Header Ads



இலங்கை முஸ்லிம் அரசியல் கட்சிகளும், ஸ்ப்பெயின் அனுபவங்களும்..! (வாசிக்கத் தவறாதீர்கள்)


மவ்லவி, முஹம்மது கான் பாகவி 

கி.பி. 710 ஆம் ஆண்டில் வலீத் பின் அப்தில் மலிக் கலீஃபாவாக இருந்த காலத்தில் அண்டலூசியாவில் (ஸ்பெயின்) முஸ்லிம்கள் நுழைந்தனர். அப்போது முஸ்லிம் படைகளின் தளபதியாக இருந்தவர் தாரிக் பின் ஸியாத். படைகளை வழிநடத்தியவர் மூசா பின் நஸீர்.

கி.பி. 755ல் கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானின் கொள்ளுப்பேரர் அப்துர் ரஹ்மான் பின் முஆவியா அண்டலூசியாவில் நுழைந்தார். அப்போது ஆப்பிரிக்க நாடுகளில் இருந்த அவருடைய மாமன்மார்கள் அவருக்கு உதவினர்.
அங்கு அவர் உமய்யாக்களின் ஆட்சிக்குட்பட்ட இஸ்லாமிய தனி நாடு ஒன்றை உருவாக்கினார். பிரஞ்சுக்காரர்களின் நாட்டில் தனிமனிதராக இருந்து இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்கிய இந்த அரபி இளைஞரை – அப்துர் ரஹ்மானை – அவருடைய எதிரிகளில் ஒருவரும் அப்பாசிய்யா கிலாஃபத்தை உருவாக்கியவர்களில் ஒருவருமான அபூஜஅஃபர் மன்சூர் வெகுவாகப் பாராட்டினார். அத்துடன் அப்துர் ரஹ்மானுக்கு ‘குறைஷி வல்லூறு’ என்ற புனைபெயரையும் மன்சூர் சூட்டினார்.

 சோதனை ஆரம்பம் : 

பின்னர் பனூ உமய்யா ஆட்சியாளர்கள் தொடர்ந்து அண்டலூசியாவை ஆண்டனர். கி.பி. 1046ல்தான் சோதனை ஆரம்பமானது. அதாவது இஸ்லாமிய ஆட்சி மேற்கில் உதயமாகி 290 ஆண்டுகளுக்குப் பிறகு உட்பூசல், கருத்து வேறுபாடு, பதவி மோகம் ஆகிய உள்ளறுப்பு வேலைகளால் அண்டலூசியா ஏறத்தாழ 30 குட்டி நாடுகளாகப் பிளவுண்டுபோனது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓர் அமீர்; தனிப்படை; தனி வாழ்க்கை முறை என்று மாறியது. இவர்களுக்கு ‘கோஷ்டி மன்னர்கள்’ என்ற பெயர் நிலைத்தது. அப்படித்தான் பிரிந்தார்களே! ஒழுக்கத்தோடும் மார்க்கப் பிடிப்போடும் நல்லாட்சி தந்தார்களா என்றால், அதுதான் இல்லை. ஆடல், பாடல், இசை என யூதர்கள் விரித்த மோக வலையில் சிக்கினார்கள்.

இந்தத் தான்தோன்றித்தனம், அண்டலூசியாவில் இஸ்லாமிய நாட்டின் அஸ்திவாரத்தையே அசைக்கத் தொடங்கியது; அந்த வலுவான கோட்டையின் அடித்தளத்தைச் செல்லரித்து, உயிரற்ற சடலமாக நிறுத்திவிட்டது. இலேசான காற்று வீசினால்கூட விழுந்துவிடும் பரிதாப நிலையில் நாடு இருந்தது.

