மத அடிப்படைவாதத்துக்கு எதிராக ஒன்றிணைவோம்..!
(03.05.2012 ஆம் திகதிய விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)
இலங்கையின் மத சகிப்புத் தன்மை தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஆழமாக சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவம் வலியுறுத்திச் சென்றிருப்பதாகவே தெரிகிறது.
அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கை ஒரு பௌத்த நாடு என்கின்ற போதிலும் இந்நாட்டில் பல்லின, மத, கலாசாரங்களைப் பின்பற்றுகின்ற மக்கள் வாழ்கின்றார்கள் என்பதையும் அவர்கள் அனைவருக்கும் தத்தமது மதங்களையும் கலாசாரங்களையும் பின்பற்றுவதற்கான உரிமை இருக்கின்றது என்பதையும் அரசியலமைப்பு எந்த இடத்திலும் மறுக்கவில்லை.
இருந்தபோதிலும் போர் முடிவுக்கு வந்தபிற்பாடு தீவிரமடைந்துள்ள பௌத்த பேரினவாதப் போக்குக்கு எதிராக சகல மக்களும் தத்தமது குரல்களை உயர்த்தி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் இலங்கையின் மத சகிப்புத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் தம்புள்ளை சம்பவம் வெகுவாகவே உணர்த்திச் சென்றுள்ளது எனலாம்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அநுராதபுரத்தில் 400 வருடங்கள் பழைமைவாசூந்த 'தர்கா' ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையில் சென்ற குழுவினரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவமானது நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்திருந்த போதிலும் பெரும் வீச்சில் அதற்கு எதிரான குரல்கள் ஓங்கியொலித்திருக்கவில்லை.
ஆனாலும் தம்புள்ளை சம்பவம் இடம்பெற்ற உடனேயே அது தொடர்பில் மேற்கிளம்பிய பாரிய எதிர்ப்புணர்வானது இன்று முஸ்லிம்களை மாத்திரமன்றி இந்த நாட்டில் வாழுகின்ற பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரையும் இது பற்றிச் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டியிருக்கிறது.
போர் முடிவுக்கு வந்த பிற்பாடு நாட்டின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் புதிதாக முளைத்ததுடன் இதற்கு முழுமையான அரசாங்க அனுசரணையும் வழங்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி அவ்வப்போது எழுந்த தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்புகளும் கண்டுகொள்ளப்படாதுவிடப்பட்டன.
அதே போன்றுதான் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு எதிராகவும் குறிப்பாக தேவாலயங்களின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் சமீப காலமாக அதிகரித்து வரும் பௌத்த பேரினவாதத்தின் தாக்குதல்களும் அராஜக நடவடிக்கைகளும் கிறிஸ்தவ மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் ஏற்பாடு செயப்பட்ட குழு நிலைக் கலந்துரையாடல் ஒன்றில் பரிமாறப்பட்ட கருத்துக்கள் இந்த நாட்டில் எந்தளவு தூரம் ஏனைய சமயங்களும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றன என்பதன் பாரதூரத்தை நன்கு உணர்த்துவதாக அமைந்திருந்தது.
குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற சகல சமயங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் தத்தமது சமயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் தமது சமய செயற்பாடுகளை முன்னெடுப்பதில் எதிர்கொள்ளும் தடைகளையும் ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறியிருந்தனர். இது அங்கு வருகை தந்திருந்த அனைவரும் தமது சமய வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த நாட்டிலிருந்து மத அடிப்படைவாதத்தை துடைத்தெறியவும் மத சகிப்புத் தன்மையை நிலைநாட்டவும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டியதன் அவசியத்தை நன்கு வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.
தம்புள்ளை சம்பவம் பாரியளவில் ஊடக கவனயீர்ப்பைப் பெற்று இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் எனும் அழுத்தத்தை அரசாங்க தரப்புக்கு வழங்கியிருக்கின்றது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அமைப்புகளும் ஒன்றுபட்டு ஒரே தீர்மானத்துடன் இயங்குவதும் சிறந்ததொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றது.
இருப்பினும் முஸ்லிம்களாகிய நாம் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது கொதித்தெழுந்து உரிமைக்குரல் எழுப்பியது போன்றே இந்த நாட்டில் ஏனைய சமயங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படும் போதும் இதேபோன்ற வலிமையுடன் குரல் கொடுக்க முன்வரவேண்டும். அதுவே இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்கள் மத சகிப்புத் தன்மை கொண்டவர்கள் என்பதையும் மத அடிப்படைவாதத்துக்கு எதிரானவர்கள் என்பதையும் உலகுக்கு பறைசாற்றுவதாக அமையும்.
அதேபோன்று முஸ்லிம்களால் ஏனைய சமயங்கள் பாதிக்கப்படாத வண்ணம் தமது செயற்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதும் அவசியமாகும். இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
Post a Comment