கிழக்கு மாகாண சபை தேர்தல் செப்டெம்பரில்..? முஸ்லிம்களிடம் வாங்கிக்கட்டுமா அரசாங்கம்..??
கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் அந்த மாகாண சபையை கலைத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தேர்தலை நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலுக்காக கிழக்கு மாகாண சபை ஜூன் மாதத்தில் கலைக்கப்படலாமெனவும் தெரிவிக்கப்படும் நிலையில் இத்தேர்தலில் முஸ்லிம்களிடமிருந்து அரசாங்கம் சவாலை சந்திக்கும் வாய்ப்பிருப்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழகப் பெரும, ஏ.எல்.எம். அதாவுல்லா, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரம , கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ,பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் , விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திலேயே கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் சபையை கலைத்து தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பாக ஆராயப்பட்டதே தவிர முதலமைச்சர் வேட்பாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக கலந்துரையாடப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் சபையை கலைக்கக் கூடாது என அண்மையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் கூட்டத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் அது கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலானது முஸ்லிம்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கிழக்கு மாகாண சபையை உடனடியாக கலைத்து அங்கு தேர்தலை நடத்த அரசு முனைவது குறித்து அரசியல் ஆய்வாளர்கள் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர்.
Post a Comment