இஸ்லாமிய மாநிலங்களின் நிலைமை தலைகீழாக மாறியது; அதன் தொடர்புகள் அறுந்தன. இதை ஸ்பெயின் கிறித்தவர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். கிறித்தவர்களால் முஸ்லிம் ஆட்சியாளர்கள் மோசமாக இழிவுபடுத்தப்பட்டனர்; அவமானம் அடைந்தனர்.
 உதவிய முராவித்கள் :  யூசுஃப் பின் தாஷ்ஃபீன் 

வேறு வழியின்றி, ஆப்ரிக்காவில் இருந்த ‘அல்முராவித்’ வம்ச பெர்பர் கூட்டமைப்பிடம் முஸ்லிம் ஆட்சியாளர்கள் உதவி கேட்டனர். அப்போது முராவித்களின் சுல்தானாக மிகப்பெரும் தளபதி யூசுஃப் பின் தாஷ்ஃபீன் இருந்தார். அவர் ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு உதவ முன்வந்தார்.

கடல் மார்க்கமாக ஒரு பெரும்படையை யூசுஃப் அனுப்பிவைத்தார். தாவூத் இப்னு ஆயிஷா அப்படையின் மாபெரும் தளபதியாக இருந்தார். இப்படை கிறித்தவ படையுடன் மோதியது. காஸ்டில் அரசர் அல்ஃபோன்ஸ் கிறித்தவப் படைக்குத் தலைமை ஏற்றார். வரலாற்றுப் புகழ் மிக்க ‘அஸ்ஸுலாகா’ போர் நடந்தது. ‘அல்முராவித்’ படையினர் மகத்தான வெற்றியை ஈட்டினர். படுகாயமடைந்த அல்ஃபோன்ஸ் வெருண்டோடினார். யூசுஃப் பின் தாஷ்ஃபீன் முஸ்லிம்களின் தலைவரானார். இது நடந்தது கி.பி. 1057ல்.

காலம் உருண்டோடியது. யூசுஃப் பின் தாஷ்ஃபீன் காலம் முடிந்தது. ‘கோஷ்டி மன்னர்கள்’ அன்டலூசியாவில் மீண்டும் பரஸ்பரம் மோதிக்கொள்ளத் தொடங்கினார்கள். அவர்களின் பலம் குன்றியது. முஸ்லிம் மாகாணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கிறித்தவர்களின் கைக்கு மாறின. கிரேனடா (ஃகர்னாத்தா) மாநிலம் மட்டும் எஞ்சியிருந்தது. கி.பி. 1228ஆம் ஆண்டு இம்மாநிலத்தை முஹம்மத் பின் யூசுஃப் பின் நஸ்ர் (பின் அஹ்மர்) உருவாக்கினார்.

ஏறத்தாழ இரண்டரை நூற்றாண்டு காலமாக பின் அஹ்மர் மன்னர்கள், காஸ்டில் கிறித்தவர் அரசர்களுடன் தொடர்ந்து போரிட்டுவந்தனர். அந்தக் கிறித்தவர்கள் கிரேனடாவைச் சுற்றியுள்ள எல்லா நாடுகளையும் கைப்பற்றி, நாலாபுறமும் கிரேனடாவைச் சுற்றிவளைத்துக்கொண்டிருந்தனர்.

என்னதான் இருந்தாலும், விரைவில் கிரேனடா வீழப்போகிறது என்ற உண்மை மன்னர் இளைய அபூஅப்தில்லாஹ்வுக்குப் புலப்பட்டது. இந்நிலையில், காஸ்டில் மன்ன்ன் ஃபெர்டினாண்ட் கிரேனடாவை மூர்க்கமாகத் தாக்கினான். கி.பி. 1490 மார்ச்சில் நாட்டை முற்றுகையிட்டான். இந்த முற்றுகை 22 மாதங்கள் நீடித்தது. இக்காலத்தில் இத்தாலி தயாரிப்பான லோம்பர்டோ வகை ஏவுகணைகளால் கிறித்தவர்கள் தொடர்ந்து தாக்குதல் தொடுத்தனர். இதையடுத்து நகரின் உற்பத்திகள் சிதைந்தன. வருவாய் குறைந்த்து. உணவுப் பொருட்கள் தீர ஆரம்பித்தன. நகர மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கினர்.

