அயோத்தி பாபரி மஸ்ஜித் தகர்ப்பும், தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலும்..!!
மொழிபெயர்ப்பு - எஸ்.குமார்
தம்புள்ள மத்திய நகரப்பகுதியில் உள்ள மசூதி ஒன்று, 10 நாட்களுக்கு முன்பு தீவிரப் போக்குள்ள பௌத்த மத பிக்குகளால் வழிநடத்தப்பட்ட கும்பல் ஒன்றினால்,பெற்றோல் குண்டுகள் வீசி நாசம் செய்யப்பட்டது. இந்த காயத்துக்கு மேலும் அவமதிப்பை ஏற்படுத்துவதுபோல,அரசாங்கமும் அந்தக் கும்பலின் கோரிக்கைக்கு கீழ்பணிந்து அந்த மசூதியை இடித்து வேறு இடத்தில் நிர்மாணிக்கும்படி கட்டளையிட்டுள்ளது.
அந்த மசூதி 60 வருடங்கள் பழமையானது என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். 1982ல் அரசாங்கம் அந்த இடத்தை பௌத்த புனிதப் பிரதேசமாக அறிவித்ததின் பின்னரே,அந்த மசூதி அங்கு கட்டப்பட்டதாக பிக்குகள் வலியுறுத்துகிறார்கள். அது ஒரு சட்டவிரோதக் கட்டிடம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
தலைநகர் கொழும்பிலிருந்து வடகிழக்காக சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தம்புள்ள ஒரு பௌத்த யாத்திரைக்கான நகரமாகும். குழப்பம் ஆரம்பமானபோது, பிக்குகள் உட்பட சுமார் 2000 வரையான சிங்களவர்களைக் கொண்ட கும்பலுக்கு, ரங்கினி தம்புள்ள பிரிவின் மகாநாயக்கரான இனாமலுவ சுமங்களதேரோ தலைமை தாங்கியபடி சென்று, மசூதியை தாக்கியுள்ளார்கள் ,இதனால் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் முக்கியமான வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் பாதிப்படைந்தன.
தொலைக்காட்சியின் காணொளிப்பதிவுகள், அந்தக் கும்பல் தரக்குறைவான இனவாத சுலோகங்களை எழுப்பியதை படம் பிடித்துள்ளன .பௌத்த துறவிகள் ஊர்வலமாகச் செல்வதை காணக்கூடியதாக இருக்கிறது மேலும் ஒரு துறவி தனது ஆடைகளை களைந்து தன்னை வெளிப்படுத்துவதும் அதில் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கம் அந்த மசூதியை வேறு இடத்துக்கு நகர்த்தாவிடில், தாங்கள் அதை தகர்க்கப்போவதாக அவர்கள் அச்சுறுத்தியும் உள்ளார்கள்.
வன்முறைகளும்,அச்சுறுத்தலும் இடம்பெற்ற ஓரிரு நாட்களுக்குள்ளேயே பிரதமந்திரியும், புத்;தசாசன மற்றும் மதவிவகார அமைச்சருமான, திசாநாயக்க முதியான் சலாகே ஜெயரட்ன, அந்த மசூதியின் இடமாற்றலைப் பற்றி அறிவித்துள்ளார். அந்த மசூதியை வேறு இடத்தில் நிர்மாணிப்பதற்கு ஏற்றதான மூன்று மாற்று இடங்கள் முஸ்லிம்களுக்கு தெரிவாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த மசூதியை வேறு இடத்தில் நிருமாணிப்பதற்கான நவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் தலைவர்கள் அந்த தெரிவினை நிராகரித்ததுள்ளார்கள் “வேறு இடத்தில் காணியை பெறுவதற்கான விட்டுக்கொடுப்பு எதற்கும் நாங்கள் சம்மதிக்க மாட்டோம்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்கள் கொழும்பில் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு அங்கமாகும்.
முஸ்லிம் சமூகத்தவர்கள் இந்த வன்முறைச் சம்பவத்துக்கும், மற்றும் அரசாங்கத்தின் முடிவுக்கும,; ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கடையடைப்புகள் மூலமாகத் தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
தனது அரசாங்கத்துக்குள்ளும் மற்றும் வெளியேயும் உள்ள பௌத்த மத தீவிரவாதிகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை தவிர்த்துவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தம்புள்ள தாக்குதல் நடந்த சமயம் ஸ்ரீலங்காவுக்கு வெளியே இருந்தார். அவர் திரும்பி வந்ததன் பின்னும் இந்த விடயத்தில் மௌனத்தையே கடைப்பிடித்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் தம்புள்ள பிக்குகளின் கவனம் அந்தப் பிரதேசத்தில் உள்ள ஒரு இந்து ஆலயத்தின் மேலும் திரும்பியுள்ளது.
