Header Ads



தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரமும், ஏமாற்று அரசியலும்


நமது நாடு ஒரு ஜனநாயக நாடு என்று நாம் எல்லோரும் ஒரு காலத்தில் மிகவும் பெருமைப்பட்டோம். காலத்துக்குக் காலம் அரசாங்கத்தால் அவர்களது நேசத்திற்குரிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கதை மற்றும் திரைக்கதையோடு அரங்கேற்றப்படும் நாடகங்கள் நம்ப வைக்கப்பட்டு, சிறுபான்பை உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் ஒடுக்கப்பட்டு வருகின்றமை வரலாறு கண்ட உண்மை.

இதனை நாம் தொடர்ந்தும் அனுபவித்து வருகின்றமையால் அதன் பாரதூரம் எம்மில் பலருக்கு விளங்குவதில்லை. எம்மில் அனேகமானோர், அன்றாடம் தங்களது தொழில்சார் மற்றும் பொருளாதார விடயங்களில் சிக்கித் தவிப்பதால் எம்மைச் சுற்றி எவ்வாறு காய்கள் நகர்த்தப்படுகின்றன?, நம்மைச் சுற்றி நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் யாவை? போன்ற விடயங்களை பொதுவாக கண்டு கொள்வதில்லை. அதற்கு நேரமும் நமக்கில்லை.

வெள்ளிக்கிழமை – நமக்கு ஓய்வான ஒரு நாள். ஜும்மாவிற்குச் சென்றோம், தொழுதுவிட்டு வீதியில் இறங்கினோம், அரசாங்கத்தையும் எதிர்த்து கூச்சல் போட்டோம், புத்த தேரர்களை வாய் கிழிய இழிவு படுத்தினோம், அவர்களது மதத்தை நிந்தித்தோம், சந்தோசமாக வீட்டிற்கு வந்தோம். வழமைபோல வெள்ளிக்கிழமை மாட்டிறைச்சிக் கறி. வயிறுமுட்ட உண்டுவிட்டு மல்லாக்க ஒரு தூக்கம். ஆனால் மனதில், அரசாங்கத்தை எதிர்த்து தங்கள் பலத்தைக் காட்டி அவர்களை கலங்கடித்ததாக ஒரு இறுமாப்புடனான தற்பெருமை. நீங்கள் கத்திய கத்தலும் கூச்சலும் காற்றோடு கரைந்து போக, அதன் வீடியோவும் போட்டோக்களும் நமது பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு ஒரு பாரிய ஆயுதமாக எஞ்சிப்போக – நமது அறியாமைக்கு அளவே இல்லையா?

இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம், எமது சமூகத்தின் வீரம். நெஞ்சு நிமிர்த்தி போரிட்டு பல வெற்றிகள் கண்ட எமது முன்னோர் எமக்கு விட்டுச் சென்றதில் அது மாத்திரம்தான் மிச்சமுள்ளது. முதுகில் குத்தி குறுக்கு வழியில் ஜெயிக்கும் கோளைகளல்ல எமது முன்னோர்.

நாம் இந்த நாட்டில் இழந்தது ஒன்றா இரண்டா? ஆயிரக்கணக்கான எமது சகோதரர்களின் உயிர்களுடன் சேர்த்து எமது அடையாளம், மானம், மரியாதை, கௌரவம் போன்ற அனைத்தையும் இழந்து எம்மை நிர்வாணமாய் ஆக்கியவர்கள் இந்த பாராளுமன்றப் பிரதிநிதிகள்தான் என்பதை நீங்கள் உணரவில்லையா? அல்லது விளங்கியும் விளங்காதவர்களாக இருக்கின்றோமா? எமது வாக்குகளுக்கு இருக்கும் பலம் எமக்குப் புரியவில்லையா?

தேர்தல் நெருங்கிவிட்டாலே போதும், எப்படிடா இந்த முறை எமது சமூகத்தை ஏமாற்றி வாக்குகளை சூறையாடலாம் என்று லக்சரி றூம் போட்டு யோசிக்கத் தொடங்கி விடுவார்கள் இந்த அரசியல் வாதிகள். இந்த சுகபோக வாழ்க்கை மோகம் யாரைத்தான் விட்டது. கோடி கோடியால் அரசாங்கத்திடம் அட்வான்ஸ் வாங்கி எப்படியாவது குட்டையைக் குழப்பி விட்டு, எமது காதில் பூச்சுற்றி, ஏமாற்றி, பல பொய்கள் சொல்லி, எமது உள்ளங்களை உடைத்து எமது வாக்குகளை சூறையாடி இறுதியில் நல்ல விலைக்கு நம் அனைவரையும் அரசாங்கத்துக்கு விற்றுவிடுவார்கள்.

அடுத்த எலக்சன் வரும் வரை சுகபோக பெருவாழ்வு. இவர்கள் நம் சமூகத்தை கூட்டிக் கொடுக்கும் அரசாங்கத்தின் கூலிப்படைகள் என்று உங்களுக்கு விளங்கவில்லையா? அல்லது மரணிக்கும் வரை இப்படியே அடிமைகளாக வாழ்ந்து எமது சந்ததியினரையும் அதே குழியில் தள்ள உறுதி பூண்டுள்ளோமா?

