Header Ads



ரவூப் ஹக்கீமுடைய முயற்சி ஆரோக்கியமாக இருக்கவேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களை ஆரம்பிக்க பங்களிப்புச் செய்ய வேண்டுமே தவிர, அதைவிடுத்து தமிழ்க் கூட்டமைப்பை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறச் செய்ய முயற்சிப்பாராக இருந்தால் அது ஆரோக்கியமானதாக இருக்காது என்று கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.யும் அக்கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபைத் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம், பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இன நெருக்கடிக்கான தீர்வை நிறைவேற்றிக் கொள்ளவும் அதற்கு அரசுடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கவும் அக்கட்சியுடன் பேச்சுகளை ஆரம்பித்திருப்பதாகவும் தமிழ்க் கூட்டமைப்பினரை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குக் கொண்டு வருவதன் மூலம் இந்தப் பேச்சுகளை ஆரம்பிக்க முடியுமென்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்ட போது,

"நாம் சந்திக்க இருக்கிறோம். இதன் மூலம் அரசாங்கத்துடனான இருதரப்பு பேச்சுகளைத் தொடர முடிந்தால் நல்லது. அதை விடுத்து பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எம்மைக் கொண்டு செல்ல பேசுவதில் அர்த்தமில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் பாத்திரமொன்றை வகிப்பதென்றால் தமிழ்க் கூட்டமைப்புடன் இரு தரப்பு பேச்சுகளை மீள ஆரம்பிக்க அமைச்சர் ஹக்கீம் அரசாங்கத்துடன் பேச வேண்டும்.  பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான வழியைப் பற்றி பேச வேண்டும்.

அதைவிடுத்து பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எம்மை அழைப்பதற்காக பேசுவது அரசாங்கம் விரும்பும் செயலாகும். அது ஆரோக்கியமாக இருக்காது. அத்துடன் இவ்விடயத்தில் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை' என்று கூறினார்.

தற்போது இடை நிறுத்தப்பட்டிருக்கும் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுகள் மூலம் இணக்கப்பாடொன்றை எட்டியதன் பின்னரே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்போம் என்று தமிழ்க் கூட்டமைப்பு ஏற்கெனவே தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் வரை அரசாங்கம் அக்கட்சியுடனான பேச்சுகளை இடைநிறுத்தி வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.