Header Ads



தம்புள்ளை பள்ளி தொடர்பில் சுமூக தீர்வு வேண்டும் - கட்டாரில் வசிக்கும் இலங்கையர் கோரிக்கை

V

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக கட்டாரில் இயங்கும் இலங்கை இஸ்லாமிய நிலையம், மற்றைய இலங்கை சங்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை மஜ்லிஸ் கட்டார் அமைப்பு பொது விழிப்புணர்வு விரிவுரை ஒன்றை ஃபனார் ((FANAR) ) இஸ்லாமிய கலாசார நிலைய கேட்போர்கூடத்தில் நடத்தியது.

இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் தம்புள்ளை பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாயிலைத் தகர்ப்பதற்கு பெரும்பான்மை சிங்கள பௌத்தர்கள் எடுத்த முயற்சியை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் பொறுமை கடைப்பிடிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் சமய ஒற்றுமை நிலைநிறுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் செய்திகளைப் பரப்புவதே இந்த நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாக இருந்தது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, நாட்டுக்காக அவர்கள் அளித்துவரும் பங்களிப்பு, இலங்கையின் தேசிய நலனுக்காக அவர்கள் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வீடியோ காட்சிகள் இந்த நிகழ்ச்சியின்போது ஒளிபரப்பட்டன. தம்புள்ளையில் இடம்பெற்ற சம்பவங்கள், அதனைத் தொடர்ந்து முஸ்லிம் அரசியல் தலைவர்களதும் அரசாங்க அமைச்சர்களதும் பிரதிபலிப்புகள் அடங்கிய காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வின்போது இலங்கை மஜ்லிஸ் கட்டார் அமைப்பின் தலைவர் ஹஸிம் ஹம்ஸா உட்பட பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.

ஹம்ஸா தனது உரையில், சகல சமூகத்தினரதும் சமய உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும் எனவும் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் நிலவிவரும் வரலாற்று சிறப்புமிக்க உறவுகளைப் பாழாக்க முயற்சிக்கும் மிதவாதிகளின் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வொன்றினை காணுமாறு கோரி இலங்கை முஸ்லிம் சமூகம் சார்பில் கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் ஊடாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த (ஏப்ரல்) 26ஆம் திகதி கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்ட இந்த நிலைமையினால் இஸ்லாமியர்கள் அடைந்த துயரங்களை எடுத்துக் கூறிய இலங்கை இஸ்லாமிய நிலையத் தலைவர் ஸியாஉடின் மதானி, அகில இலங்கை ஜம்மியத்துல்லாஹ் உலமா சபையினர் வெளியிட்ட அறிக்கையையும் சபையில் வாசித்துக் காட்டினார்.

இந்த நிகழ்வில் கட்டாரில் வாழும் பெருந்தொகையான இலங்கையர்கள் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. நல்ல முயற்சி ,உலக நாடுகள் முழுவதும் வாழக்கூடியவர்கள் இதே மாதிரி முயற்சிகள் செய்தால் நல்லது .
    ஜசக்கலாஹ் ஹைர்.
    Meeraan

    ReplyDelete

Powered by Blogger.