“தம்புள்ள பௌத்த விகாரைக்கு அருகில் அந்த மசூதி மற்றும் கோவில் உட்பட 72 சட்டவிரோதமான கட்டிடங்கள் உள்ளன, அவையாவும் ஆறுமாதங்களுக்கிடையில் அங்கிருந்து அகற்றப்படும்” என்று தம்புள்ளயை சேர்ந்த பிக்கு ஒருவர் சொன்னதாக கூறப்படுகிறது.
ஸ்ரீலங்காவாசிகள் பெரும்பான்மையோரது மதம் புத்தசமயம் ஆகும். தீவின் சனத்தொகையில் 70 விகிதமானவர்கள் பௌத்தர்கள். அநேகமாக எல்லா பௌத்தர்களும் சிங்களவர்கள். சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களில் இந்துக்கள் 15 விகிதமும், பிரதானமாக தமிழ் பேசுபவர்களான முஸ்லிம்கள் 7.5 விகிதமும், கிறீஸ்தவர்கள் 7.5 விகிதமும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
பௌத்தமதம் சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் பற்றி வாதிட்டாலும் நடைமுறையில் அது பின்பற்றப்படும் முறையிலும் மாறாக அதிக சக்திவாய்ந்ததாக வளர்ந்து வரும் வித்திலும் இணக்கத்துக்கு வெகு தொலைவில் வன்முறை, வெறி, என்பவைகளையே பின்பற்றி வருகின்றது.
சிங்கள பௌத்தர்களின் சுய கண்ணோட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. முதலாவது அவர்கள் தமிழ் திராவிடர்களிலிருந்து வேறுபட்ட தனித்தன்மையான ஆரிய சிங்கள சாதி என்பதாகவும் மற்றும் ஸ்ரீலங்கா அவர்களின் தாய் நாடு என்பதாகும், இரண்டாவது அவர்கள் பௌத்த நம்பிக்கையின் காவலர்கள் என்பதும், பௌத்தமதத்தை பாதுகாக்கும் பொறுப்பு புத்தபெருமான் அவர்களாலேயே தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டதாக நம்புவதும், மற்றும் மூன்றாவதாக சிங்கள மொழியின் தாய் ஸ்ரீலங்கா என்பதும். இந்த சுய உணர்வுதான் ஒரு உக்கிரமான சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கியுள்ளது.
சிங்கள பௌத்தர்களின் மேலாதிக்கத்தை பற்றி மகாவம்சம் என்கிற நூல் கூறுகிறது, இது கி.மு 6ம் நூற்றாண்டில் எழுதப்பட்டு பின்னர் 16ம், 17ம்,மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் பௌத்தமதம், ஸ்ரீலங்காவில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை நியாயப்படுத்தவும் மற்றும் இந்த நாடு சிங்கள பௌத்தர்களின் தேசம் என்கிற தங்கள் கோரிக்கைகளை மேலுயுயர்த்தவும் திருத்தியமைக்கப்பட்டது. மகாவம்சத்தின் பெரும்பகுதி புராணக்கதைகளையே கொண்டுள்ளது, அனால் பெரும்பாலான சிங்களவர்களுக்கு அது தகர்க்கமுடியாத ஒரு வரலாறு ஆகும். அது பெரும்பாலும் பொதுவாக அழைக்கப்படும் மகாவம்ச மனப்போக்கினை உருவாக்கியுள்ளது, அதாவது ஸ்ரீலங்கா என்பது சிங்கள பௌத்தர்களின் நாடு ஏனெனில் மகாவம்சம் அப்படிச் சொல்கிறது என்பதே அது.
இந்த மகாவம்ச மனப்போக்கு கடும்போக்குள்ள சிங்கள பௌத்தர்களின் வாதங்களில் தீவு தங்களுடையது என்றும் சமய மற்றும் இன சிறுபான்மையோர் வெறும் விருந்தாளிகள் மட்டுமே, சிங்கள பௌத்தர்களின் சகிப்புத்தன்மைக்கு ஏற்றபடியே அவர்கள் இங்கு வாழவேண்டும் என்றும் வாதிடுகிறார்கள். அவர்களின் தொடர்ச்சியான இருப்பு அவர்களின் நன்னடத்தையின் நிபந்தனையின் பேரிலேயே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் தலைமை இராணுவ உத்தியோகத்தர் லெப்.ஜெனரல்.சரத் பொன்சேகா ஒரு நேர்காணலில் ஒருமுறை சொன்னது, சிறுபான்மையோர் “அளவுக்கு மீறியவைகளை கேட்கக்கூடாது” என்று.