உதவியாளர்களின் துரோகம் : 

இந்நிலையில் மன்னர் அபூஅப்தில்லாஹ்வின் உதவியாளர்கள் மன்னருக்குத் துரோகமிழைக்கத் துணிந்தனர். எதிர்த்துப் போரிடுவதில் புண்ணியமில்லை; நகர மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் காஸ்டில்கள் சொல்லும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு நகரத்தை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று வற்புறுத்தினர்.

அப்போது கிரேனடாவை முற்றுகையிட்டிருந்த படைகளில், ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து யூதர்கள் விலைக்கு வாங்கியிருந்த கூலிப்படைகளும் இருந்தனர். அது மட்டுமன்றி, யூதர்களும் லோம்பர்டோ ஏவுகணைகளை வாங்கி, இத்தாலியிலிருந்து அல்பேஸ் மலைத்தொடர் வழியாக கிரேனடா சுற்றுச் சுவர்களுக்குக் கொண்டுவந்து சேர்த்தனர்.

நகரத்தையும் நரக மக்களையும் எதிரிகளிடமிருந்து காக்க வேண்டுமென்றால், எதிரிகளிடம் நகரத்தை ஒப்படைப்பதைத் தவிர அபூஅப்தில்லாஹ்வுக்கு வேறு வழி இருக்கவில்லை. எனவே, பேச்சுவார்த்தை ஆரம்பமானது. மன்னர் மற்றும் கிரேனடா முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் ஒரு பக்கம்; கிறித்தவ மன்னன் பெர்டினாண்ட் இன்னொரு பக்கம்.

முஸ்லிம்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கு ஈடாக, கிரேனடா நகரத்தைக் கிறித்தவர்களிடம் கொடுப்பதென முடிவாயிற்று. முஸ்லிம்கள் தங்கள் ஷரீஅத்தைப் பின்பற்றி நடக்கவும் மார்க்கத்தின் எல்லா நெறிகளையும் கடைப்பிடிக்கவும் முழுச் சுதந்திரம் அளிக்கப்படும்; பள்ளிவாசல்களின் புனிதம் காக்கப்படும்; கிறித்தவனோ யூதனோ முஸ்லிம்களுக்கு எந்தத் தீர்ப்பும் வழங்குவதில்லை... என்றெல்லாம் சமாதான ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.

உடனே மன்னர் அபூஅப்தில்லாஹ், மார்க்க அறிஞர்களையும் அதிகாரிகளையும் கூட்டி ஆலோசனை நடத்தினார். ஒப்பந்த விதிகள் தொடர்பாக விவாதம் நடந்தது. இறுதியில் அனைவரும் இசைவு தெரிவித்தனர்.
 துக்க நாள் பிறந்தது : 

கி.பி. 1492 ஜனவரி இரண்டாம் நாள் அந்தத் துக்க நாள் பிறந்தது. மன்னர் அபூஅப்தில்லாஹ், எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்குத் தடை விதித்தார். நகர வாயில்கள் திறக்கப்பட்டன. இளைய அபூஅப்தில்லாஹ் நகரை ஒப்படைக்கப் புறப்பட்டார். கிறித்தவ அரசன் பெர்டினான்ட், அரசி இசபெல்லா இருவரும் அமர்ந்திருக்க, அருகில் பெரிய கார்டினல் கம்னேஸ் (போப்பைத் தேர்ந்தெடுப்பவர்) இருந்தார். நகரத்தின் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன.
அபூஅப்தில்லாஹ் அழுதுகொண்டே திரும்பினார்; தமது ஆற்றாமையால் நாட்டைக் காக்க முடியாமல், அது பாழடைவதற்கு விட்டுவிட்டு வந்தார். வீடு திரும்பிய அவரிடம் அவர் அன்னை சொன்னார்: ஆண்பிள்ளையாய் நாட்டைப் பாதுகாக்க வக்கில்லாமல், பெண் பிள்ளைபோல அழுதுகொண்டு வருகிறாயே!

