Header Ads



இலங்கையர்களின் புதிய கண்டு பிடிப்புக்கு ஜெனீவாவில் உயர் கௌரவம்

வைத்திய கலாநிதி எஸ்.ஜே.பி. லினாடோரா மற்றும் தினேஷ் கடுகம்பல ஆகியோரின் கண்டுபிடிப்புகள், ஜெனிவாவில் இடம்பெற்ற "இன்வென்சன்ஸ் ஜெனிவா" கண்காட்சி நிகழ்வில் தங்கம் மற்றும் வெள்ளி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ச்சியான 40ஆம் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வானது கண்டுபிடிப்பாளர்களை கௌரவிக்கும் வகையில் இடம்பெறும் உலகின் மிகப்பெரும் நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் சுமார் 46 நாடுகளை சேர்ந்த, 789 கண்டுபிடிப்பாளர்கள் பங்குபற்றியிருந்ததுடன், 1000க்கும் அதிகமான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் இலங்கையை சேர்ந்த வைத்திய கலாநிதி, லெனாடோராவின் கண்டுபிடிப்பான நியுமெடிக் செல்ஃப் றிடெய்னிங் அப்டொபிமினல் றிடராக்ட்டர் (Pneumatic Self Retaining Abdominal Retractor) எனும் சாதனம், சிக்கலான வயிறு தொடர்பான சத்திர சிகிச்சைகளின் போது, டிசுக்களுக்கிடையில் சேதமற்ற வகையில், இழுவையை பேணும் வகையில் இந்த சாதனம் செயற்படவுள்ளது.

 அத்துடன் வயிறு சம்பந்தமான சத்திர சிகிச்சைகளின் போது இந்த சாதனத்தை உபயோகப்படுத்துவதன் மூலம் திசுக்கிளிடையே ஏற்படும் சிதைவுகளையும் குறைத்துக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கு சத்திரசிகிச்சையின் பின்னர் ஏற்படும் அசௌகர்யங்களும் பெருமளவில் தவிர்க்கப்படுகிறது.

றேடியஸ் மீற்றர் எனப்படும் அளவு சாதனமானது தினேஷ் கடுகம்பலவின் கண்டுபிடிப்பாக அமைந்திருந்தது. இந்த அளவியின் மூலம் பொறியியல் துறையில் வட்டங்களின் ஆரைகள் மற்றும் விட்டங்களை அளந்து கொள்வது இலகுவாக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு இந்த இரு கண்டுபிடிப்புகளும் பெருமளவு சிக்கல் நிறைந்த கண்டுபிடிப்புகளாக அமைந்துள்ள போதிலும், இவர்களின் கண்டுபிடிப்புகள் அவற்றின் செயல்படுதிறனை கருத்தில் கொண்டு விருதுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தன. வைத்திய கலாநிதி லெனாடோராவின் குழுவினர் தமது தயாரிப்பு குறித்தும் தினேஷ் கடுகம்பலவின் கண்டுபிடிப்பு குறித்தும் விளக்கவுரைகளை விருந்தினர்களுக்கு வழங்கியிருந்தனர்.

No comments

Powered by Blogger.