Header Ads



''தோல்வியில் முடிந்தது எமது போராட்டம்'' - டாக்டர் ரயீஸின் டயரியிலிருந்து...!

ஒரு நாள் காலை கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் எனது வழமையான வோட் ரவுண்டில் நோயாளிச் சிறுவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காலை 9. 30 மணியளவில்  அம்பியுலன்ஸில்  சைரன் ஒலி நெடிந்துயர்ந்து நிற்கும்  புதிய கட்டிடத் தொகுதியில் பட்டுத் தெறித்தது.  அவசர நோயாளியை வரவேற்கத் தயாராய் இருங்கள் என்பதே அந்த சைரன் ஒலியின் அர்த்தம்.

10 நிமிடங்கள்  சென்றிருக்கும் மூன்று மூன்றரை வயது நிரம்பிய அழகிய ஆண் குழந்தை ஒன்றை Stretcher இல் கிடத்தி எங்கள் வார்ட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அழுதும் அழாததுமாய்  கூடவே  இருந்த அப்பாவித் தாயின் கண்கள் கசிந்து கொண்டிருந்தன.

குழந்தைக்கு என்ன? என்று வழமையான கேள்வி.

"டாக்டர் நேற்று இரவு குழந்தை சுகமாக இருந்தது. இரவு 7. மணிக்கு இரவுச் சாப்பாட்டிற்குப் பின் கடமை முடிந்து வீட்டுக்கு வந்த தந்தை கொண்டுவந்த  பழத்தையும் உண்டுவிட்டு விளையாடிய  களைப்பில்  குழந்தை உறங்கி விட்டது.  வழமை போல்  உறங்கிய  குழந்தையை கிடத்திவிட்டு நாங்களும் உணவு உண்ட பின்  9 மணியளவில் தூங்கிவிட்டோம்.  குழந்தை எங்களோடுதான்  ஒரே அறையில் தூங்கியது. காலையில் எழுப்பிப் பார்த்தோம் குழந்தையின்  வயிற்றுப் பகுதியிலிருந்து இரத்தம் கசிந்து  கொண்டிருந்தது. பேச்சு மூச்சு இல்லாமல் குழந்தை சுயநினைவிழந்த நிலையில் மயக்கமாய்த் தூங்கிக் கொண்டிருந்தது.  எவ்வளவோ எழுப்பிப் பார்த்தோம் எழும்பவில்லை உடனடியாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்தோம்.  வரும் வழியில் குழந்தை சிறுநீர் கழித்தது. சிறுநீரிலும்  இரத்தம்... பயமாக இருக்கிறது டாக்டர், எனது குழந்தைக்கு என்ன நடந்திருக்கிறது?  சுகமாக்க முடியுமா?  ஏன் இப்படி இரத்தம் கசிகிறது?" என்ற பல கேள்விகளுடன் அந்தப் பெற்றோர் அழுது  புலம்பிக் கொண்டிருந்தனர்.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த  இந்தக்  குழந்தையின் தந்தை ஒரு சாதாரண தொழிலாளி.  மூன்று அறைகள் கொண்ட அவர்களின் வீடு சிறியதாக இருந்தாலும் எப்பொழுதும் சுத்தமாக இருக்கும் என்று சொன்னார்கள்.  வீட்டைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில்  ஒரு கற்குவியல்  ஒரு விறகுக் குவியல் தவிர நிலப்பரப்பு சுத்தமானது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென சுகவீனமடைந்ததால்  வீட்டுச் சூழல் தூங்கிய அறை என்பன பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தேவை எங்களுக்கு இருந்தது.

குழந்தையை அவசர சிகிச்சைப்  பிரிவுக்கு (ICU) எடுத்துச் சென்றோம்.  திடீரென குழந்தையில் இவ்வாறு இரத்தம் கசிய மயக்கமடைய ஒரேயொரு முக்கிய காரணம்தான்  இருக்கிறது. அது  விஷப் பாம்புக்கடி. தாயிடமும் தந்தையிடமும் இதுபற்றி விசாரித்தோம். அவர்கள் அதனை முழுமையாக மறுத்து விட்டனர்.