கிறித்தவர்கள் அணியணியாய் நகருக்குள் புகுந்தனர். புரியாத பாடல்களைப் பாடிக்கொண்டு ஆட்டம் போட்டனர். சமய குருக்கள் சிலுவைகளைச் சுமந்துகொண்டு முன்னால் சென்றனர். ‘அல்ஹம்ரா’ அரண்மனைக்கு, கிறித்தவ அரசனும் அரசியும் வந்துசேர்ந்தனர்.

கார்டினல் படைவீரர்களுக்குப் பிறப்பித்த முதல் ஆணை என்ன தெரியுமா? அரண்மனையில் பொறிக்கப்பட்டிருந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் அழித்துவிடுங்கள்; அரண்மனையின் பிரதான வாயிலுக்குமேல் வெள்ளிச் சிலுவையை ஏற்றுங்கள் என்பதுதான்.

பின்னர் பாதிரிமார்கள் புடைசூழ கார்டினல் நகரின் பெரிய பள்ளிவாசலுக்குச் சென்றார். பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர்கள் பள்ளிவாசலின் பாங்கு மேடையில் ஏறி, அங்கிருந்த பாங்கு அறையை இடித்தனர்; கயிறுகளில் பெரிய மணியைக் கட்டி மாட்டினர். பாங்கு மேடைக்கும் அதன் தூபிக்கும் மேலே சிலுவையை வைத்தனர்.

கிறித்தவ படையினர், பள்ளிவாசலுக்கு உள்ளே புகுந்து, பள்ளிவாசல் சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்த குர்ஆன் வசனங்கள் எல்லாவற்றையும் அகற்றினர். அதே நேரத்தில், வேறுசிலர் பள்ளிவாசலின் நூலகத்திற்குள் நுழைந்து குர்ஆன் மற்றும் ஹதீஸ் பிரதிகளையும் அபூர்வமான ஃபிக்ஹ் நூல்களையும் எடுத்துவந்து தரையில் கொட்டினர். ஒரு பெருங்குவியல் சேர்ந்தது.

கார்டினலே நேராக வந்து, புத்தகக் குவியலுக்குத் தீ வைத்தார். பொதுவாக, இஸ்லாம் ஒரு மண்ணில் கால் வைத்துவிட்டால், அங்கிருந்து ஒருபோதும் விடைபெறாது என்று சொல்வதுண்டு. அண்டலூசியா மட்டும் இதற்கு விதிவிலக்குபோலும்.
 சாகும்வரை சித்திரவதை : 

கிறித்தவ ஆட்சியாளர்கள் முஸ்லிம் மன்னர் அபூஅப்தில்லாஹ்வுடன் சமாதான ஒப்பந்தம் காண, கிறித்தவ பாதிரிகளும் குருக்களும் அந்த ஒப்பந்தத்தை வெளிப்படையாக மீறினர்; மனித வரலாறு காணாத கொடுமைகளை அரங்கேற்றினர். மங்கோலியர்களான தார்த்தாரியர்களைப் போன்று மக்களை ஒரேயடியாகக் கொல்லவுமில்லை; மற்றவர்களைப் போன்று, மக்களை நாட்டைவிட்டுத் துரத்தவுமில்லை. இவர்கள் ஒரு புது யுக்தியைக் கையாண்டனர். அதுதான், சாகும்வரை சித்திரவதை.

இதற்காக, பாதிரிகள் விசாரணை மன்றங்களை ஏற்படுத்தினர். இவை உண்மையில் சோதனை மன்றங்களாகும். நகர மக்களில் முஸ்லிம்கள் யார்; அரபுகள் யார் என்பதைக் கண்டறிந்து, கிறித்தவர்களாக மாறுமாறு பாதிரிகள் கட்டாயப்படுத்தினர். மறுத்தால், வகைவகையான வன்கொடுமைகளுக்கு முஸ்லிம்களை ஆளாக்கினர்.

