Header Ads



தாய்ப்பாலில் அடங்குபவை எவை?

குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களிற்கும் தேவையான அனைத்து போசனைப் பதார்த்தங்களையும் கொண்டது தாய்ப்பால். தாய்ப்பாலானது முதல் ஆறு மாத காலத்தில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சக்தியையும் 6 தொடக்கம் 12 மாதங்களில் தேவையான சக்தியின் அரைவாசிப் பகுதியையும் 13 தொடக்கம் 24 மாதங்களில் தேவையான சக்தியின் மூன்றிலொரு பகுதியையும் வழங்குகிறது.

கொழுப்பு:

100 ml பாலில் 3.5g கொழுப்பு காணப்படும். சக்தி வழங்கலில் அரைவாசி சக்திக்கு பொறுப்பானது. இது பாலில் சிறு துணிக்கைகளாக காணப்படும். குழந்தை பால் அருந்தும் போது முதலில் வரும் பாலில் குறைவாக காணப்படுவதுடன் நீண்ட நேரம் அருந்தும் போது முதலில் வரும் பாலில் அதிசெறிவில் காணப்படும். தாய்ப் பாலில் DHA (Docosahexaenoic acid) மற்றும் ARA (arachidonic acid) என்பன காணப்படுகின்றன. இவை குழந்தையின் நரம்பு வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன.

காபோவைதரேற்று:
தாய்ப்பாலிலுள்ள பிரதான காபோவைதரேற்று லக்டோஸ் எனப்படும் இருசக்கரைட்டாகும்.100 ml பாலில் 7 கிராம் காபோவைதரேற்று காணப்படும். இது இன்னுமொரு சக்தி மூலமாக செயற்படுகிறது. இதைத்தவிர தாய்ப்பாலில் ஒலிகோ சக்கரைட்டுகள் காணப்படுகின்றன. இவை நோய்த் தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குகின்றன.

புரதம்:

தாய்ப்பாலிலுள்ள புரதங்கள் அளவிலும் தரத்திலும் ஏனைய பால் வகைகளிலுள்ள புரதங்களில் நின்றும் வேறுபடுகின்றன. 100 ml பாலில் 0.9 கிராம் புரதம் காணப்படும். இது ஏனைய மிருகங்களின் பாலில் காணப்படும் புரதத்தை விட குறைவானது. அதிக புரதமானது அதிகளவு நைட்ரஜன் கழிவுகளை உருவாக்கி முதிர்ச்சி பெறாத குழந்தையின் சிறுநீரகங்களை பழுதாக்கலாம். இதைத்தவிர தாய்ப்பாலில் கேசின் எனும் புரதம் குறைவாக காணப்படுவதுடன் வித்தியாசமான கட்டமைப்பிலும் காணப்படுகிறது. ஏனைய பாலிலுள்ள கேசினைப் போலல்லாது தாய்ப்பாலிலுள்ள கேசின் மிருதுவாக, எளிதில் ஜீரணிக்கக் கூடிய விதத்தில் அமைந்துள்ளது.

விற்றமின் மற்றும் கனியுப்புகள்:
தாய்ப்பாலானது தேவையானளவு சகல விற்றமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தாயிற்கு ஏதேனும் விற்றமின் குறைபாடு இருப்பின் அது தாய்ப்பாலின் விற்றமின் அளவினை பாதிக்கலாம். இதைத் தவிர விற்றமின் Dயினளவு குறைவு. எனவே குழந்தைக்கு விற்றமின் Dயினை உடலில் உற்பத்தி செய்து கொள்ள சூரிய ஒளி அவசியம் தேவைப்படுகிறது. இதனை விட தேவையான கனியுப்புகள் அனைத்தும் காணப்படுவதுடன் இரும்பு மற்றும் சின்க் என்பவை செறிவு குறைந்து காணப்படும். இவற்றின் செறிவு குறைவாயினும் அவை உடலில் முழுமையாகவும் எளிதாகவும் உறிஞ்சக் கூடிய விதத்தில் காணப்படுகின்றன. தாய்ப்பாலிலுள்ள கல்சியம், பொஸ்பரசிற்கான விகிதம் 2:1 ஆகும். இது கல்சியம் அகத்துறிஞ்சலினை அதிகப்படுத்துவதுடன் கல்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிப்பு நிலையை குறைக்கும்.
நோயெதிர்ப்பு காரணிகள்:
குழந்தையில் ஏற்படக் கூடிய நோயினை எதிர்க்கக் கூடிய பல பதார்த்தங்களைக் கொண்டிருப்பது தாய்ப்பாலின் ஒரு சிறப்பம்சம் ஆகும். தாய்ப்பாலிலுள்ள இமியினோகுளோபியுளின் 90% ஆனது இமியினோகுளோபியுளின்  ஆகும். இது குடலின் மேற்பரப்பு மென்சவ்வின் மேல் படலமாகப் படிந்து நுண்ணுயிர்கள் உட்செல்வதைத் தடுக்கும். செங்குருதிக் கலங்கள் மற்றும் லைசோனசம், லெக்டோபெரின் புரதங்கள் நுண்ணுயிர்களை கொல்கின்றன. ஒலிகோசக்கரைட்டுகள் நுண்ணுயிர்களை மென்சவ்வுகளுடன் இணைவதை தடுக்கின்றன.

