Header Ads



டெங்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது - 90 நாட்களில் 32 பேர் மரணம், 8594 பேர் பாதிப்பு

நாட்டில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 8 ஆயிரத்து 594 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நோய் தாக்கம் காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை மேல் மாகாணத்திலேயே டெங்கினால் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகமாக பதிவாகியுள்ளதாக தொற்று நோய் ஆய்வு பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதன்படி மூன்று மாத காலப்பகுதியில் டெங்கினால் கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 159 பேர் பீடிக்கப்பட்டிருந்ததோடு 12 உயிரிழப்பு சம்பவங்களும் கம்பஹா மாவட்டத்தில் ஆயிரத்து 641 பேர் பீடிக்கப்பட்டிருந்ததோடு 4 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதற்கு அடுத்தபடியாக கண்டி மாவட்டத்தில் 529 பேரில் 4 உயிரிழப்பு சம்பவங்களும் புத்தளம் மாவட்டத்தில் 279 பேரில் 3 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் 567 பேரும் காலி மாவட்டத்தில் 308 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 439 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 446 பேரும் யாழ்.மாவட்டத்தில் 164 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 388 பேரும் கேகாலை மாவட்டத்தில் 379 பேரும் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் இடையிடையே மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் நிலவுகின்றதாகவும் இதனால் டெங்கு நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக நுளம்புகள் பெருகாதவகையில் சுற்றுச்சூழலை வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.