ஆரம்பமாக, இருட்டு பாதாள அறைகளில் அடைத்துவைப்பார்கள். அந்த அறைகளின் தரையும் சுவரும் எப்போதும் ஈரமாக இருக்கும். அறைகளுக்குள் பீரங்கி உருளைக் கம்பிகளை விட்டு, தோல்களைக் கிழிப்பர். இரும்புக் கவ்விகளால் சதைகளைப் பிய்த்தெடுப்பர். ஆணிகள் அறையப்பட்ட இரும்பு வளையங்களை, சித்திரவதை செய்யப்படுபவரின் நெற்றியில் மாட்டுவர். ஆணிகள் அவரது தலைக்குள் செல்லுமாறு வளையத்தை இறுக்குவர்.

நகங்களை வேரோடு பிடுங்க சில கருவிகள் இருந்த்தைப் போன்றே, பெண்களின் மார்பகங்களைக் கழற்றவும் கருவிகள் வைத்திருந்தனர். நாக்கு, பல், கண் ஆகிய உறுப்புகளைப் பிடுங்குவதற்கும் அந்த அயோக்கியர்களிடம் விதவிதமான கருவிகள் இருந்தன. சிவக்கவைக்கும் அளவுக்குச் சூடான காலணிகளை அணிவிப்பர். உடலில் சூடு போடுவதற்காக நீளமன கம்பிகளைப் பயன்படுத்தினர்.

சூடு போடப்படும் முஸ்லிம்களின் உடம்பிலிருந்து வெளிவரும் கரிந்த வாடையை நுகர்ந்து பாதிரிகள் குதூகலம் அடைந்தனர். பெரியவர்களை மட்டுமன்றி, சிறுவர்களையும் குழந்தைகளையும்கூட அந்த ஈவிரக்கமற்ற பாவிகள் விட்டுவைக்கவில்லை. குழந்தைகளை நிர்வாணப்படுத்தி, விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தால் உடனே கொலை செய்துவிடுவார்கள். நகரின் பொதுக் குளியலறைகளை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

அரபி மொழியில் பேசுவதற்கும் தொழுவதற்கும் பெண்கள் பர்தா அணிவதற்கும் பாதிரிகள் தடை விதித்தனர். கிறித்தவர்களின் தொப்பியை அணிந்துகொண்டு தேவாலயங்களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்று நிர்ப்பந்தித்தனர். வெள்ளிக்கிழமைகளில் ஜுமுஆ தொழுவதற்கும் தடை விதித்தனர். அன்று வீடுகளில் யாரும் குளிக்கக் கூடாது என்பதும் அவர்களின் கட்டளையாகும்.
  முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் : 

இதற்கெல்லாம் மேலாக, அரசன் பெர்டினான்ட், அரசி இசபெல்லா ஆகியோர் பெயரால், முஸ்லிம்களைக் கொடுமை செய்வதற்குச் சில ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அவற்றில் கி.பி. 1501ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி வெளியான ஆணையும் அடங்கும். முஸ்லிம்கள் யாரும் கிரேனடா நாட்டில் இருக்கக் கூடாது என்பதே அந்த ஆணையாகும். காஃபிர்களைவிட்டு கிரேனடாவைப் பரிசுத்தமாக்குவதற்காக எங்களையே கர்த்தர் தேர்ந்தெடுத்துள்ளார் என்று ஆணையில் அரசனும் அரசியும் குறிப்பிட்டிருந்ததுதான் வேடிக்கையாகும்.

முஸ்லிம்களைக் கிறித்தவர்களாக மாற்றுவது தாமதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, முஸ்லிம்கள் வேறுயாருடனும் தொடர்புகொள்வதற்கு இந்த ஆணை தடை விதித்த்து. கிறித்தவர்களாக மாற்றும் வேலையைச் செய்வோருடனும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது; அந்தக் கிறித்தவர்களின் நம்பிக்கையை முஸ்லிம்கள் கெடுத்துவிடக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம்.

இந்த அரசாணையை மீறுவோர் கொல்லப்படுவார்கள்; அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என மிரட்டலும் விடுக்கப்பட்டது.