ஏனையவை:
· பித்தத்தால் தூண்டப்படும் லைபேஸ் இது தாய்ப்பாலில் அடங்கும் கொழுப்புகளின் பூரண சமிபாட்டிற்கு பெரும் பங்காற்றுகின்றது. பால்மா வகைகளிலுள்ள கொழுப்பானது பூரணமாக சமிபாடடைவதில்லை.
· எபிடேர்மல் வளர்ச்சி காரணி (EGF) இது குழந்தையின் குடலின் சுவரின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதனால் சமிபாடு சீராவதுடன் போசனைப் பதார்த்தங்களும் நன்றாக உறிஞ்சப்படும். இதைத் தவிர இலகுவில் தொற்றுக்குள்ளாகும் தன்மையைக் குறைக்கும். தாய்ப்பாலில் காணப்படும் ஏனைய வளர்ச்சிக் காரணிகள் நரம்பு வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்துகின்றன.

கொலஸ்ட்ரம் என்றால் என்ன?
கொலஸ்ட்ரம் என்பது குழந்தை பிறந்து 2 முதல் 3 தினங்களுக்கு சுரக்கப்படும் பிரதான பாலாகும். பொதுவாக முதல் நாளில் 40 தொடக்கம் 50 ml அளவே சுரக்கப்படும் எனினும் இது குழந்தைக்கு போதுமானது. கொலஸ்ரமில் வெண்குருதிக் கலங்கள், பிறபொருள் எதிரிகள், அதிலும் பிரதானமாக இமியுனோகுளோபியுளின் A என்பன அதிக செறிவில் காணப்படும். புரதம், கனியுப்புகள், விற்றமின் A, E, K என்பன பின்வரும் பாலினை விட அதிகளவில் கொலஸ்ட்ரத்தில் அடங்கும். விற்றமின் Aஆனது கண்ணைப் பாதுகாத்து மென்சவ்வுகளின் கட்டமைப்புக்கு உதவுவதுடன் கொலஸ்ட்ரத்தின் மஞ்சள் நிறத்திற்கும் காரணமாக அமைகிறது. புதிதாக பிறந்த குழந்தை சூழலிலுள்ள நுண்ணுயிர்களை எதிர்கொள்ளும் போது கொலஸ்ட்ரமானது நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. எனவே தான் பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டல் அதி முக்கியமாகிறது.

குழந்தைபிறந்து 2 முதல் 4 நாட்களில் பால் அதிகளவு சுரக்கத் தொடங்குகிறது. பால் வந்துள்ள இந்நிலையில் மார்பகங்கள் நிறைந்ததாக உணரப்படும். சாதாரணமாக 3 நாள் குழந்தை ஒரு நாளைக்கு 300 தொடக்கம் 400 ml பாலருந்தும். 5 நாள் அளவில் 500 தொடக்கம் 800 ml பாலருந்தும்.7 தொடக்கம் 14 நாள் வரையில் தாய்ப்பாலானது இடைப்பட்ட பால் (Transitional milk) என அழைக்கப்படுவதுடன் இரண்டு வாரங்களின் பின் முதிர்ந்த பால் (mature milk) என வர்ணிக்கப்படும்.

No comments

Powered by Blogger.