Header Ads



தம்புள்ளை வாழ் சிங்கள மக்களதும் அரசியல் தலைமைத்துவத்தினதும் முன்மாதிரி

(மே, 6 ஆம் திகதி வெளியாகிய நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை இங்கு மீள்பதிவிடுகிறோம்)
தம்புள்ளை ஜும்ஆப் பள்ளிவாசல் மீது கடந்த 20ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து நாட்டில் உருவான பதற்ற நிலை தணிந்துள்ள நிலையில் இப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவம் எமது நாட்டு வரலாற்றில் ஒரு கறைபடிந்த
சம்பவமாகும். இனியும் இது போன்ற சம்பவங்கள் எந்த ஓர் இனத்திற்குமுரிய வழிபாட்டுத் தலங்களுக்கு இடம்பெறாதிருப்பதனை உறுதி செய்ய வேண்டும். அதுவே அரசாங்கத்தின் முன்னுள்ள பாரிய பொறுப்பாகும்.

இந்தப் பிரச்சினையின் போது பெரும்பான்மை தம்புள்ளை வாழ் சிங்கள மக்களும் தம்புள்ளை அரசியல் தலைமைத்துவமும் நடந்து கொண்ட முறை பாராட்டுக்குரியது.

தம்புள்ளை வாழ் சிங்கள மக்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டது தமது சமயத்தில் முக்கியமான ஒரு தேரரின் தலைமையிலான குழு என்பதற்காக அவர் பக்கம் சாராது உண்மையின் பக்கம் இருந்தது பாராட்டுக்குரியது.

''நாங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே இந்தப் பள்ளிவாசல் இருக்கிறது'' இந்த பள்ளிவாசல் இருப்பது எங்களுக்குப் பிரச்சினையல்ல' தம்புள்ளை வாழ் சிங்களச் சகோதரர்கள் பலரும் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களே இவை. தமது அயலில் வாழும் சிங்களச் சகோதரர்களது நல்லெண்ணத்தை பெறுமளவில் தம்புள்ளை வாழ் முஸ்லிம்கள் நடந்து கொண்டதாலே இவ்வாறான ஒரு நெருக்கடிக்குப் பின்பும் அவர்களது ஆதரவு வார்த்தைகளை
முஸ்லிம்களுக்குப் பெற முடிந்துள்ளது.

அதேபோன்று தம்புள்ளை தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் செயற்பாடு பரவலான பாராட்டுக்குள்ளாகியுள்ளது. தமது வாக்குகளை எண்ணி என்றும் செயற்படுகின்ற அரசியல்வாதிகள் வாழும் இந்த காலத்தில் அமைச்சர் தென்னகோனின் செயற்பாடு பாராட்டுக்குரியது.

தம்புள்ளையில் பட்டப்பகலில் மேற்கொள்ளப் பட்ட தாக்குதல் குறித்து முஸ்லிம்களின் ஆதரவினைப் பெற்று பாராளுமன்றத்துக்கு சென்ற பலர் அமைதி காக்கும் போது மாத்தளை மாவட்டத்தில் சிறிய எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வாழ்கின்ற நிலையில் கூட தனது வாக்கு வங்கி பற்றிச் சிந்திக்காது தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பாக உண்மையை உலகறியச் செய்த அமைச்சர் ஜனக தென்னகோன் முஸ்லிம் சமூகத்தினது மட்டுமன்றி இந்நாட்டில் நீதி, நேர்மை, சமத்துவத்தை ஆதரிக்கும் சகலரதும்
பாராட்டுக்குள்ளாகியுள்ளார்.

பௌத்த தேரர்கள் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் தவறான முறையில் நடந்து கொண்டவர்கள். கருணை, இரக்கம், சாந்தி சமாதானத்தை வலியுறுத்தி பௌத்த தர்மத்துக்கு இழிவு ஏற்படுத்தும் செயலே என்று ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். தான் பிறப்பதற்கு முன்பே இந்தப் பள்ளிவாசல் இருப்பதாகவும் அமைச்சர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

பள்ளிவாசல் தாக்குதலையடுத்து பௌத்தர்களின் புனித பூமியில் முஸ்லிம்கள் பள்ளிவாசலைக் கட்டியிருக்கின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு அமைச்சர் பதிலளித்து முஸ்லிம் சமூகத்தை காப்பாற்றியுள்ளார்.

நமது நாட்டுக்கு இவ்வாறான அரசியல் வாதிகளே தேவைப்படுகின்றனர். அமைச்சரின் இந்த அறிவிப்பு இந்தப் பிரச்சினையில் கொதிப்படைந்திருந்த முஸ்லிம்களை நிம்மதியடையச் செய்ய உதவியுள்ளது.

முஸ்லிம் சமூகம் தமது பிரச்சினைகளின் போது தமக்காகப் பேசும் மாற்றின சக்திகளது ஆதரவை பெற்றுக் கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும். இந்த விடயத்தில் தம்புள்ளையில் வாழும் மிகச் சிறிய எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரி காட்டியுள்ளார்கள்.

இதேநேரம், இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன் அது பற்றி பேசித்
தீர்த்துக் கொள்ளக்கூடிய ஓர் அமைப்பினை உருவாக்குவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகள் உள்ளன. குறிப்பாக இன்று கத்தோலிக்க வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாகவும் பல இடங்களில். சர்ச்சைகள் உருவாகியுள்ளன.

எனவே வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிப்பது தொடர்பாக ஒரு பொதுவான நடைமுறை உருவாக்கப் பட வேண்டும். எங்காவது பிரச்சினைகள் ஏற்படுமாயின் அது பூதாகாரமெடுக்க முன் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு வழிமுறையை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது.

No comments

Powered by Blogger.