இலங்கை முஸ்லிம்களின் இஸ்லாமிய சிந்தனையும், தேவைப்படும் சில மாற்றங்களும்..!
எம். எல். எம் சப்ராஸ்
பண்டைய காலம் தொட்டே இலங்கையில் இஸ்லாமிய சிந்தனை காணப்பட்டுவருவதுடன் முஸ்லிம்களும் வாழ்ந்துவருகின்றனர். எங்களையும் இஸ்லாமியர்களாக முஸ்லிம்களாக படைத்த அருள்நிறைந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ். முஸ்லிமாக எம்மை இவ்வுலகில் பிறக்கவைத்ததே அல்லாஹ் எமக்களித்த விலை மதிக்க முடியாத பரிசாகும்.
சர்வதேச நாட்டு முஸ்லிம்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது இலங்கை முஸ்லிம்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள், இஸ்லாத்தை முறையாகப் பின்பற்றுபவர்கள் என்ற ஒரு கருத்து இன்றைய நாட்களில் பரவலாகப் பேசப்படுகின்றது. இது உண்மையான கருத்தா அல்லது தவறானதா என்பதை வல்ல நாயன் அல்லாஹ் தான் அறிவான். உண்மையானதாக இருக்க பிரார்த்திப்போம்.
இலங்கை முஸ்லிம்களின் இஸ்லாமிய சிந்தனைகளை வடிவமைப்பதில் இஸ்லாமிய இயக்கங்கள் தான் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இன்று இலங்கையில் பல இயக்கங்கள் வேலை செய்துவருகின்றன. அனைத்தும் மாற்றத்தை வேண்டி அல்லது சமூக மாற்றத்திற்காக உழைத்துவருகின்றன. பெரும் தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் இயக்கங்களில் பணியாற்றும் தாஈக்களின் பணி பாராட்டப்பட வேண்டியவை, மெச்சப்பட வேண்டியவை.
இஸ்லாம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வந்த மார்க்கம். அது கொண்டுவந்த சட்டங்கள், வழிகாட்டல்கள் ஊடாக உயர்ந்த பண்புகளைக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க விரும்புகின்றது. இம் மாற்றம் தனி நபர் மாற்றத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இவ்வகையில் அந்த சமூகத்தின் அதன் அங்கத்தவர்களின் பேச்சுக்களுக்கும் செயற்பாட்டிற்கும் இடையில் முரண்பாடு காணப்படமாட்டாது. பேசும் விடயங்களை செய்யும் சமூகமாக அது காணப்படும். அதற்கப்பால் பேசுவதை விட செயற்பாட்டிற்கே அச்சமூகம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
இப்பண்பை நாம் ஸஹாபாக்களின் வாழ்க்கையில் காணலாம். அவர்கள் அல்குர்ஆனின் சில வசனங்களை படித்துவிட்டு அவற்றை நடமுறைப்படுத்திக் கொணடதன் பின்புதான் ஏனைய வசனங்களை படிக்க முற்படுவார்கள். இன்று நடைமுறையில் இஸ்லாத்தை அதன் சிறப்பம்சங்களை பேசக்கூடிய எத்தனையோ மனிதர்களை நாம் காணலாம் ஆனால் அந்த விடயங்களை நடைமுறை வாழ்க்கையில் காணமுடியுமான நபர்களின் தொகை மிகவும் குறைவானது. இப்படிப்பட்ட சமூகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. இப்பண்பானது யூதர்களின் பண்பாகவும் காணப்படுகின்றது. எனது, எமது சகோதர, சகோதரிகளின் நிலை என்ன? யா அல்லாஹ் எம்மை நேர்வழியில் நடத்துவாயாக! ஆமீன்.