திட்டமிடப்பட்டு தூண்டிவிடப்பட்டு வழிநடாத்தப்பட்ட ஒரு வாடகைக் கும்பல், காவி உடைகளுடனும் பதாதைகளுடனும் தம்புள்ளை பள்ளிவாயலை முற்றுகையிட்டு ஜும்மாத் தொழுகையைத் தடுத்து, தகாத வார்த்தைகளால் நிஞ்சித்து, புனித அல்குர்ஆனை வீசி எறிந்து அவற்றையெல்லாம் கச்சிதமாக படம்பிடித்து, எமது சமூகத்திற்கு பல்வேறு ஊடகங்களிலும் ஒரு திரைப்படமாகக் காண்பிக்கப்பட்டது. எமது மனதுகள் புண்பட்டது, சோர்ந்து போனது. இது எமது எளிமையான இயல்பு. பல பக்கங்களிலும் விதைக்கப்பட்ட எமக்கெதிரான அடக்கு முறைகளால் மனமுடைந்து போயிருந்த எமது சமூகம் கொதித்தெழுந்தது.

எதிர்வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் பல கோடிகளை முதலிட்டு எப்படியாவது வெற்றி பெறவேண்டும் அல்லது கிழக்கில் முஸ்லிம்களின் வாக்குகளை என்ற ஒரே குறிக்கோளுடன் பயணிக்கும் எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்கள். பல ஊர்களுக்கும் சென்று கூட்டங்கள் வைத்தார்கள். அறிக்கைகள், வீர வசனங்கள், பதாதைகள், ஊர்வலங்கள் என்று பாரிய அலப்பரை.

ஜனாதிபதியும் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளமாட்டார். இறுதியில் ஜனாதிபதியின் முடிவிற்காக எமது சமூகம் காத்துக் கிடப்பதாக பிச்சைக்கதர ஊடகங்கள் ஊடாக பிரச்சாரம் வேறு. கடைசியாக, ஜனாதிபதி ஒரு அறிக்கை விடுவார். அதே இடத்தில் தம்புள்ளை பள்ளிவாயல் பழையபடி இயங்கும் (60 வருடங்களாக இயங்குதானே!) நாம் அனைவரும் மிகவும் சந்தோசப்படுவோம். முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் முஸ்லிம்களின் கௌரவத்தைக் காப்பாற்றியதாக சூழுரைக்கும். நாமும் வாக்குகளை அள்ளி வீசுவோம். எமது தலைவர் முதலமைச்சர் ஆவர். ஓரிரு மாதங்களில் பிள்ளையானுக்கு அந்தப் பதவியை கொடுத்துவிட்டு மீண்டும் அமைச்சராகி விடுவார். நமது தலையில் மீண்டும் நாம் மண்ணை அள்ளிப் போட்ட கதைதான். நமது தலைவரின் ஆட்சியை விட பிள்ளையானின் ஆட்சியில் நாம் அமைதியாக வாழலாம்.

‘எங்களது கட்சியில் அவ்வேளை உள்ளிருந்த (தற்போதும் இருக்கின்ற) பல தீய சக்திகளாலும், கட்சி துண்டாடப்பட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் நாங்கள் ஆளுங்கட்சியுடன் இணைந்தோம்’ (வீடியோ ஆதாரம் உள்ளது) என கட்டார் நாட்டின் பனார் கேட்போர் கூடத்தில் நடந்த கலந்துரையாடலில் நண்பர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது சரளமாகக் கூறிய அதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கேவலமான வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்க, எமது சமூகத்தின் உரிமைக்காக அவர் பேசுவதும் அவருடன் சேர்ந்து ஏற்கனவே அவரது கட்சியை துண்டாட எண்ணிய அவரது சகாக்களும் சேர்ந்து கொக்கரிப்பதும் கேலிக்கூத்தாக இருப்பதுடன்., அந்த வேதனையில் உண்மையில் கண்கள் குளமாகிப் போயின.

இதேபோன்று கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் என்பவற்றில் வௌ;வேறு கோணங்களில் நாம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை நாம் முழுமையாக மறந்து விட்டோம் என்றுதான் நினைக்கிறேன். மண்ணறையிலும் மறக்காது.
 
இதே போன்று பிரதேசம் பிரதேசமாக, மாவட்ட ரீதியாக, மாகாண ரீதியாக காலத்துக்குக் காலம் முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு காசு சம்பாதிக்கும் கைங்கரியத்தை எமது பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ளும் நயவஞ்சக அரசியல்வாதிகள் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள்.

இறுதியாக, இந்த தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரத்தில், மிகவும் அவதானமாகவும் உண்ணிப்பாகவும் செயற்பட்டு, ஏமாற்று சக்திகளிடம் எம்மைப் பாதுகாக்குமாறு எல்லாம் வல்ல அனைத்தையும் நன்கறிந்த அல்லாவை வேண்டியவனாய்...

என்னைப் பொறுத்தவரை தொடர்ந்தும் ஏமாறுபவன் ஒரு ஈமானுள்ள முஸ்லிமாக இருக்க முடியாது எனக்கூறி விடைபெறுகிறேன்.

நன்றி..

உங்களில் ஒருவன்... தாய்நாட்டை என்றும் நேசிக்கும் இஸ்லாமிய சகோதரன்.

1 comment:

  1. So who u are recommending? do you think Athaaullaa can be a good leader???

    ReplyDelete

Powered by Blogger.