ஒஸாமாவின் ஜனாஸாவைத் தேடி...!
அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட ஒசாமா பின் லாடனின் உடல் இருக்கும் இடத்தை தான் கண்டறிந்துள்ளதாக, பிரபல தொல்பொருள் ஆய்வாளர் பில் வாரன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒசாமா பின்லாடன் (54) கடந்த ஆண்டு மே மாதம் 2ம் தேதி, அமெரிக்காவின் சீல் கடற்படை வீரர்களின் அதிரடி தாக்குதலில் பலியானார். பாகிஸ்தானின் அபோதாபாத்தில் நடந்த இந்த தாக்குதலுக்குப்பின், ஒசாமாவின் உடலை கடலில் வீசி விட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில், பிரபல தொல்பொருள் ஆய்வாளரான பில் வாரன் என்பவர் அமெரிக்கா கடலில் வீசிய ஒசாமாவின் உடல் அடங்கிய பை எங்குள்ளது என தான் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடலில் மூழ்கும் கப்பல்களின் இருப்பிடத்தை கண்டறிந்து அவற்றை மீட்கும் பணியில் நிபுணரான வாரன், ஒசாமா பின் லாடன் கொலை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட சில புகைப்படங்களில் இருந்து ஒசாமாவின் உடலை எங்கு வீசியிருப்பார்கள் என தான் அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து மேற்கே அரபிக்கடலில் 320 கி.மீ., தூரத்தில் ஒசாமாவின் உடல் அடங்கிய பை இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வாரன், வரும் ஜூன் 1ம் தேதி முதல் இதற்கான பணியை தான் துவங்கவுள்ளதாகவும், இதற்கு ஒரு வாரம் முதல் 3 மாதங்கள் வரை தேவைப்படும் எனவும் கூறியுள்ளார். ஒசாமாவின் உடலை தேடும் பணிக்காக 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை செலவிட உள்ளதாகவும் வாரன் கூறியுள்ளார்.
தேசப்பற்று மிக்க அமெரிக்கரான தன் போன்றோருக்கு, ஒசாமா இறந்ததற்கான ஆதாரத்தை அளிக்க ஒபாமா நிர்வாகம் தவறிவிட்டதாக வாரன் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது அஜர்பைஜானில் இருந்த தனது பணிகளை கவனித்து வரும் வாரன், ஒசாமா உடல் தேடும் பணிக்காக ரஷ்யாவிலிருந்து அகழ்வாராய்ச்சி கப்பல் ஒன்றை வாடகைக்கு எடுக்கவுள்ளார். மேலும், இப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னை கொல்லவும், படகை மூழ்கடிக்கவும் அமெரிக்க ராணுவம் முயற்சி செய்யலாம் என தெரிவித்துள்ள வாரன், தனது முயற்சியின் போது பின் லாடனின் உடலை வெளிக்கொண்டு வரப்போவதில்லை எனவும், தனது ஆய்வை முழுவதும் வீடியோ எடுக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும், டி.என்.ஏ., டெஸ்ட் எடுப்பதற்காக பின் லாடனின் உடல் பாகங்களை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளதாக வாரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment