Header Ads



மோட்டார் சைக்கிள் வாங்க யாழ்ப்பாணத்தில் முண்டியடிப்பு

வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்படுகிறது என்று அரசு அறிவித்ததையடுத்து, விலை அதிகரிப்பதற்கு இடையில் மோட்டார் சைக்கிள்களை வாங்கிவிட யாழ்ப்பாணத்தில் பலர் நேற்று முண்டியடித்தனர். மோட்டார் சைக்கிள் விற்பனைக் கடைகள் பலவற்றில் நேற்று வழமைக்கு மாறான கூட்டம் இருந்தது.

"வழமையான விற்பனையைப் போன்று 10 மடங்கு கேள்வி இன்று (02.04.2012) காணப்படுகின்றது. பழைய விலைக்கே வாங்கி விடுவதற்காக முண்டியடிக்கிறார்கள்'' என்று நகரின் பிரபல மோட்டார் சைக்கிள் விற்பனை முகவர் ஒருவர் தெரிவித்தார்.

" இப்போதைய நிலையில் ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக ஒரு மோட்டார் சைக்கிளைத் தான் எங்களால் வாகனம் என்று வைத்திருக்க முடியும். அதன் விலையும் இப்படி எக்கச்சக்கமாக அதிகரித்தால் என்ன செய்வது. அதுதான் விலைகூட முன்னம் ஒன்றை வாங்கி விடலாம் என்று வந்தோம்'' என்கிறார் ப.துஷிகரன். அரச ஊழியரான அவர் மனைவியுடன் கடைக்கு வந்திருந்தார்.

"நீண்ட காலமாக மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்றிருந்தோம். ஆனால் பண முடை காரணமாக அது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இப்போது விட்டால் இனி ஒருபோதும் வாங்க முடியாது போய்விடும் என்ற பயம் காரணமாக வந்திருக்கிறோம்'' என்றார் திருமதி துஷிகரன்.

இதேவேளை, யாழ். நகரில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றவர்கள் நேற்றுத் திருப்பி அனுப்பப்பட்டனர். விற்பனையை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு கொழும்பில் இருந்து தமக்கு உத்தரவிடப்பட்டதாக விற்பனைப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். " விலை கூடிய பின்னர் தங்களிடம் இருப்பவற்றையும் கூட்டி விற்பதற்காகவே இப்படிச் செய்திருப்பார்கள்'' என்று முணுமுணுத்தபடி சென்றதையும் காண முடிந்தது.

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரியை ஞாயிறு நள்ளிரவு முதல் அரசு திடீரென் அதிகரித்துள்ளது. இதனார் சாகுசு வாகனங்களின் விலைகள் மட்டுமன்றி மோட்டார் சைக்கிள்களின் விலைகளும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.