கி.பி. 1502ஆம் ஆண்டு பிப்ரவரி 12 செவ்வாய்க்கிழமை ஓர் அரசாணை வெளியானது. முஸ்லிம் ஆண்களில் 14 வயது பூர்த்தியான ஒவ்வொருவரும் பெண்களில் 10 வயது நிறைந்த ஒவ்வொருவரும் வருகின்ற மே முதல் தேதிக்கு முன்பாக கிரேனடா நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டிருந்தது.

கி.பி. 1502 செப்டம்பர் 12ல் மற்றோர் அரசாணை வெளியானது. இரண்டு ஆண்டுகள் கழியாமல் மக்கள் தம் சொத்துகளில் எந்த மாற்றமும் செய்வதற்கு இந்த ஆணை தடை விதித்த்து. மக்கள் காஸ்டில் நாட்டிலிருந்து எந்த முஸ்லிம் நாட்டுக்கும் செல்லக் கூடாது. அரகான், போர்ச்சுகல் ஆகிய கிறித்தவ நாடுகளுக்கு மட்டுமே செல்லலாம்.
  அல்போன்ஸ் மான்ரீக் : 

கார்டினல் கம்னேஸுக்கு அடுத்து அல்ஃபோன்ஸ் மான்ரீக் என்பவன் கார்டினல் பொறுப்பை ஏற்றான். அவனது கொடுமை எல்லை மீறியது. கிறித்தவராக மதம் மாறிய எந்த முஸ்லிமும் முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கத்தைப் புகழ்ந்து பேசினாலோ, இயேசு கடவுள் அல்லர் என்று சொன்னாலோ அவர் முஸ்லிமாக மதம் மாறிவிட்டார் என்றே கருதப்படும் என்று அறிவித்தான் மான்ரீக்.

கிறித்தவராக மாறிய எந்த முஸ்லிமும் இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றினால் ஒவ்வொரு கிறித்தவனும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தூய்மையாக ஆடை அணிவது, ‘பிஸ்மில்லாஹ்’ கூறுவது, பன்றி இறைச்சி சாப்பிட மறுப்பது, குழந்தைகளுக்கு விருத்த சேதனம் செய்வது, அரபிப் பெயர் சூட்டுவது, நோன்பு நோற்பது, தொழுவது, குர்ஆன்மீது சத்தியம் செய்வது போன்ற நடைமுறைகளில் எதைச் செய்தாலும் சாகும்வரை சித்திரவதைதான்.
  நெப்போலியன் படையெடுப்பு

இவ்வாறு தொடர் வேதனைகளை முஸ்லிம்கள் அனுபவித்துக்கொண்டிருந்தனர். கி.பி. 1808ஆம் ஆண்டு நெப்போலியன் காலத்தில் பிரஞ்சுக்கார்ர்கள் ஸ்பெயினைக் கைப்பற்றினர். பிரஞ்சுப் புரட்சியின் தொடக்க காலமான அந்நேரத்தில், ஸ்பெயினில் இருந்த முஸ்லிம்களுக்கெதிரான சட்டங்களை உடனே அகற்ற வேண்டுமென நெப்போலியன் உத்தரவிட்டான்.

இருந்தாலும், ஏழாவது பெர்டினாண்ட் காலத்தில் –அதாவது கி.பி. 1814ஆம் ஆண்டு அதே நெருக்கடி நிலை மீண்டும் அமலுக்கு வந்தது. கொடுமைகள் தொடர்ந்தன. இறுதியாக கி.பி. 1834ஆம் ஆண்டு பிரதிநிதிகள் அவையில் இச்சட்டம் அடியோடு அகற்றப்பட்டது.

இதன் பின்னர்தான் முன்பு அங்கு அரங்கேறிய கொலை, கொடுமை, சொத்துப் பறிப்பு ஆகிய வன்செயல்களின் பட்டியல் வெளியானது.

இந்த வகையில், பெரிய கார்டினல் கம்னேஸ் உத்தரவின்பேரில் மட்டும் 50 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அரசாணையின்பேரில், 31,912 முஸ்லிம்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். 17,659 பேரின் நூல்களும் ஆவணங்களும் எரிக்கப்பட்டன; உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

2,71,450 பேர் பல்வேறு தண்டனைகளுக்கு ஆளாயினர். 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் புலம்பெயர்ந்தனர்.

