாங்கத்தில் பங்காளியாக இருந்துகொண்டு அதே நேரத்தில் மாகாண சபை நிர்வாகத்தில் எந்தளவுக்குச் சுதந்திரமாகச் செயற்பட முடியுமென்பதற்கு தற்போதைய மாகாண சபைகள் சிலவற்றின் செயற்பாடுகளே சிறந்த உதாரணமாகும்.
தனித் தேசியம் என்ற கோஷத்துடன் களம் புகுந்த காங்கிரஸ் ஓர் அலுவலக சிற்×ழியரைக் கூட நியமிக்கும் அதிகாரமற்ற சபைக்கு முதல்வராவதன் மூலம் தனது தலைவரால் போராளிகள் என்று வர்ணிக்கப்பட்ட தொண்டர்களுக்கு காட்டும் வழி பேரினவாதிகளுடன் சமரசமாவதுதானா என்பதை அமைச்சர் ஹக்கீம் தெளிவுபடுத்த வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியாகப் போட்டியிடுவதோ அல்லது தேர்தலின் பின்னர் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைப்பதோ உறங்கு நிலை மாகாண சபையை இயங்கு நிலைக்கு மாற்ற உதவுமென்பது மட்டுமல்ல காங்கிரஸின் இருப்புக்கும் அவசியமாகும்.
தமிழர்களைப் பொறுத்தளவில் அவர்களது இருப்புக்கும் அடையாளத்துக்குமான அச்சுறுத்தல் என்பதை விடச் சற்று மாறுதலான அச்சுறுத்தலே முஸ்லிம்களின் இருப்புக்கு எதிராகக் காணப்படுகின்றது. முதலமைச்சராவதன் மூலம் இந்த அச்சுறுத்தல்களை நீக்கிவிட முடியாது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அப்படியான ஓர் அச்சுறுத்தலே இல்லை என்று காண்பிப்பதற்கான சாட்சியாக ஒரு முதலமைச்சர் பதவி தேவைதானா என்பதை அமைச்சர் ஹக்கீம் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசிப்பது நன்று.
உண்மையில், அரசாங்கக் கட்சியுடனான கூட்டொன்றின் மூலம் முதலமைச்சரானால் போதும் என்பதே காங்கிரஸின் விருப்பானால், தேசிய அரசியலில் கலந்துவிடாமல் முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இனியும் எக்காரணத்துக்காகத் தேவைப்படுகின்றது என்பதை விளக்க வேண்டியது அநாவசியம் என்ற ஒரு நிலை கிழக்கில் தோன்றக் கூடும்.
இனிப் புள்ளிவிபரங்களைப் பார்ப்போம்:
2007 இல் நடத்தப்பட்ட (அண்ணளவான) மதிப்பீட்டின்படி, கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் 40%, முஸ்லிம்கள் 38%, சிங்களவர் 22%. மூன்று மாவட்டங்களிலும் மூவினத்தவரும் கணிசமான அளவில் இடம்பெயர்ந்திருந்த சூழ்நிலையில் இந்த விகிதாசாரம் கணிக்கப்பட்டது. குறிப்பாகத் திருகோணமலையில் தமிழர்களின் இடப்பெயர்வு சரியாக 50% ஆக இருந்தது. தற்போது இந்த விகிதாசாரங்கள் மாறுபட்டிருக்கலாம். ஆனாலும் மீளக்குடியமர்தல் என்பது திருகோணமலையில் மிகவும் மந்தகதியில் உள்ளதை அவதானிக்க முடியும்.
2008 மே மாதத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் (1978 க்குப் பின்னர் இலங்கையில் நடத்தப்பட்ட தேர்தல்களில் மிக மோசமான தேர்தல் என்று சர்வதேச நெருக்கடிகள் குழுவினால் அறிக்கையிடப்பட்டது) அரசாங்கக் கட்சி 52 சதவீத வாக்குகளைப் பெற்றது. தற்போதைய முதலமைச்சர் சந்திரகாந்தன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.