கடந்த 125 வருடங்கள் அல்லது அதற்கு மேல் சிங்களவர்கள் அல்லாதவர் மற்றும் பௌத்தர்கள் அல்லாதவர்கள் என்பவர்களுக்கு எதிராக வன்முறை இயக்கப்பட்டு வருகிறது. காலனித்துவ காலத்தில் அநாகரிக தர்மபாலவை போன்ற சமய புத்தெழுச்சிக்கு ஆதரவானவர்கள், அநேகமாக மக்களை அணிதிரட்டியது காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அல்ல ஆனால் சிறுபான்மை கிறீஸ்தவர்களுக்கு எதிராக, சமூகத்தில் அவர்களுக்கு இருந்த சலுகையுள்ள நிலை, அரசியல் வாழ்வு, மற்றும் அவர்கள்மேல் கூறப்படும் தவறுகள் என்பனவற்றுக்காகத்தான். 20 நூற்றாண்டின் ஆரம்பத்தில் வியாபாரத்திலும் மற்றும் வர்த்தகத்திலும் முஸ்லிம்களே ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள், அவர்களும் சிங்கள பௌத்தர்களின் கோபக்கனலுக்கு இரையானார்கள்.
1915ல் தர்மபால எழுதியிருப்பது” முகமதியர்கள் ஒரு வேற்றுக்கிரக வாசிகள். அவர்கள் யூதர்களைப்போல அநீதியான சைலொக்கிய முறைகளால் செல்வந்தர்களானார்கள். சிங்களவர்கள் மண்ணின் மைந்தர்கள், அவர்களின் மூதாதையர்கள் 2358 வருடங்களாக, நிலையான இருப்பிடமற்ற பிரித்தானியர்களின் கண்களிலிருந்தும், அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும் இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்காக இரத்த வெள்ளத்தை ஆறாக ஓடவிட்டிருக்கிறார்கள்” என்று.
தர்மபாலாவின் சிங்கள பௌத்தன், மற்றும் பியதாஸ சிறிசேனவின் சிங்கள ஜாதி எனும் வெளியீடுகளில் உள்ள உணர்ச்சியை கிளறும் எழுத்துக்கள் தீவின் முஸ்லிம்; எதிர்ப்பு உணர்வுகளுக்கு எண்ணெய் வார்த்து எரியூட்டியது, அந்த வருடம் நடைபெற்ற முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்கள் உச்சநிலைக்கு செல்ல இவைகளும் காரணம் என நம்பப்படுகிறது.
தர்மபாலா இந்த முஸ்லிம்; எதிர்ப்பு வன்முறையை பாராட்டினார். “அமைதியான சிங்களவர்கள் கடைசியில் இனிமேலும் இந்த வேற்றுக்கிரகத்தவர்களின் அவமதிப்பை தாங்கிக்கொள்ள முடியாது என்பதைக் காட்டிவிட்டார்கள். இந்த முழு நாடுமே ஒருநாள் முஸ்லிம்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளது” என அவர் எழுதியுள்ளார்.
ஸ்ரீலங்கா அரசியலில் பௌத்தர்களின் கதாபாத்திரம் கணிசமாக வளர்ந்தது, சுதந்திரத்துக்குப் பின்புதான், விசேடமாக 1950 களின் தசாப்தத்தில்தான், புத்த பெருமானின் 2500வது மரண நினைவின் போது எழுந்த பௌத்தமத மறுமலர்ச்சி அலைகளால் நாடே அடித்துச் செல்லப்பட்டது அந்த நேரத்தில்தான்.
இந்தக்காலகட்டத்தில் நிகழ்ந்த பௌத்த புனருத்தாபனம்தான், சிங்களவர்களுக்கும் மற்றும் தமிழர்களுக்கும் இடையில் இருந்த உறவில் மோதல்கள் உருவாவதற்கான ஆரம்பம் என்று கண்டறிய முடிகிறது. இனமோதலுக்கான தீர்வாக பெடரல் அமைப்பு உருவாவதை அரசியலில் துறவிகளின் கதாபாத்திரம் தலையிட்டு தடை செய்ததுடன், தேவையானால் வன்முறைகளை கட்டவிழ்த்து விடவும் முடியும் என்பது 1950களில் தெளிவாகியது. அது இரத்தம் தோய்ந்த உள்நாட்டுப் போரில் ஸ்ரீலங்காவை மூழ்கடித்தது.