பிரான்ஸ் ஆய்வு மன்றம் கணக்கெடுத்து வெளியிட்ட அறிக்கையில் முத்தாய்ப்பாக ஒன்றைக் குறிப்பிட்டது. கிறித்தவர்கள் ஆட்சியில் நடந்த கொடுமைகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை; எழுத்துகளுமில்லை. இந்தக் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை கற்பனைகூட செய்ய முடியாது.

ஆக, முஸ்லிம் ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட உட்பூசலும் ஒற்றுமையின்மையும்தான் ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி வீழ்வதற்கும் ஸ்பெயின் முஸலிம்கள் கொடுமைகளை அனுபவித்ததற்கும் காரணமாயின. அத்துடன் முஸ்லிம் ஆட்சியாளர்கள் இஸ்லாத்தை மறந்து மனம்போன போக்கில் தங்களது வாழ்க்கை முறையையும் ஆட்சியமைப்பையும் வகுத்துக்கொண்டதும் இந்தச் சீரழிவுக்குக் காரணமாயிற்று.

இன்றும் முஸ்லிம் நாடுகளில் இதே நிலைதான் காணப்படுகிறது. முஸ்லிம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் எழுச்சியும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டுள்ளன. ஆட்சிக்கு வருபவர்கள் இஸ்லாத்தை முறையாகக் கடைப்பிடித்தால் அல்லாஹ்வின் உதவி நிச்சயமாகக் கிடைக்கும்.

முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் சமூக அமைப்புகளுக்கும் ஸ்பெயின் ஒரு நல்ல பாடமாகும். சிறுசிறு குழுக்களாக இருந்து, தங்களின் வலிமையைச் சிதறடித்துவிடாமல், பொதுப் பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு.

அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் இறைவன் உங்கள் எதிரியை அழித்துவிட்டு, பூமியில் (அவனது இடத்தில்) உங்களை அமரவைக்கக்கூடும். பின்னர் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதை அவன் கூர்ந்து கவனிப்பான். (7:129

5 comments:

  1. கார்டினல் கம்னோஸ் செய்த கொடுமைகளை ஒப்பிட்டு பார்த்தல், ஹிட்லரை வீணாக பலி சொல்கின்றார்கள் என்று புரியும்.


    மன்னார் ஆயரும் கார்டினல் கம்னோஸ் வழி வந்தவரோ?

    ReplyDelete
  2. முஸ்லிம்களுக்காக இருக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு மட்டும் இருக்கும் கட்சிகளும், சொல்லிக்கொண்டும் செயல் பட்டுக்கொண்டும் இருக்கும் கட்சிகளும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலாவது இணைந்து போட்டியிடுகின்றார்களா என்று பார்ப்போம்.

    ReplyDelete
  3. தாத்தாரியர்களினால் நடந்த கொடுமை, ஸ்பெயின் அவலம், தற்போதைய ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா என்ற நாடுகளில் இந்தக் கூட்டங்களினால் தொடரும் வஞ்சிக்கும் ஜனநாயகம் ---இதைப் பேசுவதற்கு யாரும் இல்லை.

    கடலளவு நுரைகளைப்போல, முஸ்லிம்களின் எண்ணிக்கை இருந்தாலும் இதுதான் தொடர்கதை.

    நேட்டோவிலும் கிறிஸ்தவக் கூட்டம், ஐ.நாவிலும் கிறிஸ்தவக் கூட்டம். வீட்டோ அதிகாரமும் இந்தக் கூட்டத்திற்குச் சொந்தம். இவர்கள் எந்தக் கிறிஸ்தவ நாடுகளையும் தாக்குவதில்லை. எந்தப் பொருளாதாரத் தடையையும் மேற்கொள்வதில்லை.

