இலங்கையின் மனித உரிமைகளை பாதுகாப்பதாக கூறுபவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்
சூழ்ச்சிகள், வெளிநாட்டு அழுத்தங்கள் மூலம் நாட்டை கவிழ்க்க ஒரு போதும் இடமளிக்க மாட்டோமென்று நேற்று செவ்வாய்க்கிழமை மே தின உரையில் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் மனித உரிமைகளை பாதுகாப்பதாக கூறுபவர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் குறிப்பிட்டார். கொழும்பு மாநகர சபைத் திடலில் நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
மனித உரிமைகள் என்ற பெயரில் எமது உரிமைகளை , தேசத்தின் உரிமையை உழைக்கும் மக்களின் உரிமைகளை பறித்து விடப் பார்க்கின்றனர்.இந்த நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாக்க இவர்கள் செயற்படவில்லை. இவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். இன்னும் நாம் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருப்பதாக நினைத்துக் கொண்டு ஏகாதிபத்தியத்தின் மூலம் எம்மை அடிபணியச் செய்யப் பார்க்கிறார்கள். அதுதான் அழுத்தங்களை வழங்குகின்றனர்.
நான் 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த அரசாங்கம் ஏப்ரல் மாதத்தில் கவிழ்ந்து விடுமென்று ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் கூறுகின்றனர். எனினும் அவர்கள் கூறும் ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் நாம் பலம்பெற்று முன்னோக்கி வந்திருக்கின்றோம்.
இதனால் தான் வெளிநாட்டுச் சக்திகள் இன்று நாட்டில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தவும் மக்களை பலவீனப்படுத்தவும் முயற்சிக்கின்றன. எனினும் மக்கள் புத்திசாலிகள். அது தான் மக்கள் நாட்டை பாதுகாத்து முன்னேற்றியுள்ளனர்.
கடந்த காலங்களில் சிலர் இந்த நாட்டை குழப்பவும் அதேபோல் குழப்ப முயற்சிப்பவர்களுக்கு உதவியும் செய்தார்கள். இலங்கை என்பது ஆசியாவின் பழைமையான நாடு. வாக்குகள் மூலம் அரசை தோற்கடிக்க மக்களுக்கு உரிமை இருக்கிறது.அதை நாம் ஏற்றும் கொள்கிறோம். அது தான் சர்வஜன வாக்கெடுப்பில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அதுதான் ஜனநாயகம். எனினும் சூழ்ச்சிகள், வெளிநாட்டு சக்திகள் மூலம் நாட்டை கவிழ்க்க இடமளிக்க மாட்டோம்.
சிலர் இன, மத, குல ரீதியாக சிந்தித்து செயற்படுபவர்களாக இருக்கின்றனர். இவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக சிந்தித்து வாழும் காலம் உதயமாகியுள்ளது. அவ்வாறு செயற்பட்டால் இன, மத பிரச்சினைகள் வராது என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்,
“சிலர் இன்று யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டம் நடத்துகின்றனர். அவர்கள் அங்கு மே தினம் கொண்டாடும் அதேநேரம் யாழ்.நூலகம் எரிப்பு, வாக்குகள் கொள்ளை போன்ற தவறுகளுக்கு மன்னிப்பு கோருவார்கள் என்று நம்புகிறோம்.
அவர்கள் யாழ்ப்பாணம் செல்வதையிட்டு நாம் சந்தோசப்படுகிறோம். ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பிரதமராக இருந்த போது போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்தி யாழ்ப்பாணம், கிளிநொச்சி செல்ல கிடைக்கவில்லை. அவர் அநுராதபுரம் கூட அப்போது போகவில்லை. எமது மக்களும் படையினரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றியமையினால் தான் அவர்களால் யாழ்ப்பாணம் சென்று மே தினம் கொண்டாட முடிந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் சிலருக்கு தெரிவதில்லை. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மூடி மறைக்க நினைக்கும் உண்மைகளை உழைக்கும் மக்கள் கண்ணால் காண்கின்றனர் என்றார்.
MUTHALAIK KANNEER VADIPATHIL MAHINDA RAJAPAKSATHAN MUTHAL IDAM
ReplyDelete