2009ல் முடிவுற்ற உள்நாட்டுப் போரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியும் சிங்கள பௌத்தர்களின் வெற்றிப் பவனிக்கான ஒரு பேரலையை தூண்டிவிட்டது. அது சர்வதேச சமூகத்துடன் நேருக்கு நேராக ஒரு சுயநம்பிக்கை மோதலையும் வெளிப்படுத்தியுள்ளது.
போரினால் சீரழிந்த தமிழர்கள் பெருமளவில் வாழும் வடமாகாணத்தில், இந்த தசை வலிமை காட்டும் சிங்கள பௌத்தத்தின் அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது, அதிகரித்து வரும் சிங்களமயமாக்கப்பட்ட விளம்பர பதாகை மற்றும் வீதிகள், கிராமங்கள் என்பனவற்றின் பெயர்களில் மட்டும் அல்ல, ஆனால் பெருகிவரும் புத்தர் சிலைகள் மற்றும் புத்த கோவில்கள் என்பனவற்றிலும்தான்.
சர்வதேச நெருக்கடிக்குழுவின் சமீபத்தைய அறிக்கையொன்று தெரிவிப்பது, பௌத்த கோவில்கள் உருவாகி வருவது, இராணுவ நிறுவல்களுக்கு அருகில் மட்டுமல்ல, ஆனால் அனுமதியின்றி தனிப்பட்ட காணிகளிலும் உருவாகியுள்ளன. மேலும் அழிக்கப்பட்ட இந்து ஆலயங்களில் புதிய பௌத்த கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று.
சர்வதேச நெருக்கடிக்குழுவின் அறிக்கை மேலும் தெரிவிப்பது “ நீண்ட காலமாக சிங்கள தேசியவாதிகளின் செல்வாக்கின் கீழும் மற்றும் பௌத்த குழுக்களின் தீவிர பரப்புரைகளின் செல்வாக்கின் கீழும் இயங்கிவரும், புதைபொருள் ஆராய்ச்சி திணைக்களம், வடக்கில் புராதன பௌத்த இடங்களை கண்டுபிடித்து அவற்றை பயன்படுத்தி புதிய பௌத்த ஆலயங்களை கட்டக்கூடும் என்கிற அச்சமும் அங்கு நிலவுகிறது” என்று
இந்த சிங்கள பௌத்தர்களின் வெற்றிக் கொண்டாட்ட பின்னணியின் கீழ், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மதத்தவர்களும் அவர்களின் வழிபாட்டு இடங்களும் சமீபத்தைய ஆக்கிரமிப்பிற்கு ஆளாகியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
கடந்தவருடம் செப்டம்பர்மாதம் புராதன பௌத்த நகரமும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான,மற்றும் கலாச்சார நிறுவனத்தின்(யுனஸ்கோ) உலக பாரம்பரிய பிரதேசமுமாகிய அனுராதபுரத்தில் இருந்த ஒரு மசூதியும் ஒரு கும்பலினால் இடிக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய அந்தக் கும்பலுக்கு தலைமை தாங்கிய பிக்கு பி.பி.சி வானொலிக்கு கூறியது, 2000 வருடங்களுக்கு முன்பு ஒரு சிங்கள பௌத்தர் வழங்கிய காணியில்தான் அந்த மசூதி கட்டப்பட்டது என்றும் அதனால்தான் அது தாக்கப்பட்டது என்றும்.
தேவாலயங்கள் மீதான தாக்குதல்களும் மற்றும் மதகுருவானர்கள் மீதான தாக்குதல்களும்; ஸ்ரீலங்காவின் யுத்தத்தின் பின்னான காலத்தில்; அதிகரித்துள்ளன, பிக்குமார்களால் நடத்தப்படும் அரசியற்கட்சியும் ஆளும் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு அங்கமுமாகிய, ஜாதிக ஹெல உறுமய கட்சி இந்த வன்முறைகளை நியாயப்படுத்தும் வகையில் இந்த கிறீஸ்தவ மதகுருக்கள் பௌத்தர்களை, கிறீஸ்தவத்துக்கு மயக்கி அழைக்கிறார்கள் எனக்கூறுகிறார்கள்.