    முஸ்லிம் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை ஐ.நாவின் கிறிஸ்தவக் கூட்டத்தால் பிரஸ்தாபித்தால், அதை அமுல் படுத்துவதற்கு முஸ்லிம் நாடுகளே முன்னணியில். விசுவாசமான முஸ்லிம்கள்?

    சதாமின் காலத்தில் கிறிஸ்தவ ஐ.நாவினால் ஈராக்கிற்கு எதிரான பொருளாதார தடை விதிக்கப்பட்டபோது, முஸ்லிம் நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஆதரித்தன. இதன் கொடுமையினால், பல்லாயிரக்கணக்கான ஈராக்கியக் குழந்தைகள் மாண்டன.

    எந்தளவு தூரத்திற்கு இந்தப் பொருளாதாரத்தடையை ஆதரித்தார்கள் என்றால், ஈராக்கிய ஹஜ் யாத்திரிகள் சவூதியில் வைத்து ஹஜ் செய்ய விடாமல், அவர்களை திருப்பி அனுப்பினர். கிறிஸ்தவ ஐ.நாவின் பரிந்துரைகளுக்கு ஈராக் அடிபணியவில்லை என்று காரணம் வேறு கூறப்பட்டது. விசுவாசமான முஸ்லிம்கள்?

    ஸ்பெயினில் நடந்த கொடுமைகள், அபூகுரைப், குவாண்டனாமோவிலும் நடக்கிறது. நமது சகோதரர்களை விசாரிக்க, முஸ்லிம் நாடுகளே குவாண்டனாமொவிற்கு அனுப்பி வைக்கிறார்கள். விசுவாசமான முஸ்லிம்கள்?

    நாம் முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமையை பிரஸ்தாபிக்கிறோம். பாலஸ்தீனர்களுக்குக் குரல் கொடுக்கிறோம். இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமை எந்தளவு தூரத்திற்கு இருக்கிறது என்று நாம் பாராமுகத்துடன் இருக்கிறோம்.

    அகில இலங்கை மக்கள் காங்கிரசும் முஸ்லிம் காங்கிரசும் ஒற்றுமையுடன் இணைந்து, யாராவது ஒரு முஸ்லிமை முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட அனுமதிப்பார்களா?

    ஸ்பெயினில் ஏற்பட்ட அழிவுகளைப்பற்றி, நாம் கவலைப் படுகிறோம். இலங்கையில் நமக்கு ஏற்பட்ட அழிவுகளைப் பற்றி, மறந்து விடுகின்றோம்.

    நமது உம்மாவின் அவலங்களை கதை கதையாகப் படிக்கிறோம். மற்ற சமூகங்கள் படிப்பினை பெறுவதுபோன்றாவது, நாம் உணர்ந்து கொள்வதில்லை.

    ReplyDelete
  4. ithai keatkum ,waasikkum poluhu kannil kanneer waruhirathu !!!! subahanallah . itdha pandhiyai matra muslim sahothararhalukkum pahirungal , avarhalum unmayyai unarattum insha allah .

    ReplyDelete
  5. manitharhalukkum(muslims) rabbukkkum(allah) idaiyil ulla thodarbu seerahumanal,manitharhalukkum paddaippuhalukkum idaiyil ulla thodarbu seerahum.

    udhaaranam:
    1.khaleefa umar(rali) udaya vaartahyil vattriya nail nadhi perukkeduththu ordiyathu
    2.khaleefa umar bin abdul azeez(rah)udaya kaalaththil oonayum aadum ontraha thanneer kudiththadhu

    enave,nammudaya imanai seerakkum valiyil(rabbudaya thodarbi seerakkum valiyil)eedupadawendum.

    antraya sahabbakkalukku udhavi seytha allah intraikkum udhavi seyyya kaathirukkiran.kavalaikkuriya widayam udhaviyai pera naam thayarahailla.

    enave,naam anaivarum oru ummath, rasool (sal)alaihiwasallam udaya ummath,naam pirindhu widakkoodathu.nammudaya otrrumayyil allahvudaya udhavi irukkiradhu.

    ReplyDelete

Powered by Blogger.