அத்தேர்தலில், அம்பாறை மாவட்டத்திலிருந்து 12, மட்டக்களப்பிலிருந்து 10, திருகோணமலையிலிருந்து 9 என்றவாறாக மொத்தம் 31 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்களில் முஸ்லிம்கள் 12, தமிழர்கள் 11, சிங்களவர் 8 பேர் எனத் தெரிவாகினர். எனவேதான் திருகோணமலையில் மீளக் குடியமர்வு முற்றுப்பெறாத நிலையில் தேர்தல் நடத்தப்பட்டால் இந்த எண்ணிக்கை பெரிதாக மாற்றமடைவதற்கான வாய்ப்பிருக்கப் போவதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் போட்டியிட் டிருக்கவில்லை என்றளவில் பிரதிநிதித்துவம் பற்றிய எதிர்வுகூறல்களை இப்போதைக்குக் கூறல் பொருத்தமாக இருக்காது. எப்படியும் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு அரசாங்கம் பல்வேறு யுக்திகளைக் கையாளும் என்பது மட்டும் தெளிவு.
எப்படியும் முஸ்லிம் காங்கிரஸும் கூட்டமைப்பும் இணைந்து கிழக்கில் ஆட்சியைக் கைப்பற்றுவதை அரசாங்கம் எவ்விதத்திலும் அனுமதிக்க விரும்பாது. அதாவுல்லாக்களும் ஹிஸ்புல்லாக்களும் ஒருபுறத்திலும் பிள்ளையானும் கருணாவும் மறுபுறத்திலுமாக காங்கிர ஸுக்கும் கூட்டமைப்புக்கும் பலத்த நெருக்கடியைக் கொடுக்கையில் யாருடைய சமயோசிதம் ஜெயிக்கும் என்பதற்குக் கட்டியம் கூறப்பட்டமை தான் முஸ்லிம் முதலமைச்சர் பற்றிய அறிவிப்பாகத் தெரிகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டமைக்கான அடிப்படை நோக்கத்தையும், விடுதலைப் புலிகளின் தலைவரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமும் கையெழுத்திட்டு 13 ஏப்ரல் 2002 இல் வெளியிட்ட கூட்டறிக்கையினையும், 29 ஜனவரி 2003 இல் வெளியிடப்பட்ட ஒலுவில் பிரகடனத்தையும், 2006 ஜூலையில் காங்கிரஸின் அரசியலமைப்பு விவகாரக் குழு வெளியிட்ட கொள்கை விளக்க அறிக்கையினையும், 2008 இல் காங்கிரஸ் முன்வைத்த பாரிய தென்கிழக்கு சுயாட்சிப் பிரதேச (Greater South East Autonomous Area) முன்மொழிவினையும் அமைச்சர் ஹக்கீமுக்கு தமிழ் மக்கள் ஞாபகப்படுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிடக் கூடாதென்றால் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இரண்டு தலைமைகளும் கட்டாயம் ஒரு சந்திப்பை நடத்தியே ஆகவேண்டும்.
அதிர்ஷ்டவசமாக, கூட்டமைப்பின் தலைமைக்கும் காங்கிரஸின் தலைமைக்கும் இடையில் நட்புறவொன்று பேணப்பட்டு வருகின்றது. கூட்டமைப்பின் பின்னாலுள்ள புத்திஜீவிகளுக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையிலும் புரிந்துணர்வுகள் உள்ளன. தனிப்பட்ட நட்புறவும் பரஸ்பர கௌரவமும் இந்த மட்டத்தில் பேணப்பட்டு வருவது மிகவும் ஆரோக்கியமானதே.
கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனும் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமும் இந்த வாய்ப்புகளை தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் பெயரால் உரியவாறு பயன்படுத்துவதற்கான அவசியத் தேவையானது எதிர்பார்த்ததை விடச் சற்று முன்கூட்டியதாகவே தற்போது ஏற்பட்டுவிட்டது.
தன்றுணையின்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்றுணையாக் கொள்கஅவற்றின் ஒன்று.
இன்றுணையாக் கொள்கஅவற்றின் ஒன்று.
Post a Comment