அண்டை நாடான இந்தியாவில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளுடன் இந்த அதிர்ச்சித் தாக்குதல் சம்பவத்தை ஒப்பிட்டு அக்கறை செலுத்த காரணம் உள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு, இந்தமத வலதுசாரி குடும்ப அமைப்பான சங் பரிவார் மற்றும் காவி உடை தரித்த துறவிகள் தலைமையில் சென்று வட இந்திய நகரமான அயோத்தியில் உள்ள பாபரி மஸ்ஜித் என்கிற 16ம் நூற்றாண்டு மசூதியைத் தாக்கினார்கள்.
அந்த மஜ்சித் இந்து தெய்வமான ராமர் பிறந்த இடத்திலும், முன்பு ஒரு கோவில் இருந்த இடத்திலும் கட்டப்பட்டது என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள். நிருவாகத்தார்களும், காவல்துறையினரும் பார்த்துக் கொண்டு நிற்கையிலேயே அந்த மசூதி இடித்து நொருக்கப்பட்டது, அதேவேளை இந்தியாவில் இருந்த மற்றவர்கள் அந்தக் காட்சியை திகிலுடன் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் பார்த்தார்கள்.
பாபரி மஜ்சித்தின் இடிப்பு இனக்கலவரம், பயங்கரவாத தாக்குதல், மற்றும் சூறையாடல் போன்ற ஒரு தொடர் நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்ததுடன் அதன் தாக்கம் 20 வருடங்களுக்குப் பின்னும் இந்தியாவை அதிர்ச்சியிலாழ்த்தி வருகிறது.
தம்புள்ள மசூதி தாக்குதல்களுக்கு பின்னாலுள்ள விடயங்களும் மற்றும் பாபரி மஜ்சித் விடயங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. பாபரி மஜ்சித் அழிப்பிற்காக நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு நடத்தியதை போலில்லாது, தம்புள்ளயில் தாக்குதல் நடத்திய கும்பல் உள்ளுர் வாசிகள் ஆவர்.
இருந்தாலும் ஸ்ரீலங்கா இன்னமும் கவலைப்பட வேண்டியுள்ளது, ஏனெனில் ஸ்ரீலங்காவில் தீவிரப் போக்குள்ள பௌத்த பிக்குகளின் வெறுக்கத்தக்கதாக கருதப்படும் சொல்லாட்சிகள், வேறுபாடில்லாதபடி இந்தியாவின் இந்துத்வா ஆதரவாளர்களின் வாய்வீச்சுக்கு சமமாக உள்ளன. தம்புள்ள நிகழ்ச்சி உணர்வுகளையும் மற்றும் மிகவும் மோசமான பின் விளைவுகளையும் கட்டவிழ்த்து விடக்கூடும்.
இந்தியாவின் இந்து தேசியவாதிகள்; மற்றும் தீவிரவாதிகளின் இந்துத்வா நிகழ்ச்சி திட்டத்தினால் எப்படியாயினும் சாதி, மொழி வாரியான பேதங்கள் தோற்கடிக்கப்பட்டன, (இந்துக்களிடம் இந்து இந்தியாவை உருவாக்க வேண்டுமென்கிற இலட்சியத்துடன் கூடிய பிரத்தியேக சித்தாந்தம் மட்டுமே இருந்துது).
ஸ்ரீலங்காவில் சமூகங்களானது பல்லின, பல்சமய, மற்றும் பல மொழி கொண்டவைகளாக இருந்த போதிலும், சிங்கள பௌத்தர்களின் தீவிரவாதம் வெகு தூரத்துக்கு வெற்றி பெற்றுள்ளது. சிங்கள பௌத்த அடையாளம் இந்தியாவில் உள்ள இந்து அடையாளத்தை விட மிகவும் உறுதியானது. சிங்கள பௌத்த சித்தாந்தம் நிறுவனமயமாக்கப் பட்டுள்ளதுடன், பௌத்த தேசிய சித்தாந்தம் சிங்களவர்கள் மத்தியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இன்னும சொல்லப்போனால் பல தசாப்தங்கள் நீடித்த உள்நாட்டுப் போரின் அழிவுகளிலிருந்து மீள்வதற்கிடையில், ஸ்ரீலங்கா அதிகம் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு தள்ளாடும் நிலையை நோக்கி தள்ளப்பட்டுள்ளது, இந்த முறை மத ரீதியாக இந்த குருதிப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
(சுதா ராமச்சந்திரன் பெங்களுருவை தளமாக கொண்ட ஒரு சுயாதீன ஊடகவியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். இந்தக் கட்டுரை ‘ஏசியா டைம் ஒன்லைனில்’ காணப்பட்டது)
Post a Comment