குழந்தை எங்களோடுதான் தூங்கியது, எங்கள் வீட்டில் அவ்வாறு பாம்பு கடித்திருக்க நியாயமில்லை என்று திட்டவட்டமாக அவர்கள் கூறி விட்டனர்.
நாம் மேற்கொண்ட பரிசோதனைகள் எல்லாம் பாம்புக்கடிதான் இதற்குக் காரணம் என சொல்லிக்கொண்டிருந்தன. குழந்தையின் இரத்தம் குப்பியில் பல மணிநேரம் சென்று உறைய மறுத்துவிட்டது. எனவே பெற்றோர் பாம்பு வரவில்லை என மறுத்தபோதும் கூட நாம் பாம்புக் கடிக்குரிய வைத்தியத்தைச் செய்து கொண்டிருந்தோம்.  குழந்தையின் நிலை ஏற்கனவே மோசமான நிலையில் இருந்ததால் குழந்தையின் சுவாசம் தடுமாற்றமடையத் தொடங்கியது. சுவாசத்திற்குப் பொறுப்பான தசை நார்கள் சுருங்கி விரிய மறுத்தன. நாங்களும் விட்டுக் கொடுக்கவில்லை. சுவாசத்தைப் பெற்றுக் கொடுக்க செயற்கைச் சுவாசத்திற்கான இயந்திரத்தை Ventilator குழந்தையுடன் இணைத்தோம். இதற்கிடையில் இதயம் இடறத் தொடங்கியது. நாங்கள் தளராமல் எங்கள்  முயற்சியை மும்முரமாகச் செய்து கொண்டிருந்தோம்.

இவ்வளவும் நடந்து கொண்டிருக்க  வீட்டுக்குச் சென்று குழந்தை உறங்கிய அறையிலுள்ள பொருட்களை வெளியில் இழுத்துப் போட்டு பாம்பு இருக்கிறதா என்று பார்க்குமாறு தந்தையை அனுப்பிவிட்டு நாம் குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தோம்.

ஓர் உயிர் வாழ வேண்டுமா. மரணிக்க வேண்டுமா எனத் தீர்மானிப்பது இறைவன் கையில் இருக்கிறது. வைத்தியர்களின் கடமையெல்லாம் தமக்குள்ள வரையறைக்குள் முடியுமானவரை  முயற்சிப்பது மட்டுமே  என்பதை உணர்ந்திருக்கும் நாங்கள் சென்று கொண்டிருந்த உயிரை  இழுத்துப் பிடிக்க எம்மால் முழு முயற்சியையும்  செய்தோம்.  ஆனால்  இறைவனின் முடிவு அந்த உயிரை எங்களுக்கு விட்டுக் கொடுப்பதாக இல்லை.  இறைவன் அந்த உயிரை  மீண்டும் எடுத்துக் கொண்டால் எங்களால் என்னதான் செய்ய  முடியும் ?

நாங்கள் வைத்தியர்கள். இறைவனுக்கு முன்னால் அப்பாவிகள் !

அந்த மூன்றரை வயதான வாட்டசாட்டமான அழகிய ஆண் குழந்தையை  பிரேத அறைக்குக்  கொண்டு செல்லும்படி கூறிவிட்டு அவசர சிகிச்சைப் பிரிவின் கண்ணாடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்தோம். அந்தக் குழந்தையின் அப்பாவித் தந்தை கையில் ஒரு பையுடன் நின்று கொண்டிருக்கின்றார்.

டாக்டர் இதுதான் என் குழந்தையின் நிலைக்குக் காரணம் என்று சொல்லி உறையை  அவிழ்த்துக் காட்டினார். சுமார் 6 அடி நீளமான புடையன் பாம்பு (Russell Viper). அடித்துக் கொல்லப்பட்டு சுருண்டு கிடந்தது.

அந்தக் குழந்தையோடு இரண்டு மணிநேரம் முயற்சித்தும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே  என்ற கவலை என்னை உறுத்திக் கொண்டிருந்தது.

1 comment:

Powered by Blogger.