பள்ளிவாசலை இடமாற்றினால் அழிவே ஏற்படும் - ஊடகவியலாளர் மாநாட்டில் ஹக்கீம் தெரிவிப்பு
தம்புள்ளை பள்ளிவாசலுக்காக அரசாங்கத்திடமிருந்து மாற்று இடமொன்றை எதிர்ப்பார்க்கவில்லையென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சிறுபான்மை மதங்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில், தம்புள்ளையில் தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசளை வேறு இடமொன்றுக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணங்கப் போவதில்லை என்று அந்த காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நடவடிக்கை நாட்டுக்கு அழிவையே ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டிருந்தார். 1940 ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இஸ்லாமியர்கள் இந்த பள்ளிவாசலில் தொழுகையை நடத்தி வருகின்றனர்.
எனினும், இந்த விடயத்தில் இணக்கப்பாட்டுக்கு வரப்போவதில்லை என்று நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். தாம் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தீவிரவாத சக்திகள் நாட்டில் மதங்களுக்கிடையிலான பதற்றத்தை தோற்றுவிக்க முனைகின்றன. எனவே, பலம்மிக்க இந்த அரசாங்கம் பலவீனமான சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும். அத்துடன், வேறு நாட்டு சக்திகளிடம் நாட்டை பணயம் வைக்க அனுமதிக்க கூடாது என்றும் அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
பள்ளிவாசலுக்கு காணியொன்றை பெற்றுக்கொள்வதற்கு தமக்கு வசதி உள்ளதாகவும் பிச்சை எடுத்தேனும் அதற்கான இடத்தைப் பெற்றுக்கொள்ளும் இயலுமையும் திடமான நம்பிக்கையும் தமக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஏதாவதொரு விதத்தில் பலவந்தமாகவேனும் அதனை அகற்றுவதற்காக அரசாங்கம் முயற்சி செய்தால் அதற்கான காணியை தாம் அரசாங்கத்திடம் இருந்து எதிர்ப்பார்க்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய குறித்த பள்ளிவாசலை தற்போதுள்ள இடத்திலிருந்து அகற்ற வேண்டுமென கூறினால் ஜனாதிபதியிடம் எதனைக் குறிப்பிடுவீர்கள்? என ஊடகவியலாளரொருவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ஹக்கீம் உறுமய கட்சிக்கு அவர்களின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு உரிமையுள்ளதாகவும் ஜனாதிபதி இந்த விடயத்தில் மிகவும் ஆழமாக சிந்தித்து புரிந்து கொண்டு செயற்படுவார் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment