Header Ads



எங்கிருந்து அழுத்தம் வந்தாலும் எதிர்கொள்ள தயார் - ஜனாதிபதி மஹிந்த சபதம்

‘ஜெனீவா, நியூயோர்க் அல்லது வொஷிங்டன் எங்கிருந்து எந்த அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ள அரசாங்கம் முழுத் தகைமையுடன் இருக்கும் நிலையில், அரச உத்தியோகத்தர்களும், திணைக்களத் தலைவர்களும் நாட்டின் நல்லாட்சியை உறுதிப்படுத்தி சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயரை உயர்த்த செயற்படவேண்டும்’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற அரச உத்தியோகத்தர்கள், அரச கூட்டுத்தாபனத் தலைவர்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுடனான சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். ‘ஒரே நாடு’ எனும் அரசாங்கத்தின் கொள்கையை முன்கொண்டு செல்லும் நோக்கில் சர்வதேச ரீதியில் நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்கு முகம்கொடுத்தல் மற்றும் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதை முன்னிட்டு இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பல்வேறு திணைக்களங்கள் வருடாந்த அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை, கணக் காய்வாளர் திணைக்களத்தின் ஆலோசனைகளை அரச திணைக்களங்கள் பின்பற்றவில்லை என ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை உதாரணமாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த நிலைமை இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு என்ற பொதுவான பிம்பத்தைத் தோற்றுவிப்பதற்கான நிலைமைக்கு இட்டுச்செல்லும் என்றும் கூறியுள்ளார்.

மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கு வதற்கு அரசசேவைகளுக்காக அரசாங்கம் 130 மில்லியன் ரூபாய்களை செலவிடுகிறது. இதனை மனதில்கொண்டு அரச உத்தி யோகத்தர்கள் அனைவரும் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். நாடு தற்பொழுது எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்து அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டுக்கு எதிரான இந்த சவால் ஒன்றும் புதியதல்ல. நாட்டின் ஐக்கியத்தை அறிவித்த நாளிலிருந்து சவால்களுக்கு முகம்கொடுத்து அவற்றிலிருந்து வெற்றிபெறுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடனேயே உள்ளது.

இது சர்வதேச அழுத்தங்களுக்கு எதிராக ஒற்றுமையுடன் இருக்கின்றோம் என்ற செய்தியைக் கொடுக்கவேண்டும். எரி பொருள் விலை அதிகரிப்பு, சர்வதேச நிதி நெருக்கடியால் வங்கிகள் மூடப்படுதல் மற்றும் பயங்கரவாதத்தால் ஏற்பட்ட பாரிய அச்சுறுத்தல் போன்ற சவால்களுக்கும் முகம்கொடுக்கவேண்டி ஏற்பட்டது.

எமது அணிசேராக் கொள்கையின் மூலமே இந்த சாவல்களிலிருந்து எம்மால் வெற்றிபெற முடிந்தது. நாம் தொடர்ந்தும் அணிசேராக் கொள்கையில் நிலைத்திருப்பதுடன், எமது கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதையும் அறிவிக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார். இலங்கை புதிய சமூகத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த நிலையில் நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு அரச உத்தியோகத்தர்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கேட்டுக் கொண்டார்.

No comments

Powered by Blogger.