இன்று எமது நாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் இயக்கங்கள் ஒவ்வொன்றும் தனக்கென்று ஒரு கருப்பொருளை வைத்துக்கொண்டு அதனை பரப்புவதற்காக அயராது உழைத்து வருகின்றனர். இப்பணியை யாருக்கும் விமர்சிக்க முடியாது. இதில் நாங்களும் பார்iவாளராக அல்லாமல் பங்காளராக மாற வேண்டும். இஸ்லாத்தின் சிறப்பு இயல்புகளில் முழுமைத்தன்மை, நடுநிலைமை என்பன முக்கியமானவை. நடுநிலைமையும், முழுமைத்தன்மையும் பேணிய வகையில் தான் இஸ்லாமியப் போதனைகள், வழிகாட்டல்கள், செயலமர்வுகள் காணப்பட வேண்டும். இஸ்லாம் எப்பொழுதும் தீவிரத்தன்மையை அங்கீகரிப்பதில்லை.
இன்று எமது சமூகத்தில் இஸ்லாத்தின் முழுமைத்தன்மை, நடுநிலைமை போன்ற பண்புகளை நடைமுறைப்படுத்தக் கூடிய தனி நபர்கள் அரிதென்றே சொல்லவேண்டும். அந்நிய சமூகத்தினருக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாங்கள் அவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், இஸ்லாத்தைப்பற்றிய புரிந்துணர்வையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இதைப்பற்றிய கரிசனையை ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இஸ்லாம் மனிதனுக்கு முழமையான பாதையைக் காட்டிக்கொடுத்துள்ளது. அவன் பிறந்தது முதல் மரணிக்கும் வரையிலான அவனுக்கான வழிகாட்டளை கூறியுள்ளது. அவனது உடல், அறிவு, ஆன்மா என அனைத்துப் பகுதிகளுக்குமான வழிகாட்டல்களாக அது அமைந்துள்ளது. நம்பிக்கை, வணக்கவழிபாடுகள், பண்பாடுகள், நடத்தைகள் எல்லாவற்றுக்கும் இஸ்லாமிய வழிகாட்டல்கள் காணப்படுகின்றன.
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து கொள்ளுங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டாம்” (பகரா: 208) என்று அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
இவ்வடிப்படையில் இஸ்லாம் முழமையான வடிவில் போதிக்கப்பட வேண்டும். அதன் போதனைகள் நடு நிலைமையாக முன்வைக்கப்பட வேண்டும். இஸ்லாத்திற்காக உழைக்கும் இயக்கங்கள் இவ்வடிப்படையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். முழுமையாக இஸ்லாத்தை கடைபிடிக்கக்கூடிய, தீவிரப்போக்கற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காய் செயற்படுவோம். எமது ஒவ்வொரு செயற்பாடுகளும் அண்ணிய சமுதயாத்தினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையட்டும்.
இன்ஷா அல்லாஹ்.
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteஎங்கள் முஸ்லிம்கள் நேர்மையும் நடுநிலைமையும் பேணுவார்கள் என்றால் அந்நிய மதத்தவர்கள் முஸ்லிம்களை குறை கூற மாட்டார்கள் குறிப்பிட்ட சிலரின் நடவடிக்கையால் முழு சமுதாயத்துக்கும் கெட்ட பெயர் கேட்க வேண்டிய நிலைமையில் உள்ளோம் பேச்சில் ,நடத்தையில் ,வியாபாரத்தில் உண்மையை கடைபிடியுங்கள் பிறகு பாருங்கள் அல்லாஹ்வின் உதவி எப்படி கிடைக்கிறது என்று எப்போ இதை எங்கள் முஸ்லிம் சமுதாயம் கடைபிடிக்குமோ அப்போது தான் இஸ்லாமிய எழிச்சியை இலங்கையில் காணலாம் இன்ஷா அல்லாஹ் துவா செய்வோம் யா அல்லாஹ் எங்கள் சமுதாயத்தை நேரான வழியில் செலுத்துவாயாக என்றும் காபிர்களின் சூழ்ச்சியை விட்டும் பதுகாபயாக என்று ஆமீன்
ரியாஸ்
கத்தார்