Header Ads



யாழ்ப்பாணத்தில் புகையிரதப் பாதைகளை புனரமைக்கும் பணி ஆரம்பம்

யாழ். குடா நாட்டின்புகையிரதப் பாதைகளை புனரமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை  இந்திய நட்புறவின் பிரகாரம் நாட்டின் பல பிரதேசங்களிலும் புகையிரதப் போக்குவரத்துத்  திட்டம் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் வட பகுதிக்கான புகையிரதப் பாதை மீள் புனரமைப்புத் திட்டங்கள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

நீண்டகாலமாக பாவனையில் இல்லாத புகையிரதப் பாதைகளை துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது பளையிலிருந்து காங்கேசன்துறை வரை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மத்திய பொறியியல் உசாத்துணை பணயகத்தின் பொறியியலாளர் சூரியன் தெரிவித்தார்.

புகையிரதப் பாதை அமைக்கப்படவுள்ள நிலப்பகுதியின் பலத்தை  ஆராயும் மண்பரிசோதனையும் செய்யப்பட்டு வரும் அதேவேளை வேகத்தை  அதிகரிக்கும்  நோக்கில் நகர்ப் புறத்திற்கு வெளியே  அமையும் புகையிரதப் பாதைகளின் வளைவுகளை சீர்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பளை தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான புகையிரதப் பாதைக்குத் தேவையான தண்டவாளங்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய  பொறியியல் உசாத்துணை பணியகத்தின் பொறியியலாளர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திற்கும்  கொழும்பிற்கும் இடையிலான புகையிரதப் போக்குவரத்து சேவைகள் 2013 ஆம் ஆண்டளவில் நடைபெறும் என யாழ்.  இந்தியத் துணைத் தூதுவர்  வி. மகாலிங்கம் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும்  இணைக்கும் புகையிரதப் பாதை வவுனியாவில் இருந்தும் மீளமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. வவுனியா நகரிலிருந்து ஓமந்தை வரை அண்மையில் புகையிரதரப் பாதை மீளமைக்கப்பட்ட புகையிரத சேவையும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.