Header Ads



''உணர்ச்சி வசப்பட்டு சில விடயங்களை பேசியிருப்போம்'' - மேதின கூட்டத்தில் ரவூப் ஹக்கீம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இனநெருக்டித் தீர்வு தொடர்பான விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் கொண்டு வரும் நோக்கில் அக் கட்சியினருடன் பேச்சுகளை ஆரம்பித்திருப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபைத் திடலில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.

“யுத்தத்துக்குப் பின்னரான நிலைமையில் சர்வதேச மட்டத்தில் பாரிய சவால்கள் இருக்கும் நிலையில் முஸ்லிம் கட்சி என்ற வகையில் மிகவும் முக்கிய பாத்திரம் எமக்கு இருக்கிறது. இந்த நாட்டின் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு உதவு நாம் திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

நான் யாருக்கும் ஒழித்து செயற்படவில்லை. நான் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளேன்.  பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தீர்வை நிறைவேற்றிக் கொள்ளவும் அதற்கு அரசுடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கம். அதைத் தவிர இதில் வேறு நோக்கம் எதுவுமில்லை.

சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கொண்டு வருவதன் மூலம் இந்த பேச்சுகளை ஆரம்பிக்க முடியுமென்று நம்புகிறோம். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை என்பதற்காக தெரிவுக்குழுவுக்கு வரமாட்டோம் என்று சொல்லும் சிலரும் இருக்கின்றனர். எனினும் எமக்கு இதில் பாரிய பொறுப்பு இருக்கிறது. இந்த பிரச்சினையைத் தீர்க்க முதலாவது அடியை எம்மால் எடுத்து வைக்க முடியுமென்று நம்புகிறேன்’ என்று அமைச்சர் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்,

“இந்த அரச கூட்டணியின் பங்காளி என்ற வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது. எனினும் அண்மைய சம்பவமொன்றில் உணர்ச்சி வசப்பட்டு சில விடயங்களை  பேசியிருப்போம். அவற்றை ஊடகங்கள் வழமை போல் பிரசாரம் செய்தன. எனினும் அவற்றை சிலர் தங்களுக்கு சார்பாக மாற்றிக் கொள்ள முயற்சித்தனர்.

யுத்தத்துக்கு பின்னரான நிலைமையில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற இந்த அரசுக்கு பூரண ஆதரவு வழங்குவோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டில் அடிப்படை வாதம் தலைதூக்க இடமளிக்க மாட்டோம்’ என்றார்.

No comments

Powered by Blogger.